மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 28 மே 2020

பச்சிளம் குழந்தையை அட்டைப்பெட்டியில் கொடுத்த மருத்துவமனை!

பச்சிளம் குழந்தையை அட்டைப்பெட்டியில் கொடுத்த மருத்துவமனை!

ஹைதராபாத்தில் இயங்கி வரும் அரசு நடத்தும் நிலோஃபர் மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் குழந்தையை அட்டைப்பெட்டியில் கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை மாலை அனுஷா என்னும் கர்ப்பிணி பெண் பிரசவத்துக்காக நிலோஃபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குச் செவ்வாய்க்கிழமை குழந்தை இறந்து பிறந்துள்ளது. அதைத் தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகம் இறந்த குழந்தையை பேப்பரில் சுற்றி அட்டைப்பெட்டியில் வைத்துக் கொடுத்துள்ளது.

இதுகுறித்து அனுஷாவின் தாயார், “பிரசவத்துக்காக அனுஷாவை மருத்துவமனையில் அனுமதித்தோம். ஆனால், அனுஷாவுக்குக் குழந்தை இறந்து பிறந்தது. அதன் பின்னர், நர்ஸ் ஒருவர் குழந்தையை அட்டைப்பெட்டியில் கொண்டுவந்து எங்களிடம் ஒப்படைத்தார். இது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது” என தெரிவித்துள்ளார்.

மாநில சுகாதார அமைச்சர் டாக்டர் லக்ஸ்மா ரெட்டி மருத்துவமனையில் சோதனை நடத்தி வந்த நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், குழந்தையை வீட்டுக்குக் கொண்டு செல்ல பெற்றோர் அந்த அட்டைப்பெட்டியில் வைத்துள்ளதாக சிலர் தெரிவித்துள்ளனர். மருத்துவமனைக்குக் கெட்ட பெயர் வருவதற்காக அவர்களே அட்டைப்பெட்டியை வாங்கி இதுபோல் ஒரு காரியத்தை செய்துள்ளதாக சிலர் தெரிவித்துள்ளனர்

கடந்த வாரம் 22 வயது பெண், நிலோஃபர் மருத்துவமனையின் சி-பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், தொடர் சுவாசப் பிரச்னைகளால் அவர் இறந்தார். இரண்டு மாதங்களுக்கு முன், சி-பிரிவில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட 5 பெண்கள் அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை பெற்ற ஒரு வாரத்தில் இறந்துள்ளனர்.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon