மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 21 செப் 2020

தூய்மையின் சின்னம் கக்கன் பிறந்த தினம்!

தூய்மையின் சின்னம் கக்கன் பிறந்த தினம்!

விடுதலைப் போராட்ட வீரரும், இந்தியாவின் தலைசிறந்த அரசியல்வாதியும், தமிழக முன்னாள் அமைச்சருமான பி.கக்கன் பிறந்த தினம் இன்று.

மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்தில் உள்ள தும்பைப்பட்டி என்ற கிராமத்தில் ஜூன் மாதம் 18ஆம் தேதி பிறந்தவர். தந்தை கிராமக் கோயில் பூசாரி. பல சிரமங்களுக்கு இடையே தொடக்கக் கல்வியை மேலூரில் பயின்றார். பின் பி.கே.என்.ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தார்.

மதுரை வைத்தியநாத ஐயர் இவரைத் தன் வளர்ப்பு மகனாக அரவணைத்துக் கொண்டார். மாணவப் பருவத்திலேயே காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்தார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றார்.

சிறையில் கசையடி உட்பட பல கொடுமைகளை அனுபவித்தார். 1946இல் அரசியல் அமைப்பு சட்டசபை தொடங்கப்பட்டது. இவர் அதன் உறுப்பினராகப் பொறுப்பேற்றார். நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக 1952 முதல் 1957 வரை பணியாற்றினார். காமராசர் முதல்வராக பொறுப்பேற்றபோது அவர் வகித்துவந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை ஏற்றார்.

1955ஆம் ஆண்டு ஆவடி அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டை சிறப்பாக நடத்தி நேரு அவர்களால் கக்கன்ஜி எனும் சிறப்பாக அழைக்கப்பட்டார். 1957ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் வெற்றி பெற்று சென்னை மாகாணத்தின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றது. பொதுப்பணித்துறை, ஹரிஜன நலவாழ்வு, பழங்குடியினர் நலத்துறை ஆகிய துறைகளின் அமைச்சராகப் பொறுப்பேற்றார். விவசாயத்துறை அமைச்சராகவும், மாநில உள்துறை அமைச்சராகவும் செயல்பட்டுள்ளார்.

இவர் அமைச்சராகப் பொறுப்பு வகித்த காலகட்டத்தில்தான் மேட்டூர், வைகை அணைகள் கட்டப்பட்டன. தாழ்த்தப்பட்டோர் நலத்துறையின்கீழ் ஆயிரக்கணக்கான பள்ளிகளைத் திறந்தார். அவர்களுக்கென வீட்டு வசதி வாரியம் அமைத்தார்.

காவல்துறையில் காவலர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியது, லஞ்ச ஒழிப்புத்துறையைத் தொடங்கியது, கூட்டுறவு விற்பனைக் கூடங்களைத் தொடங்கி வைத்தது உட்பட ஏராளமான நலத் திட்டங்களை செயல்படுத்தினார்.

கக்கனை அரசியலுக்கு அறிமுகம் செய்துவைத்தவர் வைத்தியநாதய்யர். வைத்தியநாதய்யரின் குழந்தைகளோடு கக்கனும் மொட்டையடித்து கொள்ளிவைக்க தயாரானார். இதைக்கண்ட ஐயரின் உறவினர்கள் எதிர்த்தனர். ஆனால் கக்கனோ ‘இன்று நான் போட்டிருக்கும் கதராடை, இந்த உடல், இந்த பதவி எல்லாமே ஐயர் எனக்குத் தந்தது. நான் இன்றைக்கு மனிதனாக மதிக்கப்படுவதே அவர் காட்டிய மனிதநேயம்தான். அத்தகைய ஐயருக்கு நான் இறுதி சடங்கு செய்யவில்லையென்றால் நான் உயிரோடு இருப்பதில் அர்த்தமில்லை’ என்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர், 10 ஆண்டுகள் மாநில முக்கியத்துறைகளின் அமைச்சர் என பொறுப்புகள் வகித்தபோதும் தனக்கென்று சல்லிகாசுகூட சம்பாதிக்காமல் நேர்மையின் வடிவமாகத் திகழ்ந்தவர்.

1973-ல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். விடுதலைப்போராட்டத் தியாகத்துக்காக அவருக்கு வழங்கப்பட்ட நிலத்தை வினோபாவின் பூமிதான இயக்கத்துக்கு அளித்துவிட்டார். முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அங்கு பணம்செலுத்த முடியாததால், மதுரை அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். அன்றைய முதலமைச்சரான எம்.ஜி.ஆர். அப்போது மதுரை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்தார். கக்கன் மருத்துவமனயில் இருக்கும் செய்தியைக் கேள்வியுற்று அவரைச் சந்திக்க விரும்பினார். முன்னறிவிப்பின்றிக் கக்கனை பார்த்து நலன் விசாரிக்க மதுரை அரசு மருத்துவமனைக்குச் சென்றார். ஆஸ்பத்திரியில் சாதாரண வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார் கக்கன்.

‘விசேஷ வார்டுக்கு மாற்றச் சொல்லவா?’ எனக் கேட்டார் எம்.ஜி.ஆர். ‘வேண்டாம்’ என மறுத்துவிட்டார் கக்கன். ஆனாலும், எம்ஜிஆர் மனம்பொறுக்காமல், மருத்துவமனையின் பொறுப்பாளரை அழைத்தார், ‘இவர் யார் என்று தெரியுமா? இவரது உழைப்பால் பெற்ற சுதந்திரத்தால் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவரை இதுமாதிரி பொதுமக்களோடு மக்களாக நடத்த உங்களுக்கு எப்படி மனம் வந்தது?’ என்று கேட்டதோடு நில்லாமல் தனியறை வசதியும் உயர்தர மருத்துவமும் கிடைக்க அப்போதே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பொது வாழ்வில் இருப்பவர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு சிறந்த முன்னுதாரணமாக திகழ்ந்த கக்கன் 1981ஆம் ஆண்டு 73ஆம் வயதில் காலமானார். அவரின் நினைவைப் போற்றுவோம்.

- வீரசோழன் க.சோ.திருமாவளவன்

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon