மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 27 மே 2020

பள்ளியில் மாட்டிறைச்சி: தலைமையாசிரியர் கைது!

பள்ளியில் மாட்டிறைச்சி: தலைமையாசிரியர் கைது!

ஜார்கண்டின் பாக்கூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் மாட்டிறைச்சி சமைத்ததற்காக அப்பள்ளியின் தலைமையாசிரியர் உள்பட இருவரை போலீஸார் கைது செய்தனர்.

ஜார்கண்ட் மாநிலத்தில் சர்தார் பிளாக்கில் உள்ள சோட்டா மொஹல்லன் ஆரம்ப நிலைப் பள்ளியில் மதிய உணவுக்கு மாட்டிறைச்சி சமைத்ததாக சர்தார் பிளாக்கை சேர்ந்த கல்வித்துறை அதிகாரி பாக்கூர் மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளர் சைலேந்திர பிரசாத் பர்ன்வாலிடம் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து, அரசுப் பள்ளிகளில் தடைசெய்யப்பட்ட இறைச்சியை மதிய உணவுக்குச் சமைத்ததற்காகவும், மத உணர்வுகளைப் புண்படுத்தியதற்காகவும் பள்ளி தலைமையாசிரியர் ரோஸா ஹன்சதா மற்றும் அவருக்கு உதவியாக இருக்கும் உள்ளூர் கிராமவாசியான பிர்ஜு ஹன்சதா ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

பள்ளிக் குழந்தைகள் மாட்டிறைச்சியைப் பார்த்ததும், அதைச் சாப்பிடாமல் தங்களது பெற்றோர்களிடம், பள்ளியில் மாட்டிறைச்சி சமைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் கோபமடைந்த கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.

இதையறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து கிராம மக்களை சமாதானப்படுத்தி அனுப்பினர்.

கடந்த மாதம் மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. உத்தரப்பிரதேசத்தில் மணமகன் வீட்டார் மாட்டிறைச்சி கேட்டதால், மணமகள் வீட்டார் திருமணத்தை நிறுத்தினர். இதுபோன்று, மாட்டிறைச்சியால் பல பிரச்னைகள் எழுந்து வருகின்றன.

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது