மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 9 ஜூலை 2020

கழிவுநீர் லாரிகளுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!

கழிவுநீர் லாரிகளுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!

சென்னை மாநகராட்சிப் பகுதியில் உள்ள நீர்வழிப் பாதைகளில் கழிவுநீரைக் கலக்கும் கழிவுநீர் லாரிகள் பறிமுதல் செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் நேற்று ஜூன் 17ஆம் தேதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் இன்று கழிவுநீர் கால்வாயாகத் துர்நாற்றத்துடன் ஓடிக்கொண்டிருக்கும் கூவம் ஆறு, நூறாண்டுகளுக்கு முன்பு சென்னையில் ஒரு நன்னீர் ஆறாகத்தான் ஓடிக்கொண்டிருந்தது. கூவம் ஆற்றில் மக்கள் படகுவழிப் போக்குவரத்து நடத்திய புகைப்படங்களும் கூவத்தின் கடந்துபோன வசந்த காலத்தை நினைவுபடுத்திக்கொண்டிருக்கின்றன. இப்போது கூவம் என்றாலே கழிவுநீர் என்னும் அடையாளமாக மாறிவிட்டது.

சென்னையின் மாநகரப் பகுதிகளில் பெய்யும் மழைநீர் வடிந்து செல்லும் வகையில் கூவம், அடையாறு என்ற இரண்டு ஆறுகளும், 32 கால்வாய்களும் உள்ளன. இதில் 31 கால்வாய்கள் மாநகராட்சி பராமரிப்பில் உள்ளன. சென்னையில் இந்தக் கால்வாய்கள் மட்டும் சுமார் 1660 கிமீ நீளத்துக்கு ஓடுகின்றன. காலப்போக்கில் சென்னையில் மக்கள்தொகை பெருக்கத்தாலும், தொழிற்சாலைகளின் பெருக்கத்தாலும் வெளியேற்றப்படும் அளவுக்கு அதிகமான கழிவுகள் கூவம், அடையாறு மற்றுமுள்ள அனைத்துக் கால்வாய்களிலும் கலக்கப்பட்டுக் கழிவுநீராக ஓடுகின்றன.

சென்னை மாநகரத்தின் நீர்வழிப் பாதைகளில் கழிவுநீர் விடப்படுவதைத் தடுக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுப்பதாகக் கூறிக்கொண்டாலும், மறுபக்கம், கண்டுகொள்ளாமலும் இருந்து வருகிறது. அதைவிட, சென்னையின் நீர்வழிப் பாதைகளில் கழிவுநீர் விடப்படுவதைத் தடுக்கவேண்டிய சென்னை மாநகராட்சி குடிநீர் வாரியமே கழிவுநீரைக் கலக்கவிட்டு, சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. சென்னை குடிநீர் வாரியத்தின் இந்தச் செயல் சென்னை மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இப்படி, சென்னையின் மாநகரின் நீர்வழிப் பாதைகளில் கழிவுநீர் லாரிகள் கழிவுநீரைத் திறந்துவிடுவதால், கால்வாய்களில் ஆகாயத் தாமரை செடிகள் வளர்ந்து கழிவு நீர் செல்வதையே தடுக்கின்றன. தேங்கும் கழிவுநீர்களில் உற்பத்தியாகும் கொசுக்கள் மூலம் பல்வேறு நோய்கள் பரவுகின்றன. இந்நிலையில், சென்னை மாநகரெங்கும் கொசுக்களை ஒழிக்கக் கொசு மருந்தும், புகை மருந்தும் 15 நாள்களுக்கு ஒருமுறை மாநகராட்சி நிர்வாகம் அடித்து வருகிறது. இருந்தும், சென்னை குடிநீர் வாரியத்தின் கழிவுநீர் லாரிகள் மற்றும் தனியார் கழிவுநீர் லாரிகள் நீர்வழிப் பாதைகளில் கழிவுநீரைக் கலக்கும் செயலைத் தொடர்ந்து செய்துவருகிறது.

தனியார் லாரிகள் மற்றும் சென்னை குடிநீர் வாரிய லாரிகளின் விதிமீறல்களால், இப்படி சென்னை மாநகரம் மாசடைவதோடும், மாநகராட்சிக்குக் கூடுதல் வேலைச்சுமையும் அதிகரிக்கிறது. ஏற்கெனவே, நிதி பற்றாக்குறையில் சிக்கியுள்ள சென்னை மாநகராட்சி, நீர்வழிப் பாதைகளில் விடப்படும் கழிவுநீரால் ஏற்படும் பாதிப்புகளைச் சரி செய்யப் போதிய நிதி ஒதுக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறது. இந்நிலையில், விதிகளை மீறி நீர்வழிப் பாதைகளில் கழிவுநீர் கலப்பவர்களுக்கு, பொதுச் சுகாதாரச் சட்டத்தின், 44-வது பிரிவின் கீழ்ச் சொற்பமான அபராதத்தையே மாநகராட்சி நிர்வாகத்தால் விதிக்க முடியும். ஆனால், அதற்கான வழக்கு நடைமுறைகள், கோப்புகளைத் தயாரிக்கவே அவர்களுக்குப் பல மணி நேரம் தேவைப்படுகிறது. இதனால், சென்னை மாநகராட்சி நிர்வாகமும், நீர்வழிப் பாதைகளில் கழிவுநீர் விடுவோர் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கி வருகிறது.

சென்னை மாநகரப் பகுதிகளில் உள்ள நீர்வழிப் பாதைகளில் கழிவுநீர் லாரிகள் விடும் கழிவுநீர் தொடர்பாகச் சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் நேற்று ‘தி இந்து’ நாளிதழிடம் கூறியதாவது: “சென்னையில் நீர்வழிப் பாதைகளில் கழிவுநீரை விட்டால், சம்பந்தப்பட்ட லாரியைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறேன். அந்த உத்தரவை முறையாகப் பின்பற்றுமாறு சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon