மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 6 ஆக 2020

நிராகரிக்கப்பட்ட கருணை மனுக்கள்!

நிராகரிக்கப்பட்ட கருணை மனுக்கள்!

பதவிக்காலம் முடிவதற்கு இன்னும் ஏறத்தாழ ஒரு மாதமே இருக்கும் நிலையில் கடந்த மாதம் பிரணாப் முகர்ஜி இரண்டு கருணை மனுக்களை நிராகரித்திருக்கிறார் என்ற தகவலை டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகை வெளியிட்டுள்ளது.

நிராகரிக்கப்பட்ட இரு கருணை மனுக்களுமே பாலியல் வல்லுறவு மற்றும் கொலைக் குற்றவாளிகளால் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டவை.

2௦12ஆம் ஆண்டு மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் நான்கு வயது பெண் குழந்தையை மூன்று பேர் சேர்ந்து பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கி அந்த குழந்தையைக் கொன்றனர்.

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இளம் பெண்ணை கேப் டிரைவரும் அவனது கூட்டாளிகளும் சேர்ந்து பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்தனர்.

இந்தக் கொடுங்குற்றவாளிகளின் கருணை மனுக்களைதான் நிராகரித்திருக்கிறார் குடியரசுத் தலைவர்.

அரசியல் சட்டத்தின் 72ஆம் பிரிவின்படி இந்திய குடியரசுத் தலைவருக்கு மரண தண்டனை பெற்ற குற்றவாளிகளின் கருணை மனுக்களைப் பரிசீலித்து மரண தண்டனையை நிறுத்தி வைக்கவோ, குறைக்கவோ அதிகாரம் உண்டு. ஆனாலும், இதற்கு மத்திய அமைச்சரவையின் முடிவும், உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையும் வேண்டும் என்கிறது சட்டம்.

இதுவரை இருந்த குடியரசுத் தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையில் கருணை மனுக்களை அணுகியிருக்கிறார்கள்.

அப்துல்கலாம் குடியரசுத் தலைவராக இருந்தபோது தனக்கு அனுப்பப்பட்ட 24 கருணை மனுக்களில் இரண்டின் மீது மட்டுமே முடிவெடுத்தார். அவருக்கு முன்பு பதவி வகித்த கே.ஆர். நாராயணனோ தனது பதவிக்காலத்தில் ஒரு கருணை மனு மீது கூட முடிவெடுக்கவில்லை.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி இந்திய அரசு கொடுத்துள்ள தகவலில் 1991ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பதவி வகித்த குடியரசுத் தலைவர்களால் 77 கருணை மனுக்கள் மீது முடிவெடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் 69 கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இதுவரை பதவி வகித்த குடியரசுத் தலைவர்களிலேயே 44 கருணை மனுக்களை நிராகரித்து அதிக கருணை மனுக்களை நிராகரித்த குடியரசுத் தலைவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.வெங்கட்ராமன்.

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon