மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 27 மே 2020

அமைச்சர்கள் தினகரனைச் சந்திப்பர்: தங்க.தமிழ்செல்வன்

அமைச்சர்கள் தினகரனைச் சந்திப்பர்: தங்க.தமிழ்செல்வன்

‘விரைவில் அமைச்சர்கள் அனைவரும் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரனைச் சந்தித்து ஆலோசனை நடத்துவர்’ என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. தங்க.தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கடந்த ஜூன் 2ஆம் தேதி ஜாமீனில் வெளிவந்த அதிமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன், தன்னை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்றும், தான் தொடர்ந்து கட்சிப் பணிகளில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்தார். மேலும் ஜூன் 5ஆம் தேதி சசிகலாவைச் சிறையில் சந்தித்தப் பிறகு செய்தியாளர்களிடம் பேசியவர், ‘இரு அணிகளையும் இணைக்க அமைச்சர்களுக்கு இரண்டு மாதம் அவகாசம் வழங்கப்படுகிறது. மேலும் என்னை சந்திக்க வரும் கட்சியினரைச் சந்திப்பேன்’ என்றும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பழனியப்பன், தோப்பு வெங்கடாச்சலம் உள்பட 34 எம்.எல்.ஏ-க்கள் இதுவரை தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மேலும் கடந்த ஜூன் 15ஆம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவும், அதிமுக-வினர் நடத்தும் இப்தார் விழாவும் தினகரன் தலைமையில் நடக்க வேண்டுமெனக் கோரிக்கை வைத்தனர். மேலும் தினகரனை முன்னிலைப்படுத்தினால் மட்டுமே குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவளிப்போம், தினகரனின் வழிகாட்டுதலின்படிதான் அதிமுக இயங்க வேண்டும் என்றும் முதல்வரிடம் வலியுறுத்தியதாகச் செய்திகள் வெளியாகின. இதனால் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு நெருக்கடி உண்டானது. ஆனால், அதிமுக-வின் சார்பில் வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ள இப்தார் விருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலேயே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் நேற்று ஜூன் 17ஆம் தேதி தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. தங்க. தமிழ்செல்வன், “நாங்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து ஆட்சியை நீங்கள் நடத்துங்கள், கட்சியை தினகரன் தலைமையில் நாங்கள் நடத்திக் கொள்கிறோம் என்ற கோரிக்கை விடுத்தோம். முதல்வரும் இதுகுறித்து பரிசீலனை செய்வதாக உறுதியளித்தார். அனைத்து அமைச்சர்களும் விரைவில் தினகரனைச் சந்தித்து ஆலோசனை நடத்துவர்.

மேலும் சசிகலாவின் முயற்சியால்தான் எடப்பாடி பழனிசாமி அரசு ஆட்சி செய்து வருகிறது. இல்லையென்றால் எடப்பாடி பழனிசாமி அரசின் ஆட்சியே இருந்திருக்காது” என்று தெரிவித்தார்.

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon