மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 8 ஆக 2020

முதல்வர் வீட்டை முற்றுகையிட முயன்ற 2,000 பேர் கைது!

முதல்வர் வீட்டை முற்றுகையிட முயன்ற 2,000 பேர் கைது!

ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு மெரினாவில் நினைவேந்தல் நடத்தியதற்காக மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் மீது குண்டர் சட்டம் ஏவப்பட்டுள்ளது. இதைக் கண்டித்தும், அவர்களை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தியும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீடு முற்றுகைப் போராட்டம் நேற்று (17-6-2017) சனி அன்று தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்பட்டது.

சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகிலிருந்து பேரணியாக முதல்வரின் வீடு நோக்கி செல்ல முயன்ற போராட்டக்கார்கள் சுமார் 2,000 பேரை போலீஸார் கைது செய்தனர். ‘மத்திய பாஜக அரசின் கட்டளைக்கு இணங்கும் எடப்பாடி பழனிசாமி அரசைக் கண்டிக்கிறோம்’ என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல் சமது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் வன்னி அரசு, SDPI (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா) கட்சியின் மாநிலத் தலைவர் தெகலான் பாகவி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன் உள்ளிட்ட எண்ணற்ற அமைப்பினர் கலந்து கொண்டனர்.

சனிக்கிழமை மாலை நடந்த இந்தப் போராட்டம் சென்னையை உலுக்கிவிட்டது.

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon