மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 27 மே 2020

அதிகாரிகளால் 450 கோடி வீணாகியது: முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு!

அதிகாரிகளால் 450 கோடி வீணாகியது: முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு!

கூட்டுறவு வங்கிகளில் ரூ.450 கோடி அளவுக்குப் பழைய ரூபாய் நோட்டுகள் மாற்ற முடியாமல் தேக்கமடைந்துள்ளதாக திமுக முன்னாள் அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

‘தமிழக கூட்டுறவு வங்கி அதிகாரிகளின் மெத்தன நடவடிக்கையால் 450 கோடி பணம் வீணாகப் போயுள்ளது’ என்று முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஜூன் 17ஆம் தேதி திருவண்ணாமலையில் செய்தியாளரிடம் கூறியதாவது: “மத்திய அரசு ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று கடந்தாண்டு நவம்பர் மாதம் அறிவித்தது. அதையடுத்து, தேசிய உடைமையாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் அனைத்தும், தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை உடனடியாக ரிசர்வ் வங்கியில் செலுத்தி புதிய ரூபாய் நோட்டுகளைப் பெற்றுக்கொண்டது.

ஆனால், தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் தங்கள் வசமிருந்த இந்தச் செல்லாத நோட்டுகளை மாற்றுவதற்கு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக, கூட்டுறவு வங்கிகளில் சுமார் ரூ.450 கோடி பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் தேக்கமடைந்துள்ளது. இதை நபார்டு வங்கி கண்டுபிடித்து அறிவித்துள்ளது. அந்த நோட்டுகள் அனைத்தும் கூட்டுறவு வங்கியில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகள் மற்றும் நபார்டு வங்கி அளித்த பணமாகும். மக்கள் பணம்தான் வீணாகியுள்ளது.

செல்லாத பணத்தை கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ஏன் மாற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. இல்லை, கூட்டுறவுத்துறை அமைச்சர் மக்களின் பணத்தை மாற்றுவதற்கு ஏதாவது முயற்சி செய்தாரா? அவர் என்ன நடவடிக்கை எடுத்தார்? அணைகளில் இருக்கும் தண்ணீர் ஆவியாகச் செல்வது இயற்கை. அதை தெர்மோகூல் போட்டு மறைக்கிறேன் என்று கூறி லட்சக்கணக்கான மக்கள் பணத்தை வாரியிறைத்து வீணடித்துள்ளார். அவரது சொந்த காசு என்றால் அப்படிச் செய்வாரா?

இந்நிலையில், நபார்டு வங்கியிடம் பேசி செல்லாத பணத்தை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுகின்றனர். கடன் கொடுப்பது மட்டும்தான் நபார்டு வங்கியின் வேலை. பணத்தை மாற்றுவதற்கும், நபார்டு வங்கிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ரிசர்வ் வங்கிதான் பணத்தை மாற்றும். மேலும், மத்திய அரசு கொடுத்த காலக்கெடு முற்றிலுமாக முடிந்த நிலையில் கூட்டுறவு அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் பொதுமக்களின் பணம் வீணாகியுள்ளது. உரிய காலத்துக்குள் பணத்தை மாற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தேங்கியுள்ள சுமார் ரூ.450 கோடி பணத்துக்குத் தீர்வுகாண தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon