‘சட்டக்கல்லூரி மாணவியைச் சீரழித்த 12 மிருகங்கள்’ என்ற தலைப்பில் வெளியிட்டிருந்த செய்தியைப் ..."/>மின்னம்பலம்: சட்டக்கல்லூரி மாணவிக்குப் பாலியல் துன்புறுத்தல்: நடந்தது என்ன? நடப்பது என்ன?
மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 25 மே 2020

சட்டக்கல்லூரி மாணவிக்குப் பாலியல் துன்புறுத்தல்: நடந்தது என்ன? நடப்பது என்ன?

 சட்டக்கல்லூரி மாணவிக்குப் பாலியல் துன்புறுத்தல்: நடந்தது என்ன? நடப்பது என்ன?

தர்மபுரி அருகே சட்டக்கல்லூரி மாணவி பாலியல் துன்புறுத்தலுக்குள்ளானது குறித்து நாம் கடந்த 16ஆம் தேதி ‘சட்டக்கல்லூரி மாணவியைச் சீரழித்த 12 மிருகங்கள்’ என்ற தலைப்பில் வெளியிட்டிருந்த செய்தியைப் பார்த்த காவல்துறையினர் அவசர அவசரமாக ஒரு பத்திரிகை அறிவிப்பை வெளியிடுகின்றனர். அதில், ‘கடந்த 8ஆம் தேதியன்று ஒரு பெண், தனது உடன்பிறந்த சகோதரியின் திருமண அழைப்பிதழைக் கொடுப்பதற்காக, தனது உறவினருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது தர்மபுரி பாரதியார் நகர் மற்றும் டான் போஸ்கோ கல்லூரிக்கு இடையில், ஐந்து பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அப்பெண்ணிடம் நகையைப் பறித்து சென்றதாகவும், அவர் கொடுத்த புகாரின்மீது, வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைக் கைது செய்ததாகவும், மேலும் இந்த வழக்கின் விசாரணை நிலையில் உள்ளதால் அந்தப் பெண்ணைப் பற்றி வெளிவரும் வதந்திகளை நம்ப வேண்டாம்’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், கடந்த 16ஆம் தேதி இதுகுறித்து தர்மபுரி மாவட்ட எஸ்.பி. பண்டித் கங்காதரர் நம்மிடம் கூறுகையில், “அந்த மாணவியும் அவரது நண்பரும் அந்த வனப்பகுதிக்குச் சென்றபோது, அந்தப் பகுதியில் போதையிலிருந்த ஒரு கும்பல், அப்பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்கள். அப்போது அந்தப்பகுதி மக்கள் அவர்களைப் பார்த்து விரட்டும்போதுதான், ஒருவன் பயந்து ஓடி கீழே விழுந்து இறந்துவிடுகிறான். அவ்வளவுதான். மற்றபடி, எதுவும் நடக்கவில்லை. இருந்தாலும், இந்த வழக்கைத் தீவிரமாக விசாரித்து வருகிறோம்” என்று கூறினார்.

சம்பவம் ஒன்று... ஆனால், வழக்கோ மூன்று

இந்தச் சம்பவம் குறித்து அதியமான்கோட்டைக் காவல்நிலையத்தில் 221/2017 174(b) iv crpc என்கிற குற்ற எண்களிலும், மணிகண்டன் கொலைச் செய்யப்பட்டதைச் சந்தேக மரணமாகவும் வழக்கைப் பதிவு செய்துள்ளனர். பின்னர் 302 ipc வழக்காக மாற்றி, வேளாங்கண்ணி, கிஷோர் என இருவரைக் கைது செய்துள்ளனர். மேலும், இதே காவல்நிலையத்தில் சகாயராஜ் கொடுத்த புகார்மீது பார்த்திபன், ஆனந்த், சூரி, சூர்யா, விமல் ஆகியோர்மீது 223/2017, பிரிவு 147, 148, 124, 307 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சகாயராஜுக்கும் மேற்கண்ட குற்றவாளிகளுக்கும் என்னதான் முன்விரோதம் என்று காவல்துறை வட்டாரங்களில் விசாரித்தோம், “வனப்பகுதியில் சட்டக்கல்லூரி மாணவியைப் பாலியல் துன்புறுத்தல் செய்வதைப் பார்த்த சிவராமன் என்பவன்தான் கிராம மக்களிடம் சொல்லிவிட்டான் என்று சிவராமனையும் அவரது தந்தை சகாயராஜயும் இந்தக் கும்பல் அடித்து துன்புறுத்தியுள்ளனர். எனவேதான் சகாயராஜ் அதியமான்கோட்டைக் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். மேலும் சட்டக்கல்லூரி மாணவி கொடுத்த புகாரின்பேரில் ஆனந்த், பார்த்திபன், சூரி, மணிகண்டன், சூர்யா, விமல் ஆகியோர்மீது 579/2017, 393/ ipc ஆகிய குற்ற எண்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மணிகண்டன் சம்பவ இடத்திலியே கூட்டாளிகளால் கொலை செய்யப்பட்டவிட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால், இவ்வளவு பெரிய கொடுமையும், கலவரமும் நடந்தபிறகும் குற்றவாளிகள் மீது பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்தததாகக் கூட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யவில்லை” என்று அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டாகக் கூறுகின்றனர்.

நம்முடைய செய்தியைப் பார்த்த தர்மபுரி மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் சுப்பிரமணியன், அப்பகுதியின் திமுக ஒன்றிய மற்றும் கிளை செயலாளர்களை அழைத்து விசாரித்துள்ளார். இதுகுறித்து தடங்கம் சுப்ரமணியம் நம்மிடம் கூறுகையில், “மின்னம்பலம் செய்தியைப் படித்தேன். பிறகு விசாரித்தேன். நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது. ஏதோ திரைப்படத்தில் நடப்பதுபோல நடந்துள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்கெட்டுள்ளது. வனப்பகுதியிலும் அதைச் சார்ந்த கிராமத்திலும் பெரும் கலவரமும், போராட்டமும் நடந்துள்ளது. அந்த மாணவியைத் துன்புறுத்த வேண்டாம் என்று கூறி தடுத்த குற்றவாளிகளில் ஒருவனை அடித்தே கொன்றுள்ளனர். லெப்ரசி காலனியைச் சேர்ந்த சிவராமன்தான் ஊரில் தகவல் கூறி ஆட்களை அழைத்து வந்துவிட்டான் என்று கூறி சிவராமனையும், அவரது தந்தை சகாயராஜ் மீதும் கொலை வெறித்தனமாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியைச் சந்தித்துவிட்டு வரச்சொல்லி நல்லம்பள்ளி ஒன்றியச் செயலாளர் சண்முகத்தை அனுப்பினேன். அப்போது அந்த மாணவி எதிர்கால வாழ்க்கையை நினைத்து பயந்த நிலையில் மிரண்டு போயிருந்ததாகவும், அவர் ஆறுதல் கூறி பேசியபோது, ‘ரொம்ப டார்ச்சர் செஞ்சாங்க. கழுத்துல இருந்த ஜெயினையும் புடுங்கிட்டு போய்ட்டாங்க’ என்று கூறிவிட்டு வீட்டுக்குள் நுழைந்துவிட்டதாகக் கூறினார்” என்று தெரிவித்தார்.

மேலும் நாம் சட்டக்கல்லூரி மாணவிக்கு நடந்த கொடுமையைக் காவல்துறையினர் மறைப்பதாக அரசியல்வாதிகள் குற்றம் சுமத்துகிறார்களே என்று தர்மபுரி காவல்துறை ஆய்வாளர் ரத்தினக் குமாரிடம் கூறினோம் அதற்கு அவர், “சம்பவம் ஊருக்கே தெரிகிறது. ஆனால், புகார் கொடுக்க யாருமில்லை. தர்மபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், இந்தச் சம்பவத்தின் குற்றவாளிகளைக் கண்டிப்பாக விடக் கூடாது. அவர்கள் கண்டிப்பாக தண்டனை அனுபவித்தே தீர வேண்டும் என்று கூறியுள்ளார். நானும் குற்றவாளிகளைத் தேடுவதுபோல, பாதிக்கப்பட்டவர்களைத் தேடி அலைந்தேன். ஒருவழியாக அந்த பெண்ணின் வண்டி எண்ணை வைத்து அவர் முகவரியைத் தேடிப்பிடித்து, அந்த பெண்ணிடம் புகார் கொடுங்கள் என்று கேட்டால், புகார் தர மறுக்கிறார்.

நீங்கள் ஒரு சட்டம் படிக்கும் பெண். நீங்களே இப்படி செய்தால், சாதாரணப் பெண்கள் என்ன செய்வார்கள் என்று கேட்டேன். அதன் பிறகே புகார் தருவதற்குச் சம்மதித்தார். சம்பவம் நடந்தது ஜூன் 8ஆம் தேதி, புகார் கொடுத்தது ஜூன் 11. அதன்பிறகு நான்கு குற்றவாளிகளைக் கைது செய்துள்ளோம். முக்கியமான குற்றவாளி புதுச்சேரியில் இருப்பது தெரியவந்துள்ளது. அவனையும் கூடிய விரைவில் கைது செய்து விடுவோம். இதுதான் நடந்தது. எனவே, தேவையில்லாமல் போலீஸ் மீது குறை கூறுவது தவறு” என்று தெரிவித்தார்.

பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றச் சம்பவங்களைத் தடுக்க, காவல்துறையில் புகார் கொடுக்க பெண்கள் தைரியமாக முன்வர வேண்டும். இல்லை என்றால் குற்றவாளிகள் உருவாகிக் கொண்டுதான் இருப்பார்கள். மேலும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் கயவர்களைத் தண்டிக்க கடுமையான சட்டங்களை கொண்டுவர வேண்டுமென்பதே பெண்கள் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon