மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 30 மே 2020

நிகழ்களம்: திருக்குறள் தங்கவேலனார் - படிக்காத மேதையின் கதை!

நிகழ்களம்: திருக்குறள் தங்கவேலனார் - படிக்காத மேதையின் கதை!

நேற்று நான் நிகழ்களம் காண தஞ்சை மாவட்டத்தின் கடைகோடியில் இருக்கும் ஹூப்ளிக்காடு என்ற கிராமத்துக்குச் சென்றேன். இந்தச் சிறிய கிராமம் தங்கவேலனார் என்ற மாமனிதரால் புகழ்பெற்றுள்ளது. ஒரு சிறிய கிராமத்தில் இருந்து கொண்டு இவர் தமிழுக்குச் செய்யும் தொண்டு அளப்பரியது. தங்கவேலனார் வாய் திறந்தால் திருக்குறள் தேனருவி போல் கொட்டும். நான் சாலமன் பாப்பையாவிடமும் அமர்ந்து திருக்குறள் குறித்து பலமணி நேரம் பேசியிருக்கிறேன். ஆனால் தங்கவேலனாரின் பார்வை முற்றிலும் புதிய கோணத்தில் இருக்கும். இதுதான் இவருடைய தனிச்சிறப்பு என்பது என் எண்ணம்.

தங்கவேலனார் அய்யாவை எனக்கு கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே தெரியும். என்னால் முடிந்தபோதெல்லாம் அவரை நான் சந்திப்பேன். மீண்டும் அவரைச் சந்தித்து பேச ஹூப்ளிகாடு கிராமத்துக்கு விரைந்தேன். பேராவூரணியில் இருந்து அறந்தாங்கி செல்லும் வழியில் பயணித்தால் ஹூப்ளிக்காடு கிராமத்தை அடையலாம். நான் தங்கவேலனார் இல்லத்துக்குச் சென்றபோது ஏதோ வேலையில் தீவிரமாக இருந்தார். தங்கவேலனார் ஓய்வறியாதவர். என்னைக் கண்டதும் இன்முகத்தோடு வரவேற்றார்.

“சொல்லுங்க பார்த்து ரொம்ப நாளாச்சு… பணியெல்லாம் எப்படிப் போகுது. குழந்தைகள் படிப்பு எப்படி இருக்கு?” என்று உற்சாகத்தோடு பேசத் தொடங்கினார்.

படிப்பு என்றதும்தான் எனக்கு நினைவுக்கு வருகிறது. கல்வி என்ற சொல்லுக்கு முழுப் பொருளை உணர்ந்துகொள்ள வேண்டுமானால் நீங்கள் தங்கவேலனாரைச் சந்திக்க வேண்டும். கல்வி என்பது பொதி மூட்டை போல் புத்தகப் பையைச் சுமந்து பள்ளிக்கூடத்துக்குச் செல்வதல்ல. கல்வி என்பது முதல் மதிப்பெண் பெற பந்தயக் குதிரை போல் ஓடுவது அல்ல. கல்வி என்பது பொருளீட்டும் நோக்கத்தோடு உயிரைப் பணயம் வைப்பதல்ல.

கல்வி என்பது பேரறிவு, கல்வி என்பது பேரின்பம், கல்வி என்பது உலகை உள்ளங்கைக்குள் கொண்டுவரும் பேராற்றல் என்பதை இந்த உலகுக்குத் தன் வாழ்வின்மூலம் உரக்கச் சொல்லிக்கொண்டிருக்கிறார் இந்த சாதனை மனிதர் தங்கவேலனார். அப்படி என்ன சாதனை என்று கேட்கிறீர்களா?

திருக்குறளிலும், தமிழ் இலக்கியத்திலும் பெரும் பாண்டித்யம் பெற்ற இந்த மனிதர் பள்ளிக்கூடத்துக்கே சென்றதில்லை. ஏன் சென்றதில்லை என்று நீங்கள் கேட்டால், அதற்கும் ஒரு உன்னதமான காரணம் இருக்கிறது. அதை தங்கவேலனாரின் மொழியிலேயே உங்களுக்குத் தருகிறேன்.

“என்னுடைய பள்ளிப் பருவம், ராஜாஜியின் குலக்கல்வி திட்டம் அமலில் இருந்த காலம். பேராவூரணியில் நடந்த ஒரு ஊடகவிழாவிலே நான் பேசுகிறபோது, ‘நான் பள்ளிக்கூடமே சென்றதில்லை. ஆனால் நான் படிக்காத புத்தகமில்லை’ என்று மேடையில் கூறினேன். அந்த வார்த்தை அகந்தையின் வெளிப்பாடல்ல. நம்பிக்கையின் வெளிப்பாடு. என் காலத்துக்குள் உலகில் உள்ள அத்தனை புத்தகங்களையும் வாசித்துவிடுவேன் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு. சாதியம் இந்த உலகத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் குலக்கல்வியை ராஜாஜி அறிமுகப்படுத்தினார் என்பது உலகறிந்த உண்மை. கல்வியை முழு நேரத் தொழிலாகக் கொண்டவர்கள் அல்லது பிராமணர்கள் வாழும் இடத்தில்தான் அப்போது முழு நேரப் பள்ளிக் கூடம் இயங்கும். 93 சதவிகித மக்கள் வாழ்ந்த பகுதியில் பகுதி நேரப் பள்ளிக்கூடமே இருந்தது. நீதிக்கட்சி வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் நீங்கள் இதைப் புரிந்து கொள்ளலாம். எங்கள் ஊரிலும் அரை நேரப்பள்ளிதான் இருந்தது. எங்கள் சொந்த ஊர் குலமங்கலம். கம்யூனிஸமும் மார்க்சியமும் தழைத்தோங்கிய ஊர். ஆகவே ‘வைத்தால் முழுநேரப் பள்ளிக்கூடம் வை. இல்லை, கதவை சாத்திவிட்டுப் போ’ என்று நாங்களே பள்ளிக்கூடத்தை மூடினோம். அப்போது எனக்கு பத்து வயதுக்குள்தான் இருக்கும். ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்துக்கு என் பள்ளிப்படிப்பு பலியானது. நான் பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பை இழந்தேனே தவிர, கற்றறிந்த அறிஞர் பெருமக்களோடு நெருங்கிப் பழகும் அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. கட்சிப் பணிக்காகவும் தமிழ்ப் பணிக்காகவும் எங்கள் ஊர் என்னைப் பயன்படுத்திக்கொண்டது. எங்கள் ஊரில் பாவலர் வரதராஜனும், இளையராஜாவும் மாதக்கணக்கில் தங்கியிருந்து எங்களோடு வாழ்ந்திருக்கிறார்கள். எங்களோடு கூழ் குடித்திருக்கிறார்கள். கூலி உயர்வு சட்டத்துக்காகப் போராட்டம் நடத்தியிருக்கிறோம். நிலச் சீர்திருத்தச் சட்டத்துக்காகப் போராடியிருக்கிறோம்.

கடைசியாக குன்றக்குடி அடிகளாரை நான் ஒருநாள் சந்தித்தபோது அவர் என் மீது கோபப்பட்டார். ‘நீ செய்வதெல்லாம் சரிதான். ஆனால் நீ கல்வியை கைவிடலாமா?’ என்று கூறி என்னை கொத்தமங்கலம் நூல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். படிக்காத ஒருவன்தான் தமிழ் இலக்கியங்களை தொகுத்திருக்கிறான் பார் என்று குமரகுருபரர் நூலை என்னிடம் எடுத்துக்கொடுத்தார். இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகுதான் குன்றக்குடி அடிகளார் ஆன்மிகத்துக்குள் நுழைந்திருக்கிறார். தொடர்ச்சியாக நான் புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினேன். அதன்பிறகு தஞ்சை என்சிபிஹெச் புத்தக விற்பனையாளராக பணிக்குச் சேர்ந்தேன். நான் அந்தப் புத்தங்களை மட்டுமில்லாமல் எல்லாவிதமான புத்தகங்களையும் எடுத்துக்கொண்டு ஆலய திருவிழாக்களுக்குச் சென்று விற்பனை செய்வேன். ஒரு புத்தகத்தை ஒருவன் வாங்க வேண்டுமென்றால் அதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டு வாங்க வேண்டும். ஆகவே அதை அவனுக்கு விளக்கிச் சொல்ல வேண்டும் என்பது என் விருப்பம். ஆகவே அனைத்துப் புத்தகங்களையும் வாசித்தேன். இன்றைய கல்விச்சாலைகள் கொடுக்காத அறிவை எனக்கு அந்தப் புத்தகங்கள் கொடுத்தன. மார்க்சிய சிந்தனையாளர்கள் தலைக்கு விலைபேசப்பட்ட காலம் அது. ஜீவா, குன்றக்குடியடிகளார் போன்றவரெல்லாம் மார்க்சியத்துக்கு இணையான நூலே உலகத்தில் இல்லை என்பதை எங்கள் மனதிலே பதிய வைத்திருந்தார்கள். வேறு யார் எதைச் சொன்னாலும் நாங்கள் அதை நம்புவதில்லை. காதுகொடுத்தும் கேட்பதில்லை.

இந்நிலையில்தான் திருக்குறள் என் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது.

சொல்லப் பயன்படுவர் மேலோர் கரும்புபோல்

கொல்லப் பயன்படுவோர் கீழ்

இந்தத் திருக்குறளின் பொருள் என்னவென்றால், ‘ஒரு கரும்பு என்னிடத்தில் எவ்வளவு இனிமையாக சாறு இருக்கு இந்தான்னு கொடுக்குமா? கொடுக்காது. அடிச்சு பிழிஞ்சா தன்னால சாறு வரும். அதாவது, சான்றாண்மை மிக்க மேலோர், ஒருவர் இல்லை என்று வாய் திறந்த மாத்திரத்தில் அள்ளிக்கொடுப்பார்கள். கீழோராம் கயவர்களோ, கரும்பை ஆலையில் கொடுத்துப் பிழிந்து சக்கை வேறு சாறு வேறாக ஆக்குவதுபோல் செய்தாலே, கொஞ்சமாவது பயன்படுவர்’.

இந்தக் குறளுக்குள் மிகப் பெரிய புரட்சி அடங்கியிருக்கிறது என்பதை ஜீவாவும், குன்றக்குடி அடிகளாரும் சொல்லத் தவறிவிட்டார்கள்.

இதே பொருளைத் தரக் கூடிய இன்னொரு குறள் இருக்கிறது.

ஈங்கை விதிரால் கயவர் கொடிருடைக்கும்

கூன்கைய ரல்லாதவர்க்கு

என்ன பொருள் தெரியுமா? எச்சிக்கையில காக்கா ஓட்டாதவன்கிட்ட போய், அய்யா பசிக்குதுன்னு கேட்டா சோறு கொடுப்பானா? கையை மடக்கி ஓங்கி ஒரு குத்து குத்தினா, இந்தாருக்கு எல்லா சாப்பாட்டையும் எடுத்துக்கோன்னு கொடுத்துருவான்.

இது புரட்சி இல்லையா? இது மாற்றம் இல்லையா? இது வீரம் இல்லையா?

மார்க்சியத்தை விடாம கட்டிப்பிடிச்சுக்கிட்டு இருந்த காலத்தில் நான் திருக்குறளைப் புரிந்துகொள்ள ஒருநாள் வந்தது. எங்கள் ஊரில் ஒரு பட்டிமன்றம் நடந்தது. உலக அரங்கில் மாற்றத்தைக் கொண்டு வரும் ஆற்றல் படைத்தது மார்க்சியமா? வள்ளுவமா? காந்தியமா? என்பது தலைப்பு.

எம்.எஸ். நாடார் தலைமை தாங்கினார். தா.பாண்டியன் மார்க்சியமே என்ற அணியிலே பேசினார். அறந்தை நாராயணன் வள்ளுவமே என்று பேசினார். ஒரு தலைமை ஆசிரியர் காந்தியமே என்று பேசினார். வள்ளுவமே என்ற தலைப்பில் பேசிய அறந்தை நாராயணன், ‘இந்த உலகத்தை மாற்றக்கூடிய மாபெரும் தகுதியும் ஆற்றலும், திருக்குறளுக்குத்தான் இருக்கிறது. புரட்சி என்றால், அது ஓங்குக என்று மட்டுமே சொல்லிக்கொண்டிருந்த நாம், புரட்சி என்றால் எதுவென்று தெரியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறோம். எது தெரியுமா புரட்சி. தமிழனும் தமிழும் அந்தத் தமிழில் தலையாயதாக இருக்கக்கூடிய திருக்குறளில்தான் புரட்சி தரக்கூடிய தகுதி மிக்க, அதற்கான உள்ளடக்கமும் ஆற்றலும் இருக்கிறது’ என்று அவர் பேசினார். அதற்குப் பிறகு நான் திருக்குறளை எடுத்து முழுமையாக ஆய்வு செய்யத் தொடங்கினேன். இந்த உலகத்தை மாற்றக்கூடிய வல்லமை மார்க்சியத்தைவிட, திருக்குறளுக்கு இருக்கிறது என்று சொன்னால் அவர்களைக் காயப்படுத்துவதாக இருக்கும். ஆகவே மார்க்சியத்துக்கு நிகரானது திருக்குறள் என்ற முடிவுக்கு வந்தேன். காந்தியத்துக்கு நிகராக திருக்குறள் இருக்கிறது.. காந்தியத்தையும் மார்க்சியத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அதன் அத்தனை தத்துவங்களும் வள்ளுவத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படும் அளவுக்கு கருத்துகள் ஒத்திருக்கின்றன. ஆகவே உலக அரங்கில் முதல் நிலை நூலாக இருக்க வேண்டியது திருக்குறள் என்ற முடிவிற்கு வந்தேன்” என்று அடை மழைபோல் கொட்டித் தீர்த்தார் தங்கவேலனார்.

திருக்குறளைப் பற்றி அவர் பேசத் தொடங்கினால், நாம் மதி மயங்கி கிடைக்க வேண்டியதுதான். அவர் நிறுத்தவும் மாட்டார். நம்மால் நிறுத்தச் சொல்லவும் முடியாது. தங்கவேலனாரைப் பற்றி தெரிந்து கொள்வதைவிட தங்கவேலனார் திருக்குறளைப் பற்றி என்ன சொல்கிறார் என்பதுதான் முக்கியம் என்று அவர் விரும்புகிறார். அவர் கருத்துகளை என்னால் ஒரு பதிவுக்குள் அடக்க முடியாது எனக்கு முன்பே தெரியும். நான் அடக்க விரும்பவும் இல்லை. காலத்தால் கனிந்த அற்புதம் தங்கவேலனார். அவரிடம் இருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது ஏராளம். எனவே இந்த இடத்தில் நான் நிறுத்திக்கொள்கிறேன். நாளை தொடர்கிறேன்.

- வேட்டை பெருமாள்

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon