மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 27 மே 2020

அதிகரிக்கும் போராட்டம்: விரைந்தது ராணுவப்படை!

அதிகரிக்கும் போராட்டம்:  விரைந்தது ராணுவப்படை!

டார்ஜிலிங்கில் ‘கூர்க்காலாந்து’ எனத் தனி மாநிலம் வேண்டி அந்தப் பகுதி மக்கள் தொடர்ச்சியாக நேற்று ஆறாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே நடக்கும் மோதலால் பதற்றம் அதிகரித்தது.

மேற்கு வங்கம் டார்ஜிலிங்கில் உள்ள கூர்க்கா இன மக்களின் தனி மாநிலக் கோரிக்கை வலுத்து வருகிறது. அதையடுத்து, மேற்கு வங்காள மாநிலத்திலிருந்து கூர்க்காலாந்தை பிரித்துத் தனி மாநிலமாக உருவாக்க வேண்டும் எனக் கூர்க்கா ஜனமுக்தி மோர்சா கட்சி கடந்த ஜூன் 12ஆம் தேதி முதல் காலவரையறையற்ற போராட்டத்தைத் தொடங்கியது.

மேற்கு வங்கத்தின் கோடைக்காலத் தலைநகரமாக இருந்து வந்த மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு நகரமான டார்ஜிலிங்கில், கடந்த 45 ஆண்டுகளாக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவே இல்லை. டார்ஜிலிங் பகுதி மலைவாழ் மக்கள், தங்கள் எல்லைப் பகுதியை மேற்கு வங்கத்திலிருந்து பிரித்து, கூர்க்காலாந்து என்ற தனி மாநிலமாக அறிவிக்க வேண்டுமென பல போராட்டங்கள் நடத்திவந்த வேளையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மாநிலம் முழுவதும் வங்க மொழி கட்டாயம் என்ற அறிவிப்பைக் கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியிட்டது முதல், கூர்க்கா இன மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. காலவரையற்ற போராட்டம், கடையடைப்பு என இருந்துவந்த போராட்டத்தில் நேற்று முன்தினம் ஜூன் 16ஆம் தேதி கல்வீச்சு தாக்குதல் நடைபெற்றதையடுத்து காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டனர். இதனால் பதற்றம் அதிகரித்தது.

இந்நிலையில், கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராமபிரசாத் சர்கார் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதை விசாரித்த தலைமை நீதிபதி (பொறுப்பு) நிஷா மத்ரே மற்றும் நீதிபதி டி சக்ரபோர்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். வன்முறையால் அரசு, தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு என்பதைத் தெரிவிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வேலை நிறுத்தம், போராட்டம் போன்றவை சட்டத்துக்கு எதிரான பொது அமைதியைச் சீர்குலைக்கும் செயல் என உச்சநீதிமன்றம் மற்றும் கொல்கத்தா உயர் நீதிமன்றம் ஏற்கெனவே சுட்டிக்காட்டி இருப்பதையும் அவர்கள் தெரிவித்து போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர அரசுக்கு உத்தரவிட்டனர்.

அதையடுத்து, மேற்கு வங்க ஆளுநர் கே.என் திரிபாதியை கூர்க்கா ஜன்சக்தி மோர்ச்சா எம்.எல்.ஏ-க்கள் அமர்சிங் ராய், சரிதா ராய், ரோகித் சர்மா, கலிம் போங், குர்ஷியாங் ஆகியோர் ராஜ்பவனில் நேற்று முன்தினம் ஜூன் 16ஆம் தேதி சந்தித்துப் பேசியபோது, கூர்க்காலாந்து தனி மாநில கோரிக்கைக்கான அமைதியான அரசியல் இயக்கத்தைச் சட்டம் ஒழுங்கு பிரச்னையாக மாற்ற முயற்சி செய்கிறது என்று குற்றம் சாட்டினார்கள்.

அதைத்தொடர்ந்து, கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா அமைப்பின் தலைவர் பிமல் குரூங் நேற்று முன்தினம் ஜூன் 16ஆம் தேதி திடீரென டார்ஜிலிங்கில் தோன்றி பொதுமக்கள் மத்தியில் பேசும்போது, கூர்க்காலாந்து தனி மாநில கோரிக்கையான நமது கனவை அடைய வேண்டுமானால் செய் அல்லது செய்துமடி எனும் போராட்டத்தைக் கையில் எடுப்பதற்கான நேரம் வந்து விட்டது. எனவே, இறுதிப் போருக்குத் தயாராகுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார். அதேபோல், ஜன் அந்தோலன் கட்சித் தலைவர் ஹர்கா பகதுர் செட்ரி கூறுகையில், போலீஸ் மூலமாக பொதுமக்கள் கோரிக்கையைச் சிதைக்கும் வேளையில், அரசு செயல்படுகிறது என்று கூறினார்.

இந்நிலையில், கூர்க்காலாந்தை தனி மாநிலமாக அறிவிக்கக்கோரிப் போராடுபவர்களை விரட்டுவதற்காக, ரப்பர் குண்டுகளைப் பாதுகாப்புப் படையினர் பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து, முதலமைச்சர் மம்தா பானர்ஜி முக்கிய அதிகாரிகளுடன் நேற்று ஜூன் 17ஆம் தேதி அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். மேலும், நேற்று நடந்த கலவரத்தில் காவல்துறை வாகனம் ஒன்று தீவைத்து முற்றிலுமாக எரிக்கப்பட்டு, அந்த வாகனத்தின் காவலரும் தாக்கப்பட்டார். கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலின்போது இந்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த கிரண் தமாங் என்பவர் பலியானார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற போலீஸ் துப்பாக்கிச் சூட்டில், தனது கட்சியைச் சேர்ந்த இரண்டு தொண்டர்கள் பலியானதாகக் கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா அமைப்பின் தலைவர் பிமல் குரூங் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை, போலீஸ் ஏ.டி.ஜி.பி. அனுஜ் சர்மா மறுப்பு தெரிவித்து ஜி.ஜே.எம். அமைப்பினரே துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாகக் கூறினார்.

இதையடுத்து, டார்ஜிலிங் பகுதியில் ஏற்கனவே வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் பாதிப்படைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப செல்வதற்கு வழியின்றி தவித்து வருகின்றனர். இந்தப் பரபரப்பான சூழலில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் மத்திய அரசிடம் துணை ராணுவப் படையை அனுப்பும்படி முதல்வர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார் .

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon