மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 26 ஏப் 2017

வல்லமை தாராயோ : 7 - தமயந்தி

வல்லமை தாராயோ : 7 - தமயந்தி

நான் சமீபத்தில் சந்தித்தப் பெண் மிகப் பெரிய ஒரு பரிதவிப்பை என்னுள் ஏற்படுத்தி விட்டார். தன்னை ஒரு எச். ஐ. வி நோயாளி என்று அறிமுகப்படுத்திக் கொண்டவர் அதன் காரணத்தை சொல்லிய போது தூக்கி வாரிப் போட்டது.பெற்றோரின் தலையீட்டன் காரணமாக அவரது காதலனை கல்யாணம் செய்து முடிக்க இயலா வாழ்வில் ஒரு குடிகாரனைக் கல்யாணம் செய்திருக்கிறார்.தாளொண்ணா துயரம். பொருளாதார ரீதியாக பெரும்துயரத்தில் மிகப் பெரிய உடல்நலக் குறைவு தொடர்ந்த கருக்கலைப்புகளால் ஏற்பட்டிருக்கிறது.

ஏன் வாழ்க்க இப்படி ஆகணும்... யார் யாரோட வாழ்க்கய வாழ்றது.. யார் யார் தலயெழுத்த மாத்தி எழுதறது..

எனக்கு என்ன பதில் சொல்லவென்று தெரியவில்லை. உலகமெங்கும் இந்தக் கேள்வி வேறுவேறு ரூபங்களில் வேறுவேறு திசைகளில்ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

ரெண்டு தபா மாத்திர சாப்டேன்... பொழக்க வச்சிட்டாங்க... நெதம் பிரச்னைனா சாகப் போய் பொழச்சு வீட்டுக்கு வந்தா ஆஸ்பத்திரிலருந்து வீட்டுக்கு வந்தப்பவும் அன்னிக்கு ராத்திரியே ...அந்த எழவ எப்படி என் வாயால சொல்ல...

அவர் இப்போது மிக நன்றாக இருக்கிறார்.

பழய வலிகள ஏன் பேசுறீங்க... விடுங்க என்றேன் நான்.

அவர் விடவில்லை. பேசணும்...சொல்லணும். பல விஷயம் பேசாததுனால வாழ்க்கையே புரியல... பேசணும்... ஹெச் ஐ வி பத்தி என்ன தெரியுது ... எல்லாருக்கும்... எதுவுமே தெரியல...

சொல்லுங்க

என் வாழ்க்கைய எழுதுங்க தமயந்தி.. என்னோட பேர் போட்டே எழுதுங்க

இப்ப சட்டரீதியா நிறைய விஷயங்கள் ஹெச் ஐ வி நோயாளிகளுக்காக நிறைவேற்றப்பட்டிருக்கு தெரியுமா...

ஆமா...கேள்விப்பட்டேன்....வேலைதுந்து ஹெச் ஐ விநோயாளிகளை வெளியேற்றக்கூடாதுன்னு...

கேட்கக் கூடாது என்று தீர்மானித்தாலும் மனதில் அவர் எப்படி அந்த இன்பெக்ஷனை வாங்கினார் என்று கவலையாய் இருந்தது. அவரது முகம் அத்தனை பிரகாசமாய் இருந்தது. நோயின் ஒரு துளி நிழலோ அந்த முகத்தில் , பார்வையில் இல்லை. நான் அவர் பக்கம் போய் உட்கார்ந்து அவர் தோளில் கை வைத்தேன்.

அவர் சிரித்து.. தொட்டாலே ஒட்டிக்கும்னு சொல்லி தொடவே சிலர் தயங்குவாங்க...

அவர் என் தோளில் சாய்ந்து சிரிக்கிறாற் போல் ஒருக்களித்து சிரித்தாள். என்ன காரணத்திற்காக அவர் என்னிடம் இத்தனை நாள் பழகிய பாவனையில் பேச வேண்டும் என்று தோன்றிற்று. ஒரு வேளை எழுத்துக்கு அத்தகைய வலிமை இருக்கலாம். அல்லது சிலரைப் பார்த்தால் அப்படி ஒரு நெருக்கம் தோணலாம். வாழ்க்கையில் மிக நெருக்கமானவர்களிடம்.கூட பகிராத விஷயங்களை புதிதாக சந்திக்கும் சிலரிடம் நாம் பிரயத்தனமின்றி மிக இயல்பாக பகிர நேரிடும்.

அவரிடம் எந்த தங்க நகையுமில்லை. ஆனால் மனதில் எந்த நிலையிலும் அவர் எதையும் இழந்தவராயில்லை. பணமும் வீடு பொருட்களும் சொத்தென்று கருதப்பட்ட சூழலில் பணமற்று வீடற்று பொருளற்று ஆனால் எல்லாவற்றையும் மீறிய மட்டற்ற மகிழ்ச்சியுடன் சிலர் இருக்கிறார்கள். இவரைப் போல என்றே தோன்றிற்று. என் மருத்துவ தோழி ஒருத்தி ஹெச் ஐ வி அன்றாட வாழ்க்கையை முடக்க வல்லது என்று சொன்னாள். ஜோதி என்னும் பெண் தனது கருக்கலைப்பின் போது உபயோகப்படுத்திய ஊசியால்மூலமாக எச். ஐ. வி பாதிக்கப்பட்டு அது தெரிந்தும் அவரதுகணவரால் கை விடப்பட்டவர்.

இன்று ஹெ. ஐ. வி க்காக போராடும் சமூக ஆர்வலராக இருக்கும் அவர் கூறுவது - வைரஸ் என் வாழ்க்கையை ஆதிக்கம் செலுத்த கூடாது. நான் வைரசை ஆதிக்கம் செலுத்துவேன் என்று. பாலியல் நோய்களை முன்னால் இதே போல சமூக அங்கீகாரமில்லாமல் இழிவாக பேசினார்கள். பாலியல் இச்சை என்பது அசிங்கமான அந்தரங்கமாக கருதப்படும் சமூகத்தில் அதைப் பற்றிய உரையாடல் நிகழாமல் இருக்கிறது. ஆனால் அந்தக் குழப்பங்கள் விளைவிக்கும் நோய்களையும் அதே போல குழப்பங்களோடே தான் அணுகுகிறோம். அதனாலேயே தான் காண்டம் உபயோகப்படுத்துங்கள் என்ற ஒரே வரியில் நம் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் சொல்லிக் கொடுக்கப்படுகிறது.

PEP என்றொரு சிகிச்சை இருக்கிறது. ஒரு ஹெச். ஐ. வி நோயாளியுடன் உடலுறவு வைத்துக் கொள்ள நேர்ந்தாலோ, சந்தர்ப்பவசத்தால் ஹெச். ஐ. வி நோயாளிகளுடன் உறவு வைத்துக் கொண்டோமோ என்ற சந்தேகம் இருந்தாலோ, உடலுறவு கொண்ட 72 மணி நேரத்திற்குள் PEP சிகிச்சை எடுத்துக் கொண்டால் ஹெ. ஐ. வி பாதிப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளலாம். ஆனால் இதையெல்லாம் நம் அரசாங்கம் தெளிவாக பிரகடனம் செய்வதில்லை.

இதை பள்ளியில் கல்லூரியில் மிக முக்கியமாக பாடமாக வைக்க வேண்டும். ஐயோ என்று லபோ திபோ என்று குதிக்கும் கலாசார காவலர்களை முதலில் நாடு கடத்த வேண்டும்.

நான் சொன்னவுடன் என்னுடன் இருந்த தோழி சிரித்தார்.

எனக்கு இப்ப எப்படி வந்தது தெரியுமா... என்னை என்னோட அப்பா அம்மா எந்தப் பையன கல்யாணம் செஞ்சிக் கொடுக்க மறுத்தாங்களோ, அந்தப் பையனோட வாழ்றேன். அவருக்கு ஹெச். ஐ. வி... ஆனா சந்தோஷமா வாழுறேன் ...

அவர் எழுந்து போனார். போகும் முன் என்னை இறுக அணைத்தார். அதில் இருந்த நம்பிக்கை எந்த உயிர்க்கொல்லியையும் விரட்டி விடும் என்பது எனக்குப் புரிந்தது.

அவர் கடக்கும் போது சமீபத்தில் வந்த மின்னஞ்சலொன்று எனக்கு ஞாபகம் வந்தது

அன்புள்ள அக்கா

யாரிடமும் சொல்ல முடியாத பிரச்னை. எனக்கு அந்தரங்க பகுதியில் புண்கள் உள்ளன. ஆனால் அம்மாவிடம் சொல்ல முடியவில்லை. பிரீயட்ஸ் வந்தால் எரிகிறது. ஒரு முறை வீட்டுக்குள்ளேயே என் மாமா அங்கே என்னை ஏதேதோ செய்தார். அவர் அம்மாவின் தம்பி. நான் மொபைலில் தான் உங்கள் பகுதிபாடிக்கிறேன். கல்லூரி ஃபைனல் செமஸ்டர்...நான் என்ன செய்ய

அன்புள்ள தங்கை,

உங்கள் வீட்டுக்கு பக்கமிருக்கும் மருத்துவமனை முகவரி, தொலைபேசி எண் கொடுத்திருக்கிறேன்.

முதலில் பயப்பட வேண்டாம். இப்போது வீரியமான மருந்துக்கள் உள்ளன. விருப்பமில்லா ஸ்பரிசம் உங்கள் தவறல்ல. தைரியமாய் இருங்கள். எப்போதென்றாலும் தொடர்பு கொள்ளுங்கள். மருத்துவரிடம் போய் வந்தப் பிறகு மின்னஞ்சல் செய்யவும்.

கட்டுரையாளர் குறிப்பு: எழுத்தாளர் தமயந்தி

ஒடுக்கப்பட்ட பெண்களின் சார்பில் தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர். இவரது 'அக்கக்கா குருவிகள்', ' சாம்பல் கிண்ணம்' சிறுகதைத் தொகுப்புகள் வாசகர்களிடையே பரவலான கவனத்தைப் பெற்றவை. இவரது முக்கிய கட்டுரைத் தொகுப்பு 'இந்த நதி நனைவதற்கல்ல'. திரைப்படத்துறையில் பணியாற்றி வருகிறார். இயக்குநர் மீரா கதிரவனின் 'விழித்திரு' திரைப்படத்தில் வசனமும், பாடலும் எழுதியுள்ளார்.

வல்லமை தாராயோ - 1 -தமயந்தி

வல்லமை தாராயோ - 2 -தமயந்தி

வல்லமை தாராயோ - 3 -தமயந்தி

வல்லமை தாராயோ - 4 -தமயந்தி

வல்லமை தாராயோ - 5 -தமயந்தி

வல்லமை தாராயோ - 6 -தமயந்தி

புதன், 26 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon