மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 2 மே 2017

வல்லமை தாராயோ - 8 - தமயந்தி

வல்லமை தாராயோ - 8 - தமயந்தி

சமீபத்தில் எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு நடைபெற்ற ‘பிரபஞ்சன் 55’ விழாவில் அவரது சிறுகதைகள் பற்றி பேசிய எழுத்தாளர், இயக்குநர் சந்திரா குடும்பம் பற்றிய அவரது மதிப்பீடுகளைப் பற்றி பேசினார். உண்மைதான். பிரபஞ்சனைப் போல குடும்பக் கட்டமைப்புகளை மறுபரிசீலனை செய்த எழுத்தாளர் தமிழில் யாரும் உண்டா என்பது கேள்வியே. குடும்பம் என்பது உண்மையில் என்ன? இருவர் சேர்ந்து கணவன்-மனைவியாக வாழ்ந்து, குழந்தை பெற்று, பொருள் ஈட்டி பொருள் வாங்கும் சுழற்சியே இன்றைய சூழலில் குடும்பம் என அறியப்படுகிறது.

அதை மீறி, யாருடைய சுயத்தையும் யாருக்கும் விற்காமலோ, அடகு வைக்காமலோ இருக்கும் கட்டமைப்பு குடும்பம் என அறியப்படுகிறதா எனப் பார்த்தால் ஆண், பெண் இருவருக்குமே அதுவொரு கட்டுப்பாடுகள் நிறைந்த ஒரு கூண்டாகத்தான் உள்ளதோ என்ற கேள்வி எழாமல் இல்லை.

சிறு வயதில், பள்ளிக்கூடத்தில் நான் ஒரு திரைப்படப் பாடலுக்கு நடனமாடியிருக்கிறேன். ‘நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்’ என்னும் அந்தப் பாடல் இன்று கேட்டால் நகைப்பாக இருக்கிறது. இந்த ஒட்டுமொத்த சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட நாலு அல்லது ஐந்து பேர் மட்டும் ஒரு குடும்பம் என்று சுய சக்கரத்தில் இயங்குவதை எப்படி உலகெங்கும் கண்ணை மூடிக்கொண்டு எறும்புகள் வரிசையில் செல்வதுபோல் மனிதர்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறது?

கெளரி என்னும் பெண்ணை சமீபத்தில் சந்திக்க நேர்ந்தது. அழகான பருத்திப் புடைவையில் கொஞ்சம் புஸ்புஸ் தேகம்தான்.

நீங்க ஸ்லிம்மா இருக்கீங்க மேம் என்றாள், பார்த்த உடனே.

அட... இன்னும் பத்து கிலோ குறைக்க வேண்டுமென யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

அப்டில்லாம் கட்டாயமா என்ன... நம்ம ஒவ்வொரு உடலும் ஒவ்வொரு மனம் மாதிரிதான். ஒவ்வொருத்தருக்கும் அவரவர் பயலாஜிகல் நீட்ஸ் வேற வேற. ஒல்லியா இருக்கிறவங்க ஹெல்தியா இருக்காங்களா?

பட்... ஒல்லியா இருந்தா படியையெல்லாம் கடகடன்னு ஏற முடியுதே...

ஹாஹா... அப்ப தொப்பை இதுக்குற ஆண்கள் எங்க போவாங்க?

ம்க்கும்... ஏதோ, பெண்களுக்கு தொப்ப இல்லாத மாதிரி பேசுறீங்க கெளரி...

அவள் பயங்கரமாக வெடிச்சிரிப்பு சிரித்தபடி ஒத்துக்கொண்ட தினுசில் கை தூக்கினாள்.

லிஃப்ட்ல போய் மனசு பழகிட்டு. மனசு உடம்புட்ட அத கேக்குது. மத்தபடி, படி ஏறுறது எவ்ளோ பெரிய அதிர்ஷ்டம் தெரியுமா உடலுக்கு?

நீங்க உடற்பயிற்சியாளரா கெளரி?

நாம எல்லோருமே அதானே... நான் ஒரு பிஸ்னஸ் மேக்னட் ஆக வழி செஞ்சிட்டு இருக்கும் முப்பத்தெட்டு வயதுப் பெண்.

கல்யாணம்?

இல்ல... ஆனா நிறைய காதல் உண்டு...

கண்ணை மூடிச் சிரித்தாள். அப்படிச் சொல்லும்போது பெரும்பாலான பெண்களுக்கு ஏற்படும் தயக்கமோ, தான் மற்றவரால் தவறாகக் கணிக்கப்படுவோம் என்ற எண்ணமோ இல்லை. அதுவே அவளை மேலும் அழகாக்கியதுபோலத் தோன்றிற்று.

நான் சிறுவயதில் என் அப்பாவால் பாலியல் தொல்லைகளுக்கு ஆளானவள். அதுதான் இயல்பு என நினைத்து, பின்பு வளர்ந்தபிறகு, எல்லாமே அப்பாவின் காம விளையாட்டுகள் என்று புரிஞ்சது. நான் பயந்து மறுக்கிறப்ப அப்பா என்ன மிரட்டினார். ஆனா நான் மிரட்ட ஆரம்பிச்சப்ப... எல்லோர் கிட்டயும் சொல்லிடுவேன்னு சொன்னப்ப பதுங்கினார். ஆனா அம்மாட்ட போய் நான் அவர அணுகியதா சொல்லிட்டார். அம்மா என்னய வெறுத்துப்போய் பேசாம இருந்தாங்க. எவ்வளவோ கெஞ்சினேன். தப்பு செஞ்ச அவர, நம்ப தெரிஞ்ச அளவுக்கு என்னய நம்பல. ஹாஸ்டல்ல சேத்தாங்க. நிறைய வாசிச்ச, வாழ்க்கை குறித்து யோசிச்ச காலகட்டம் அதுதான்.

அப்பா ஏன் அப்டி செஞ்சார்... அப்பாவோட பாலியல் தேவைகள அவரால உலகத்துக்கு சொல்ல முடில... அந்தரங்கமா அது அவர ஒரு விலங்கு மாதிரி துரத்திட்டே வந்துச்சு. அவரே ஒரு கட்டத்துல அந்த விலங்கா ஆயிட்டார் மேம்.

பாலியல் சுதந்திரம் பத்தி பேசுறீங்களா கெளரி.

அது தேவைப்படுறவங்க என்னதான் செய்யணும் பின்ன... மறச்சு வச்சு அது சம்பந்தமான குற்றங்களுக்கு வித்திடுறது தவிர.

பாலியல் கட்டுப்பாடுகளும் நம்ம சட்டத்தோட ஒரு அங்கம்தான கெளரி?

ம்... எல்லாமே மனுஷனால எழுதினது, உருவாக்கினதுதான். பிராமணர்கள் புலால் சாப்பிடுறவங்களா இருந்திருந்தா, அவங்க புலாலை பருப்புக்குப் பதிலா பரிந்துரைத்திருப்பாங்க. யாருக்கு எது வாய்க்குதோ அதத்தானே முன்னெடுப்பாங்க...

நான் அவளை கூர்மையாகப் பார்த்தேன். அந்தக் கண்களில் துளி பொய்மையும் இல்லை.

யாரையும் குற்றம்சாட்டாம நானே என்ன வளர்த்தெடுக்கணும்னு முடிவு செஞ்சேன். மாநில ரேங்க் எடுத்து படிச்சேன். நியூட்ரிஷன். இன்னிக்கு சென்னையோட பெஸ்ட் டயடீஷ்யன் நான்தான். உங்க கதைகள பல வருஷமா வாசிக்கிறேன். குடும்பங்கிறது ஒரு பம்மாத்து ஹலூசினேடட் சிஸ்டம்னு நீங்கல்லாம்தான் எழுதணும், ஆனா பயப்படுறீங்க...

பயப்படுறேனா...

ஆமா... உங்க கதைல அத தொடுவீங்க... ஆனா ...

எனக்கான குழப்பமாகூட இருக்கலாம் இல்லியா கெளரி.

அவள் சிரித்து இருக்கறது நியாயமும்தான... பட்... அடுத்த கத எழுதுறப்ப என்ன நினைச்சிக்கோங்க...

அவளது கைகுலுக்கலில் அத்தனை பலமிருந்தது. ஒரு பெரிய சக்தியை அவள் உள்ளடக்கி இருக்கிறாள் என்று தோன்றிற்று. இரண்டு நாளாக அவள் சொன்ன வார்த்தைகளின் மீதே மனம் ஈ மாதிரி மொய்த்துக் கொண்டிருக்கிறது.

துபாயிலிருந்து ஒரு தோழி மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.

அன்புள்ள தமயந்தி

சொல்லமுடியாத ஆனால் சொல்ல நினைக்கிற விஷயங்களை எழுதுகிறீர்கள். இங்கு என் கணவர் தொழில் செய்வதால் இங்கு வாழும் பெண் நான். குழந்தைகளில்லை. ஒரு குழந்தை பிறந்து இறந்துவிட்டது. எங்களது திருமணம் காதல் திருமணம்தான். ஆனால் எனக்கு முன்னமே அவர் ஒரு பெண்ணை காதலித்திருந்தார்.

குழந்தைகள் பல இருக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு. ஆனால் ஒன்றுகூட இல்லை. வெறுமையான வாழ்வில் அவரும் என்னிடமிருந்து விலகிவிட்டது போலிருக்கிறது. இப்போது அவர் காதலியை எங்கோ சந்தித்திருக்கிறார். அவர்களிடையே பேச்சு, சாட் இருக்கிறது. இதற்கென்ன செய்ய நான். தெரியாத தேசம். பகிர யாருமில்லா காலத்தில் கண்ணில்பட்டது மின்னம்பலத்தில் உங்கள் கட்டுரை.

என்னுடன் இந்தக் குழப்பத்தில் துணை வருவார்களா மின்னம்பலம் நண்பர்கள்?

நிச்சயம் தோழி. உங்கள் கடிதத்தை பொதுவில் வைத்துவிட்டேன். நீங்கள் உங்கள் வெறுமையால் உங்கள் கணவரின் காதலிக்கும் அவருக்குமான உறவை தவறாக நினைக்க வாய்ப்பிருக்கிறது. காதலிகள் தோழிகளாக இருக்கக்கூடாதா என்ன? அந்தப் பெண்ணிடம் நீங்களேகூட மிக அமைதியான முறையில் பேசலாம். உங்கள் கணவர், அந்தப் பெண், நீங்கள் என்று மூவருமே முடிவு செய்யலாம்.

நண்பர்களே, இவர் எப்படி தன் சிக்கலை மீட்டெடுக்கலாம் என்று நீங்களும் அவருக்கு கீழிருக்கும் கமெண்ட் பெட்டியில் உங்கள் ஆலோசனைகளைச் சொல்லலாமே...

கட்டுரையாளர் குறிப்பு : எழுத்தாளர் தமயந்தி

ஒடுக்கப்பட்ட பெண்களின் சார்பில் தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர். இவரது 'அக்கக்கா குருவிகள்', ' சாம்பல் கிண்ணம்' சிறுகதைத் தொகுப்புகள் வாசகர்களிடையே பரவலான கவனத்தைப் பெற்றவை. இவரது முக்கிய கட்டுரைத் தொகுப்பு 'இந்த நதி நனைவதற்கல்ல'. திரைப்படத்துறையில் பணியாற்றி வருகிறார். இயக்குநர் மீரா கதிரவனின் 'விழித்திரு' திரைப்படத்தில் வசனமும், பாடலும் எழுதியுள்ளார்.

வல்லமை தாராயோ - 1 - தமயந்தி

வல்லமை தாராயோ - 2 - தமயந்தி

வல்லமை தாராயோ - 3 - தமயந்தி

வல்லமை தாராயோ - 4 - தமயந்தி

வல்லமை தாராயோ - 5 - தமயந்தி

வல்லமை தாராயோ - 6 - தமயந்தி

வல்லமை தாராயோ - 7 - தமயந்தி

செவ்வாய், 2 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon