மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 24 மே 2017

சிறப்புக் கட்டுரை : வல்லமை தாராயோ:10- தமயந்தி

சிறப்புக் கட்டுரை : வல்லமை தாராயோ:10- தமயந்தி

(Night - Untitled - 1981, Artist - Beksinski)

சமீபத்தில் ஒரு பெண் வாட்ஸ் அப்பில் தற்கொலை செய்து கொள்வற்கு முன் பேசிய வீடியோ காட்சிகள் பார்த்து கண்களை மூடிக் கொண்டேன். வேறென்ன செய்ய முடியும்.. அவள் குழந்தையை தன் தாய் தந்தையிடம் கொடுத்து விட மன்றாடுகிறாள். தன் கணவனை அயோக்கியன் என்று சித்தரிக்கும் அவள் தனது தற்கொலை முடிவிற்காக தாயிடம் மன்னிப்பு கேட்கிறாள். அவளது நெற்றியில் திருநீறு பூசப்பட்டிருக்கிறது. அதற்கு முன் அவள் கோவிலுக்கு போயிருக்கலாம் அல்லது வீட்டிலேயே சாமி கும்பிட்டிருக்கலாம். கண்களை மூடி மூடி துயரத்தைக் கடப்பவள் போல குரல் அழுந்த அவள் பேசுவது பெருந்துயரம்.

அந்தப் பெண் பின் இறந்து போனதாய் தொலைக்காட்சி செய்திகள் ஊர்ஜிதப்படுத்தின. அவளது கணவனை கைது செய்திருக்கலாம். சரியாய் பதினைந்து முதல் முப்பது நாட்களுக்குள் அக்கணவன் வெளியே வந்து விடக் கூடும். அதெல்லாம் போக ஒரு பெண் கொடூரமாக சாவை எதிர்கொண்ட மனநிலை அலைக்கழிக்கிறது. என்ன கொடுமை செய்தான் அந்தக் கணவன் என்று அதில் தெளிவாக சொல்லப்படவில்லை. ஏன் அந்தப் பெண்ணிற்கு அவனை விட்டு விட்டு வந்து வாழும் எண்ணம் வராமல் சாகும் எண்ணம் வந்தது என்பதே கேள்வி?. எந்த அம்மா அப்பாவிடம் தன் குழந்தையைப் பார்த்துக் கொள்ள கெஞ்சுகிறாளே ...அவர்களிடம் ஏன் அவள் நிலமையை சொல்லவில்லை ? அதுதான் நிஜம். காரணம் பாதிப் பெண்களின் நிலைமை இப்படிதான். வாழ்க்கை குறித்தோ அதன் சிக்கல்கள் குறித்தோ பெற்றோரிடம் பேச முடியாத நிலைமை. மனசுக்குள் எல்லாமே பூட்டி வைத்து மன அழுத்தம் அதிகமாகி கடைசியில் தன்னையும் குழந்தைகளையும் அழித்துக் கொள்ளும் மனநிலைக்கு வருவது. இப்படியான மனிதர்களின் துயரங்களை நிராகரித்தே அவர்களுடன் நாம் வாழ்கிறோம்.

அந்தப் பெண் அக்கணவனை விவாகரத்து செய்து ஒரு வேலைப் பார்த்து தனக்கு விருப்பமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம். தனக்குப் பிடித்த ஒருவனைக் காதலித்து இணைந்து வாழ்ந்திருக்கலாம். இதை நான் சொல்ல என்ன தகுதி இருக்கிறதென கேட்கலாம். மூன்று முறை தற்கொலை முயற்சி செய்து அதில் பிழைத்ததால் சொல்லும் தகுதி இருக்கிறது. சில நேரங்களில் கேள்வி கேட்கப்படுவோம் என்ற தயக்கத்தில் தான் பலர்- ஆணோ பெண்ணோ தாங்கள் வாழும் வாழ்வில் தங்களையே தொலைத்து விடுகிறார்கள்.

நிவேதிதாவைக் கார் ஏற்றிக் கொன்ற இளையராஜா பிறகு தானும் தற்கொலை செய்து கொண்டதாய் சொன்னார்கள். நிவேதிதாவுடன் ஆறு வருட காதல். இன்னொருவருடன் நிவேதா நடந்து போவதைக் கூட சகிக்க முடியவில்லை. ஆனால் அவர் மட்டும் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளலாம். பிள்ளைப் பெற்றுக் கொள்ளலாம். காதலை கள்ளக் காதல் என்று சொல்லி நாம் அதை அசிங்கமாகப் பார்க்கிறோம். சரி...கள்ளக் காதல் என்றே சொல்லுங்கள். ஏன் அதில் ஈடுபடுகிறார்கள் என்று இந்த சமூகமோ அரசோ ஆராய்ந்திருக்கிறதா?

ஆராய்ந்தால் இத்திருமண கட்டமைப்பின் மாயை புரிந்து போகும் என்பதாலேயே இவ்வகை உறவு சிக்கல்களைப் பற்றி ஏதும் பேசாமலே இருப்பதன் மூலமாக கற்பு, கலாசாரம் போன்ற இந்திய பம்மாத்துக்களை பாதுகாக்கிறது நம் அரசியல் கட்டமைப்பு என்பது புரிகிறது. நிவேதிதாவின் உடலை அவரது பிள்ளைகள் வாங்க மறுத்தது தான் இப்பிரச்னையின் உச்சக்கட்ட பம்மாத்து. ஒரு பெண் காலத்துக்கும் உறவே இல்லாமல் வாழ வேண்டும் என்று என்ன நிர்பந்தம் இருக்கிறது. அவரது உடலை பிள்ளைகள் வாங்காதது தான் சரியானது என்று முகநூலில் சில அறிவுஜீவி ஒழுக்கசாலிகள் கூவினார்கள்.

பிரபஞ்சனின் அம்மா என்றொரு சிறுகதை. சிறுவயதிலேயே அப்பாவை இழந்த அம்மா. மகனுக்கோ அம்மா மேல் நிறைய அன்பு. அக்கறை. அவளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறான். ஒருமுறை வெளியூருக்கு ரயில் பயணம் போகிறார்கள். இரவில் அவன் தற்செயலாக எழுந்து பார்க்க அவனது அம்மா ரயிலில் வந்த ஒரு ஆணுடன் உறவு கொண்டிருக்கிறாள். அவன் அதைப் பார்த்து விலகிப் போவது மட்டுமல்ல. அம்மாவைப் பற்றி கவலைப்படுவதையும் நிறுத்தி விடுகிறான். தமிழ் கலாசார பிம்பங்களை முழுதுமாய் கலைத்துப் போடும் இந்தக் கதை வந்து இருபது வருடங்களுக்கு மேலிருக்கும் காலகட்டத்திலும் நிவேதிதாவை இந்த சமூகம் தனக்கு ஏற்புடையவளாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஒழுக்க விதிகளின் படி அவர் தூய்மையற்றவர். வேறொரு கணவரின் கள்ளக் காதலி. காதலில் ஏது நல்ல காதல், கள்ளக்காதல்என்று பிரபஞ்சன் கேட்பார். ஒரு ஆணையோ பெண்ணையோ காதலித்து ஏமாற்றினால் அது தான் கள்ளக்காதல். ஆனால் இங்கு திருமணம் மீறிய உறவுகள் தான் கள்ளக் காதலாக உருப்பெறுகிறது. ஏன் உருவாகிறது திருமணம் மீறிய உறவுகள்? நவீனக் கால சிக்கலில் மிக மிக நுட்பமான விஷயமாக இதன் காரணிகள் இருப்பினும் இன்னும் தெளிவான சமூகப்புரிதலோ அல்லது சட்ட வரைமுறைகளோ இல்லை.

ஏன் ஒரு திருமணம்.மீறிய காதல் ஏற்படுகிறது? ஏனெனில் அங்கு ஒரு வெற்றிடம் உள்ளது. அந்த வெற்றிடம் இருப்பதை யாரும் உரக்க பேசுவதில்லை. உடலுறவுக்குப் பின் தரப்படாத ஒரு உச்சந்தலை முத்தத்தில் கூட துவங்கலாம் அது.

ஜமுனா எழுதிய மின்னஞ்சல் போல:

வணக்கம் தமயந்தி

நீண்ட யோசனைக்குப் பிறகே இந்த கடிதம் எழுதுகிறேன். எனக்கு மிகவும் குழப்பமாக இருக்கிறது. என் வயது 45. என் கணவர் விவாகரத்து வாங்கி விட்டார். இன்னொரு திருமணமும் செய்து விட்டார். எனக்கு ஒரு மகன். அவனை வளர்ப்பதில் மட்டுமே என் கவனம் இருக்க வேண்டும் என்று அம்மா தெளிவாக சொல்லி விட்டார்.

ஆனால் யாரவது தெருவில் ஜோடியாக போனால் என் மனசு அலைப்பாய்கிறது. எனக்கான துணையின் தோளில் சாயவோ மடியில் சாயவும் விரும்புகிறது. இது காமம் மட்டுமல்ல. காமம் இல்லாமலும் இல்லை. போலியாய் நான் இப்படியே இருந்தால் நல்லவள் பட்டம் வேண்டுமானால் சமூகத்திடம் பெறலாம். ஆனால் அந்தப் பட்டம் வைத்து என்ன கிழிக்க முடியும்? என் கனவுகளை நானே எரித்துக் கொள்ள வேண்டுமா?

உண்மை தான் ஜமுனா. இங்கு பொய்மையின் வாசலில் நாம் முகமூடிகளை அணிகிறோம். உண்மையான உணர்வுகளை நாம் பகிர வெளி இல்லை. மாற்று கட்டமைப்பை அரசு சார்ந்த சட்டமும் திட்டமுமே கொண்டு வர இயலும்.

நிகழுமா?

கட்டுரையாளர் குறிப்பு : எழுத்தாளர் தமயந்தி

ஒடுக்கப்பட்ட பெண்களின் சார்பில் தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர். இவரது 'அக்கக்கா குருவிகள்', ' சாம்பல் கிண்ணம்' சிறுகதைத் தொகுப்புகள் வாசகர்களிடையே பரவலான கவனத்தைப் பெற்றவை. இவரது முக்கிய கட்டுரைத் தொகுப்பு 'இந்த நதி நனைவதற்கல்ல'. திரைப்படத்துறையில் பணியாற்றி வருகிறார். இயக்குநர் மீரா கதிரவனின் 'விழித்திரு' திரைப்படத்தில் வசனமும், பாடலும் எழுதியுள்ளார்.

வல்லமை தாராயோ - 1 -தமயந்தி

வல்லமை தாராயோ - 2-தமயந்தி

வல்லமை தாராயோ - 3-தமயந்தி

வல்லமை தாராயோ - 4-தமயந்தி

வல்லமை தாராயோ - 5-தமயந்தி

வல்லமை தாராயோ - 6-தமயந்தி

வல்லமை தாராயோ - 7-தமயந்தி

வல்லமை தாராயோ - 8 - தமயந்தி

வல்லமை தாராயோ - 9 - தமயந்தி

புதன், 24 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon