மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 8 ஆக 2020

சண்டே சக்சஸ் ஸ்டோரி: சாம்சங் நிறுவனர் - லீ பியங் சுல்

சண்டே சக்சஸ் ஸ்டோரி: சாம்சங் நிறுவனர் - லீ பியங் சுல்

லீ பியங் சுல் - இந்தப் பெயர் நம்மில் எத்தனைப் பேருக்கு தெரியும்? பலர் கேள்விப்பட்டிருக்கக்கூட மாட்டோம் பிரபலமாகப் பெயர் தெரியாத இவர் தொடங்கிய நிறுவனம் இன்று உலகம் முழுவதும் மிகப் பிரபலம். தென்கொரிய நாட்டைச் சேர்ந்த இவர் தொடங்கிய நிறுவனம்தான் ‘சாம்சங்’. வீட்டு உபயோகப் பொருள்கள் தொடங்கி கைப்பேசி வரை சாம்சங் நிறுவனத்தின் தயாரிப்புகள் மிகப் பிரபலமானவை. உலகம் முழுவதும் இந்த நிறுவனம் செல்லக் காரணமாய் இருந்த இதன் நிறுவனர் லீ பியங் சுல் குறித்து இந்த வார சக்சஸ் ஸ்டோரியில் காண்போம்.

லீ பியங் சுல், 1910ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கொரியாவில் பிறந்தார். இவர் குடும்பம் பணக்கார, பெரும் நிலம் வைத்திருக்கும் குடும்பமாகத் திகழ்ந்தது. கல்லூரிப் படிப்பை ஜப்பானில் உள்ள வாசிடா பல்கலைக்கழகத்தில் பயின்றார். ஆனால், கல்லூரிப் படிப்பை முழுமையாக முடிக்கவில்லை. பாதியிலேயே நின்றுவிட்டார்.

இவர் முதன்முதலாக 1938ஆம் ஆண்டு மே மாதம் ஒன்றாம் தேதி சிறிய வர்த்தக நிறுவனம் தொடங்கி நடத்தினார். அந்த நிறுவனத்துக்கு வைக்கப்பட்டப் பெயர்தான் ‘சாம்சங்’. அந்த நிறுவனத்தின் முழுப்பெயர் சாம்சங் டிரேடிங் கார்ப்பரேஷன். சாம்சங் என்றால் மூன்று விண்மீன்கள் என்று பொருள்படும். 1947ஆம் ஆண்டிலிருந்து இந்த நிறுவனம் சியோலிலிருந்து இயங்கத் தொடங்கியது. அந்தச் சூழலில்தான் 1950ஆம் ஆண்டு கொரியப்போர் தொடங்கியது. வட கொரிய ராணுவம் போரில் சியோலைக் கைப்பற்றியது.

இதையடுத்து லீ, புசான் நகருக்குத் தொழிலை மாற்ற வேண்டிய நெருக்கடிக்குள்ளானார். ஆனாலும் லீ சோர்வடையாமல் அமெரிக்காவுக்கு ட்ரூப்ஸ் & எக்யூப்மென்ட்ஸ் ஏற்றுமதி செய்தார். இதனால் லீயின் வர்த்தக நிறுவனம் நல்ல லாபம் தந்தது. தொடங்கப்பட்ட 30 வருடத்தில், அதாவது 1970ஆம் ஆண்டுவாக்கில் சாம்சங் பல துறைகளில் கால்பதித்து விட்டது. குறிப்பாக உணவு பதப்படுத்தல், ஆடைத் தயாரிப்பு, காப்பீடு, பாதுகாப்பு மற்றும் சில்லறை வர்த்தகம் என பல துறைகளில் ஈடுபட்டது. 1960ஆம் ஆண்டுக்குப் பின்புதான் மின்னணுத் துறையிலும் இறங்கியது. இன்று சாம்சங்கின் மின்னணு தயாரிப்பு பொருள்கள் உலகம் முழுவதும் நம்பிக்கைக்குரியவையாகத் திகழ்கின்றன.

இன்று சாம்சங் நிறுவனத்தின் வர்த்தகம் உலகம் முழுவதும் பரவி நிறைந்துள்ளது. தற்போது தனித்தனியாக நான்கு துறைகளில் சாம்சங் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. மின்னணு துறைகளில் சாம்சங் என்ற பெயரிலும், சில்லறை வர்த்தகத் தொழிலில் சின்ஷேகே (1955இல் தொடங்கப்பட்டது) என்ற பெயரிலும், காகித தயாரிப்பு, பயோ டெக்னாலாஜி, கெமிக்கல் துறைகளில் ஹேன்சால் (1965இல் துவங்கப்பட்டது) என்ற பெயரிலும், மற்ற துறைகள் யாவும் சி.ஜே குரூப்ஸ் என்ற பெயரிலும் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனம் மின்னணு தயாரிப்புகள் மூலமாகத்தான் அதிக வருவாய் ஈட்டி வருகிறது. தென் கொரியாவின் வெற்றிகரமான தொழில் முன்னோடியாகத் திகழ்ந்த லீ, 1987ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் நாள் தனது 77ஆவது வயதில் முடிவெய்தினார்.

முதன்முதலில் சிறிய வர்த்தகத் தொழிலை தொடங்கும்போது 40 பேரைக் கொண்டு சிறிய நிறுவனமாகத் தொடங்கப்பட்ட சாம்சங் நிறுவனம், 1970-களில் தென் கொரியாவின் முக்கிய தொழில்துறை சக்தியாக விளங்கும் அளவுக்கு முன்னேற்றம் கண்டது. தென் கொரிய அரசு பல நேரங்களில் சாம்சங் நிறுவனத்துக்கு ஆதரவு கொடுத்தது. இந்த நிறுவனத்தின் வருவாயும் பலமடங்கு அதிகரித்தது. லீ பியங் சுல்லின் திறமை, அவரது நிர்வாக ஆற்றலால் சாம்சங் சர்வதேச நிறுவனமாக மாறியது. லீக்குப் பின்பு வந்தவர்களும் அதே திறமையோடு செயல்பட்டதால் இன்றளவிலும் சாம்சங் சர்வதேச அளவில் தன்னுடைய இடத்தை இழக்காமல் தக்கவைத்து வருகிறது. மின்னணுத் துறையில் குறிப்பாக ஸ்மார்ட்போன் துறையில் இருக்கும் கடுமையான போட்டிகளுக்கு இடையில் இந்நிறுவனம் காலத்துக்கேற்ற மாற்றங்களைக் கொண்டுவந்து சர்வதேச சந்தையில் தன்னுடைய நிலையைத் தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகிறது.

இதுவரை 800 மில்லியன் மொபைல்களை இந்நிறுவனம் விற்றுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஆண்டு 16.5 பில்லியன் டாலர்களாகும். கிட்டத்தட்ட 5,00,000 பேர் வரை தற்போது இந்நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். உலகளவில் அதிக விற்பனை செய்யும் நிறுவனங்களில் சாம்சங் நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 216 பில்லியன் டாலர்களாகும்.

- பிரகாசு

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon