மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

அதிமுக இனி என்னாகும்? -மினி தொடர் - 6

அதிமுக இனி என்னாகும்? -மினி தொடர் - 6

போர் என்பது ரத்தம் சிந்துகிற அரசியல். அரசியல் என்பது ரத்தம் சிந்தாத போர்! – உலகப் புகழ்பெற்ற இந்தச் சொற்றொடர் தமிழ்நாட்டிலும் மெய்ப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அதிமுக உடைவதுபோல் உடைந்து, இணைவதுபோல் இணையத் தயாராகிறது. குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பேச்சுவார்த்தைகள் யாரால், எப்போது தொடங்கப்படும் என்று அறிவிக்கப்படுவதாக இருக்கிறது. ஆனால் இரு அணிகளும் இணையவிடாமல் பழைய நிலையை பாதுகாப்பதில்தான் டெல்லி சூத்திரதாரிகளின் சூட்சுமம் அடங்கியிருக்கிறது.

சின்னங்களின் வலிமை!

தமிழகத்தின் மண்ணில் இரட்டை இலையும், உதயசூரியனும் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக பிரிக்கமுடியாத பந்தத்தைக் கொண்டுள்ளன. இந்தச் சின்னங்கள் எழுதப்படாத குட்டிச் சுவர்கள்கூட இல்லை என்பதே தமிழ்நாட்டின் அரசியல் தட்பவெப்பம்.

சின்னங்களின் ஊடுருவல் குக்கிராமத்து மக்கள் முதல் மாநகரத்து மக்கள் வரை எப்படித் தாக்கியிருக்கிறது என்பதற்கு ஒரு சிறு உதாரணம்போதும்.

அதிமுக-வில் சென்னை மாநகரத்தில் சக்திவாய்ந்த நபராக திகழ்ந்த சேகர்பாபு, 2011 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் திமுக-வில் சேர்ந்தார். அந்த பொதுத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டார். தேர்தல் நாளன்று சேகர்பாபுவை சந்தித்த பலரும், ‘நீதாண்ணே ஜெயிப்பே… ரெட்ட இலைக்குத்தான் போட்டேன்’ என்று சிரித்துக்கொண்டே சொல்லிச் சென்றனர். சேகர்பாபுவுக்கு அதிர்ச்சி. அவரோ உதயசூரியனில் நிற்கிறார். ஆனால் இத்தனை வருடங்களாக அவரைப் பார்த்தாலே மக்களுக்கு இரட்டை இலைதான் நினைவுக்கு வரும். அதனால் சேகர்பாபு என்றாலே இரட்டை இலை என்றே நினைத்து குத்திவிட்டார்கள். தன் முந்தைய சின்னத்தின் தாக்கத்தை நினைத்து ஒருமாதிரி ஆகிவிட்டார் சேகர்பாபு. சென்னை போன்ற மாநகரத்திலேயே இப்படிப்பட்ட நிலை என்றால் குக்கிராமங்களின் நிலையை யோசித்துப் பாருங்கள்.

அதனால்தான் இந்தியா போன்ற பண்படுத்தப்படாத, கல்வி அறிவு முழுமையடையாத, குறியீடுகள் மூலமே கோட்பாடுகளை வலியுறுத்துகிற தேவை இன்னமும் இருக்கிற மண்ணில் அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் இன்றியமையாதவையாகிவிட்டன.

இரட்டை இலை மீளுமா?

இந்த நிலையில். இப்போது அதிமுக-வில் ஏற்பட்டுள்ள அதிரடி திருப்பத்தின் மூலம் இரு அணிகளும் ஒன்றிணைவது, அதன்மூலம் இரட்டை இலைச் சின்னத்தை மீட்பது என்றும் பேச்சுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இரட்டை இலையை மீட்பதற்காகவே தினகரனை ஓரங்கட்டிவிட்டோம் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பும், எங்கள் தர்மயுத்தத்துக்கு முதல் வெற்றி என்று ஓ.பன்னீர் தரப்பும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இவர்கள் இருவருக்குமான நிபந்தனைகள், தேவைகள், பதவி நோக்கங்கள் பூர்த்தியானால்தான் இரு அணிகளுமே ஒன்றிணைய முடியும். அது அவ்வளவு எளிதில் நடந்துவிடுமா – நடக்கத்தான் விட்டுவிடுவார்களா டெல்லி சூத்திரதாரிகள் என்பதுதான் இன்றைய அரசியல்.

கொங்கு லாபி!

ஆம். அவர்களின் திட்டம் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான கொங்கு லாபியை உருவாக்கி, அவரை முதல்வர் பதவியில் தொடரச் செய்ய வேண்டும். அதன்மூலம் ஓ.பன்னீருக்கும் எடப்பாடி பழனிசாமிக்குமான பதவிச் சிக்கலை இன்னும் நீட்டிக்க வேண்டும். இணைவதுபோல வந்த இரு அணிகளும் பதவிச்சண்டை காரணமாகத்தான் இணைய முடியவில்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்பதே டெல்லிவாலாக்களின் இப்போதைய சூட்சும சூத்திரம்.

லலிதா குமாரமங்கலம், சி.பி.ராதாகிருஷ்ணன், கேரள கவர்னர் சதாசிவம் போன்ற முக்கியஸ்தர்கள் எடப்பாடி தமிழக முதல்வர் பதவியில் தொடர விரும்புகிறார்கள். இவர்கள் மூலம் எடப்பாடி டெல்லிக்கு ஒரு செய்தியைச் சொல்லியிருக்கிறார்.

‘நான் இப்போது முதல்வர் பதவியிலிருந்து விலகினால், தினகரனின் அரசியல் மைலேஜ் அதிகரித்துவிடும். பிஜேபி-யின் கைப்பிடியில்தான் அதிமுக-வின் அனைத்து அசைவுகளும் நடக்கின்றன என்பது உறுதிப்பட்டுவிடும். அதன்மூலம் தினகரன் மீண்டும் ஏதோ ஒருவகையில் அரசியல் முக்கியத்துவம் பெறுவதற்கு அது காரணமாகிவிடும். மேலும் ஓ.பன்னீரை எதிர்த்துதான் 122 எம்.எல்.ஏ.க்களுடன் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றிருக்கிறோம். எனவே, அவர் முதல்வர் பதவியைக் கேட்பதில் எந்த உரிமையும் இல்லை’ என்று வாதிடுகிறார்கள்.

இதைத்தானே எதிர்பார்த்தது டெல்லி…?

-தொடரும்...

அதிமுக இனி என்னாகும்? மினி தொடர்-1

அதிமுக இனி என்னாகும்? மினி தொடர்-2

அதிமுக இனி என்னாகும்? மினி தொடர்-3

அதிமுக இனி என்னாகும்? மினி தொடர்-4

அதிமுக இனி என்னாகும்? மினி தொடர்-5

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon