மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 27 மே 2020

இயற்கை உணவு விற்பனையகத்தை வாங்கும் அமேசான்!

இயற்கை உணவு விற்பனையகத்தை வாங்கும் அமேசான்!

பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் அமெரிக்காவைச் சேர்ந்த இயற்கை உணவு விற்பனையகமான வோல் ஃபுட்ஸ் மார்க்கெட்டை கையகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, இந்திய மதிப்பில் ரூ.883.6 பில்லியன் பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அமேசான் நிறுவனம் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலாக, உணவு விநியோக சேவையில் கால் பதித்தது. பிரிட்டனிலும் தனது சேவையைத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. வோல் ஃபுட்ஸ் மார்க்கெட் கடந்த 1980ஆம் ஆண்டு டெக்சாஸ் பகுதியில் தொடங்கப்பட்டது. தற்போது 460 இடங்களில் இது செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து ஆறு காலாண்டுகளில் விற்பனை குறைந்ததால் அமெரிக்காவில் உள்ள ஒன்பது கிளைகளை மூடியது. தற்போது விற்பனைக்கும் வந்துள்ளது.

இதுதொடர்பாக, அமேசான் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் ஃபெசோஸ் கூறுகையில், “லட்சக்கணக்கான மக்கள் வோல் ஃபுட்ஸ் மார்க்கெட்டை விரும்புகின்றனர். ஏனென்றால், அவர்கள் தரமான மற்றும் இயற்கை உணவுகளை வழங்குகின்றனர். ஆரோக்கியமான உணவுகளை உண்ண உதவுகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

வோல் ஃபுட்ஸ் மார்க்கெட்டின் துணை நிறுவனர் மற்றும் சி.இ.ஒ. ஜான் மேக்கி கூறுகையில், “இந்த கையகப்படுத்துதல் நடவடிக்கை என்பது எங்கள் பங்குதாரர்களின் மதிப்பை உயர்த்திக்கொள்ள ஒரு சந்தர்ப்பம் ஆகும். அதேவேளையில், எங்களின் பணியை விரிவாக்கி, உயர்ந்த தரத்தை, அனுபவத்தை, புதுமையை எங்களின் வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியும்” என்று தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம், 2017ஆம் ஆண்டின் 2ஆம் பாதியில் முடிவு பெறும் என்று சி.என்.பி.சி. ஊடகம் தெரிவித்துள்ளது. அமேசான் கையப்படுத்திய பின்பும் மேக்கியே சி.இ.ஓ-வாக தொடருவார் என்று கூறப்படுகிறது.

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon