மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 29 மே 2017

நாடோடியின் நாட்குறிப்புகள் 28 - சாரு நிவேதிதா

நாடோடியின் நாட்குறிப்புகள் 28 - சாரு நிவேதிதா

எதிர்பார்த்தது போலவே மோடியின் இந்துத்துவ ஃபாசிச அரசு மாட்டுக் கறி, ஒட்டகக் கறிக்குத் தடை விதித்திருக்கிறது. வெளிப்படையாகப் பார்த்தால் அப்படித் தெரியாது. ஆனால் குறுக்கு வழியில் அப்படித்தான் செய்திருக்கிறது மோடி அரசு. அதாவது, மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய விதிகளின்படி, ஒருவர் தனக்குச் சொந்தமான மாட்டையோ அல்லது வேறு கால்நடையையோ விற்கவேண்டுமென்றால் அதை ‘விவசாய வேலைகளில் பயன்படுத்துவதற்காகத்தான் விற்கிறேன்; இறைச்சிக்காக விற்கவில்லை’ என உறுதிமொழி அளித்து வருவாய் அலுவலரிடமும், மாவட்டக் கால்நடை அலுவலரிடமும், மாடு மற்றும் கால்நடை விற்பனையை ஒழுங்குசெய்யும் குழுவின் பொறுப்பாளரிடத்திலும் அனுமதி பெறவேண்டும். இந்தச் சான்றிதழ்களை கால்நடைகளை விற்பவரும் வாங்குபவரும் வைத்திருக்க வேண்டும். இல்லையேல் சிறைச்சாலையும் அபராதமும் விதிக்கப்படும். ஏற்கனவே குஜராத் அரசு பசுவைக் கொன்றால் ஆயுள் தண்டனை என்ற சட்டத்தை இயற்றியிருக்கிறது. மகாராஷ்ட்ரா அரசும் இது போன்ற கடுமையான சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இப்போது மோடியின் மைய அரசு. ஒட்டு மொத்தமாக இந்தியா அழிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதன் அறிகுறிகளே இந்தச் சட்டங்கள். ஆனால் மோடியை எதிர்ப்பவர்கள் ஒன்றை மறந்து விடக் கூடாது. காங்கிரஸ் அரசின் ஊழலும் பண வீக்கமும் தொடர்ச்சியான விலைவாசி உயர்வும்தான் மோடியின் எழுச்சிக்குக் காரணம். மக்களின் அன்றாட வாழ்க்கை படுநாசத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்ததால்தான் முஸ்லீம்கள் கூட மோடிக்கு வாக்களிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ”எங்களுக்கு எதிரானவராக இருந்தாலும் பரவாயில்லை; எங்கள் வாழ்வில் மோடி மூலமாக ஒரு சிறிதாவது முன்னேற்றம் ஏற்படாதா?” என்றே மோடிக்கு வாக்களித்த முஸ்லீம்கள் நினைத்தார்கள். ஆனால் மோடி அவர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டார். நான் நீங்கள் நினைத்த ஆள் இல்லை என்று வெளிப்படையாகச் சொல்லி விட்டார்.

உண்மையில் இந்தியர்களுக்கு விடிவே இல்லை என்பது போல் தோன்றுகிறது. ஒன்று, இத்தாலிய மாஃபியா. இல்லாவிட்டால், இந்துத்துவ ஃபாசிசம். இதற்குக் காரணம், கடந்த ஐம்பது ஆண்டுகளில் அரசியல், சமூகம், மதம், குடும்பம், கல்வி, மருத்துவம் போன்ற பல்வேறு துறைகளிலும் ஏற்பட்ட மதிப்பீடுகளின் வீழ்ச்சிதான். மக்களின் வாழ்விலிருந்து அறம் போய் விட்டது. எப்படி வேண்டுமானாலும் காசு சம்பாதிக்கலாம்; காசே கடவுள் என்ற ஒரு வாழ்க்கையை தர்மமாக ஏற்றுக் கொண்ட ஒரு தேசத்தில் அரசியல்வாதி மட்டும் எப்படி இருப்பார்? மூன்று வயதிலிருந்தே குழந்தைகளை பணம் சம்பாதிக்கும் எந்திரங்களாக மாற்ற முயற்சிக்கிறார்கள் பெற்றோர். நமது கல்வி முறையில் பணம் சம்பாதிப்பதைத் தவிர வேறு ஏதேனும் கற்பிக்கப்படுகிறதா? ஏதாவது ஒரு நல்ல வேலை. நல்ல வேலை என்றால் பணம் கொடுக்கும் வேலை என்று பொருள். அதோடு முடிந்தது வாழ்வின் குறிக்கோள். ஒரு மாணவர் பதினாறு பதினேழு ஆண்டுகள் படித்து முடிக்க சில கோடிகளை செலவழிக்கின்றனர் பெற்றோர். அதைத் திரும்ப எடுப்பதில்தான் எல்லோரது கவனமும். இதுதான் மத்தியதர வர்க்கத்தின் வாழ்க்கை. கீழ்த்தட்டு மனிதர்களின் வாழ்க்கை மிருகங்களின் வாழ்வை விடக் கீழானதாக இருக்கிறது. நகரத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் குற்றவாளிகள் அனைவரும் இந்தக் கீழ்த்தட்டு மக்களின் குழந்தைகளே ஆவர். எந்த வழியிலாவது பணத்தைக் கைப்பற்று என்பதே இவர்களின் எண்ணம். இப்படிப்பட்ட ஒரு criminalised சமூகத்தில் கொள்ளை அடிக்க முடிந்தவரை அடி என்பதே பெரும்பான்மை மக்களின் தர்மமாக மாறி இருக்கிறது. ஒருநாள் ஒரு டாக்ஸி டிரைவர் சொன்னார். அவரை மடக்கிய போக்குவரத்துக் காவலர் பணம் கேட்டிருக்கிறார். இவரிடமோ எல்லா சான்றிதழ்களும் முறையாக இருந்துள்ளன.

“200 ரூபாய் கொடு.”

“எதுக்கு சார் குடுக்கணும். எண்ட்ட தான் எல்லா பேப்பரும் ஒழுங்கா இருக்கே?”

“ஏய், என்ன, ரொம்ப ஓவரா பேசுறே? ம்... உன்னைப் பார்த்தா தீவிரவாதி மாதிரி இருக்கே? ஆமா, ஏன் நீ தாடி வச்சுருக்கே?”

அதற்கு மேல் வாக்குவாதம் செய்தால் ஆபத்து என்று உணர்ந்த டிரைவர் இருநூறு ரூபாயைக் கொடுத்து விட்டு வந்திருக்கிறார். ”பிச்சை எடுக்கிறானுங்க சார்” என்று சொல்லி முடித்தார்.

இது ஒரு உதாரணம். இந்தியச் சமூகம் முழுமையாகப் புரையோடிப் போயிருக்கிறது. சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில் பாதி அளவு - அதாவது, கிராமங்களும் மலைப்பகுதிகளும் - முழுக்க நக்ஸல்பாரிகளின் ஆதிக்கத்தில் இருக்கிறது. அங்குள்ள மக்கள் நக்ஸல்களுக்குத்தான் வரி கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம், ஏழைக்கும் பணக்காரனுக்கும் உள்ள அதல பாதாள வித்தியாசம். உலகில் ஒருசில ஆஃப்ரிக்க நாடுகளைத் தவிர வேறு எங்குமே ஏழைக்கும் பணக்காரனுக்கும் இத்தனை பெரிய வித்தியாசம் இல்லை. அடிப்படை வித்தியாசம் கல்வியில் இருக்கிறது. 5000 ரூபாய் மாத ஊதியம் பெறும் ஒரு துப்புரவுத் தொழிலாளியின் பிள்ளை ஐஐடியில் படிப்பதற்கு இந்த அமைப்பில் ஏதாவது வழி இருக்கிறதா? இல்லை. காரணம், அவனால் ஐந்து லட்சம் கொடுத்துத் தன் பிள்ளையை மேட்டுக்குடி பள்ளியில் படிக்க வைக்க முடியாது. சேர்த்தாலும் ஆண்டுக்கு மூன்று லட்சம் படிப்புக்குச் செலவு செய்ய முடியாது. இந்த அடிப்படை வித்தியாசம்தான், நகர்ப்புறங்களில் திருட்டு, கொள்ளை, கொலை போன்ற குற்றங்கள் அதிகரிப்பதற்குக் காரணம்.

சமீபத்தில் மரியோ பர்கஸ் யோசாவின் (Mario Vargas Llosa) The Discreet Hero என்ற நாவலைப் படித்துக் கொண்டிருந்தேன். அதில் பெரூவின் Piura மாவட்டம் பற்றிய சித்தரிப்பு வந்தது. அந்த மாவட்டத்தில் உள்ள Sullana, Talara, Tumbes, Chulucanas, Morropon, Catacaos, La Union, Sachura போன்ற சிறு ஊர்களைப் பற்றிய ஆவணப் படங்களை யூட்யூபில் பார்த்தேன். பெரூ தென்னமெரிக்காவின் ஏழை நாடுகளில் ஒன்று. ஆனால் மேற்கண்ட ஊர்களைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை. அந்தச் சிற்றூர்களையும் நம்முடைய ஊர்களையும் ஒப்பிட்டால் நாம் இருண்ட காலத்தில் வாழ்கிறோம் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. பெரூவின் சிற்றூர்கள் ஐரோப்பிய சிற்றூர்களை ஒத்திருக்கின்றன. ஒருசில இணைப்புகளைத் தருகிறேன்.

https://www.youtube.com/watch?v=YjeWdyZUatE

இந்தியாவின் உள்கட்டமைப்பைச் சீர்திருத்துவது பற்றி மோடி அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வெளிநாடுகளுக்குச் சென்றால் நம் ரூபாயின் மதிப்பு மிகக் கேவலமாக இருக்கிறது. உதாரணமாக, 1947-இல் ஒரு யு.எஸ். டாலரின் இந்திய ரூபாய் மதிப்பு 3 ரூபாய். இன்றைய மதிப்பு 65 ரூபாய். இதுதான் சுதந்திரத்துக்குப் பிறகான இந்தியாவின் வளர்ச்சி. கல்வி, மருத்துவம், சாலை வசதிகள் போன்ற துறைகளில் உலகின் மிக ஏழ்மையான நாடுகளை விட மோசமாக இருக்கும் இந்தியாவை முன்னேற்றுவதற்கு ஒரு துரும்பைக் கூட அசைக்காமல் demonetisation, பசுவதைத் தடுப்புச் சட்டம் என்று மக்களுக்கு எதிரான சட்டங்களையே போட்டுக் கொண்டிருக்கிறார் மோடி. இதெல்லாம் மக்களுக்கு எதிரான அரசாங்கத்தின் போர் என்றே சொல்ல வேண்டும்.

ஹிட்லரின் ஃபாசிசம் யூதர்களை வதை முகாம்களுக்கு அனுப்பிக் கொன்றது. இப்போது போரின் முறை மாறியிருக்கிறது அல்லவா? எனவே, விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரங்களைப் பிடுங்குவதுதான் இப்போதைய போர்முறை. மோடியின் பண உபயோகத்தைக் குறைத்த திட்டத்தினால் பாதிக்கப்பட்டது ஏழைகள்தான். பணக்காரர்கள் அதனால் ஒருசிறிதும் பாதிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்டிருந்தால் தேர்தல் கமிஷனுக்கே கமிஷன் கொடுப்பதற்காக கோடிக்கணக்கான பணம் சென்னையிலிருந்து தில்லிக்குப் போயிருக்காது. அதேபோல், இப்பொதைய பசுவதைத் தடுப்புச் சட்டத்தினால் பாதிக்கப்படுவதும் தலித் மக்களும் முஸ்லீம்களும்தான்.

மேலும், நான் எதை உண்ண வேண்டும் என்று எவன் எனக்குச் சட்டம் போடுவது? இது என்ன நாடா, அடிமைகளின் கூடாரமா? என் நண்பர்களிடமெல்லாம் நான் எப்போதுமே சொல்லிக் கொண்டிருக்கிறேன், எப்படியாவது இந்த நாட்டை விட்டு எங்கேயாவது ஓடி விடுங்கள் என்று. அமெரிக்கா வேண்டாம்; அங்கே ஒரு மோடி இருக்கிறார். மேற்கு ஐரோப்பிய நாடுகளும் ஜப்பானும் மனிதர்கள் வாழத் தகுந்தவையாக இருக்கின்றன. ஜப்பானை பூலோக சொர்க்கம் என்கிறார்கள்.

ஃபாசிசம் பற்றிப் பார்த்தோம். ஃபாசிசம் என்பது நாம் நினைப்பதே சரி என்று மற்றவர் மீது திணிப்பதாகும். அப்படிப் பார்த்தால் பூரண மதுவிலக்கு என்பதும் ஃபாசிசமே ஆகும். அதனால்தான் இந்தியாவே ஃபாசிசத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்றேன். எனக்கு ஒயின் அருந்துவது ஒரு உணவுப் பழக்கம் என்றால், அதைப் பூரண மதுவிலக்கின் மூலம் தடுப்பதும் ஃபாசிசம்தான். (ஆனால் டாஸ்மாக் என்ற பெயரில் உயிரைக் குடிக்கும் விஷச் சாராயத்தை மக்களுக்குக் கொடுக்கும் தமிழக அரசின் மதுக் கொள்கை தீவிரமாக எதிர்க்கப்பட வேண்டியது என்பதில் சந்தேகம் இல்லை. நான் குறிப்பிடுவது, பூரண மதுவிலக்குக் கொள்கைக்காகப் போராடுபவர்களைப் பற்றி. அவர்களுக்கும் பசுவதைத் தடைச் சட்டம் கொண்டு வருபவர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இரண்டுமே கலாச்சார ஒழுக்கம் சார்ந்தவைதான்.)

இந்த நேரத்தில் மகாத்மா காந்தி இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என்று முகநூலில் எழுதினேன். ”இந்தச் சட்டத்தை பிராமணர்களும் மற்ற சைவ உணவுக்காரர்களும் எதிர்க்க வேண்டும். மகாத்மா மட்டும் இன்று உயிரோடு இருந்திருந்தால் இந்த மாட்டுக்கறித் தடையை எதிர்த்து சாகும் வரை உண்ணாவிரதம் இருந்திருப்பார். இந்தியா பூராவும் உள்ள பிராமணர்கள் இந்தச் சட்டத்தை எதிர்க்க வேண்டும். அதுதான் மத நல்லிணக்கத்தின் அடையாளம்."

இப்பிரச்சினை குறித்து ஜூலை 25, 1947 அன்று ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில் மகாத்மா காந்தி பேசியதன் மொழிபெயர்ப்பு:

”இதுவரை ஐம்பதாயிரம் அஞ்சல் அட்டைகளும் இருபது முப்பதாயிரம் கடிதங்களும் தந்திகளும் வந்திருப்பதாக ராஜேந்திர பாபு என்னிடம் சொன்னார். எல்லாம் பசுவதைத் தடுப்புச் சட்டத்தைக் கொண்டு வருவதற்காக. இன்னொரு நண்பர் இதற்காக உண்ணாவிரதம் ஆரம்பித்திருக்கிறார். ஆனால் எந்தக் காரணத்தினாலும் இந்தியாவில் பசுவதைத் தடுப்புச் சட்டத்தைக் கொண்டு வர முடியாது. இந்துக்கள் பசுவைக் கொல்லக் கூடாது என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. பசுவைப் பரிபாலிக்க வேண்டும் என்பது என் நீண்ட காலக் கொள்கை. ஆனால் அதே மாதிரிதான் மற்ற மதத்தினரும் நினைக்க வேண்டும் என்று எப்படி நான் எதிர்பார்க்க முடியும்? மத விஷயத்தில் சகிப்புத்தன்மையோடு இருப்போம், எங்கள் கருத்தை மற்றவர் மீது திணிக்க மாட்டோம் என்று வீட்டுக் கூரையில் ஏறி நின்று கத்துகிறோம். நம்முடைய பிரார்த்தனைகளின் போது குரானிலிருந்தும் பல பகுதிகளை வாசிக்கிறோம். ஆனால் பசுவைக் கொல்லாதீர்கள் என்று யாரையும் என்னால் கட்டாயப்படுத்த முடியாது. அவர்களாக அப்படிச் செய்தால் நல்லதே ஒழிய அதை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன். அப்படிச் செய்தால் இந்தியாவில் இந்துக்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்றுதான் அர்த்தமாகும். இங்கே முஸ்லீம்கள் இருக்கிறார்கள், பார்ஸிகள், கிறித்தவர்கள் மற்றும் பல மதத்தினர் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தியா இந்துக்களின் தேசம் என நினைப்பது தவறானதாகும். இங்கே வாழும் அனைவருக்கும் உரித்தானது இந்தியா. சட்டத்தின் மூலமாக இங்கே பசுவதையை நிறுத்தினால் அதற்கு நேர் எதிரான விளைவு பாகிஸ்தானில் ஏற்படும். பிறகு அதன் முடிவுதான் என்ன? இந்துக்கள் கோவிலுக்குப் போகக் கூடாது என்று அவர்கள் சட்டம் போடலாம்; ஏனென்றால், சிலை வணக்கம் ஷரியத் விதிகளுக்கு எதிரானது. ஒரு கல்லில் கூட நான் கடவுளைக் காண்கிறேன். ஆனால் அந்த நம்பிக்கையின் மூலம் நான் மற்றவர்களுக்கு என்ன இடையூறு செய்கிறேன்? ஒருவேளை நான் கோவிலுக்குச் செல்வது தடை செய்யப்பட்டால் நான் அந்தத் தடையை மீறி கோவிலுக்குச் செல்வேன். எனவே இது சம்பந்தமாக எனக்கு வரும் கடிதங்கள் நின்றாக வேண்டும். காசை அப்படியெல்லாம் வீணாக்கக் கூடாது. ஆனால் சில பணக்கார இந்துக்கள் பசுக்களைக் கொல்கிறார்கள். அதை அவர்கள் தங்கள் கரங்களால் செய்யவில்லை. ஆனால் ஆஸ்திரேலியாவுக்கும் மற்ற நாடுகளுக்கும் பசுக்களை சப்பாத்துகளுக்காக அனுப்புவது யார்? நம்முடைய மாட்டுத் தோலிலிருந்து தயாரிக்கப்பட்ட சப்பாத்துகள்தான் நமக்கே அனுப்பி வைக்கப்படுகின்றன. எனக்கு ஒரு கட்டுப்பெட்டியான இந்து வைஷ்ணவரைத் தெரியும். அவர் தன் குழந்தைகளுக்கு மாட்டு சூப் கொடுப்பது வழக்கம். அது பற்றி நான் அவரிடம் கேட்ட போது, மருந்துக்காக அதைச் சாப்பிடுவதில் பாபமில்லை என்று சொன்னார். உண்மையான மதம் என்பது பசுவதைத் தடுப்புச் சட்டம் வேண்டும் என்று கத்துவதில் இல்லை. கிராமங்களில் மாட்டு வண்டிகளில் மாடுகள் சுமக்க முடியாத அளவுக்கு சுமைகளை வைத்து எடுத்துக் கொண்டு போகிறார்கள். அது பசு வதை இல்லையா? எனவே, பசுவதைத் தடுப்புச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக் கூடாது.”

இந்தப் பிரச்சினை குறித்த என் முகநூல் குறிப்புகள்:

”இந்த நாட்டை இத்தாலியிடம் அடகு வைத்து விட்டே போவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்கிறார் மோடி. காங்கிரஸ் கட்சியின் போர்க்காலத் தொண்டன் மோடி தான். சந்தேகமே இல்லை.”

”இதே போல் ஆட்டுக் கறி, கோழிக் கறி ஆகியவற்றையும் தடை செய்யும்படி மோடி அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால், பகவத் கீதை 16, 17, 18 அத்தியாயங்களில் மாமிசம் சாப்பிடுபவர்கள் மிருக இயல்போடு இருப்பார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. எனவே மனித மாண்பைக் காப்பாற்றுவதற்காகவாவது ஆடு கோழி இறைச்சிகளையும் தடை செய்யவும்.

ஒரே ஒரு விதிவிலக்காக, மதக் கலவரம் வரும் போது மனிதக் கறி சாப்பிட தடை இல்லை என்று அறிவித்து விட்டால் போதும்.”

(ஃப்ரெஞ்ச் இலக்கியம் பற்றிய தொடரை அடுத்த வாரம் பார்க்கலாம்...)

திங்கள், 29 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon