மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

வல்லமை தாராயோ - 06 - தமயந்தி

வல்லமை தாராயோ - 06 - தமயந்தி

சமீபத்தில், முகநூலில் ஒரு பெண் வாக்குமூலம் மாதிரி அழுததை கவிஞர் ஈழவாணியின் பக்கத்தில் பார்த்தேன். காதலிக்கப்பட்டு, நிராகரிக்கப்பட்டவர்கள் ஏன் தற்கொலை முடிவுக்கும் பின், தன்னையே வதைத்துக்கொள்ளவும் முனைகிறார்கள் என்பது முக்கியமான கேள்வியாக இருக்கிறது. காதல் என்பது அன்பால் பிணைக்கப்படுவது. மிகவும் உணர்வுசார்ந்த நிலையில் உடல்களால் மனங்களை காமம் என்னும் கருவியால் கண்டடையும் முனைப்பின் அற்புதமான உச்சம் காதல்.

ஆனால் இன்றைய நவீன உலகில் அது வெறும் commodity ஆக ஆகிறது. முகநூலில் உள்ள பெண் கதறி அழுகிறார். தனக்கு யாருமில்லை என்கிறார். தலையில் ரத்தம் வழிகிறது. மிகுந்த மன உளைச்சலில் உள்ளார். அவர் ஈழப் பெண்போல இருந்தார். போரின் அத்தனை அவலங்களும் அவரில் ஏற்படுத்தி இருக்கக்கூடிய துயரங்களும் இழந்த உறவுகளின் வலி நிறைந்த நினைவுகளுடன் இந்த வலியும் அவரை வதைத்த விதத்தை என்னால் கற்பனை செய்துகூட பார்க்க இயலவில்லை.

அந்த வீடியோவை என்னால் முழுவதுமாகப் பார்க்க இயலவில்லை. பார்க்க மனதில் வலுவில்லை. தைரியமில்லை. அவள் ஏதும் தன்னுயிர் குறித்து செய்திருக்கக் கூடாதென்று மூன்று முறை தற்கொலை முயற்சி மேற்கொண்ட என்னால் நினைக்காமல் எப்படி முடியும்?

காத்திருப்பதில் குறிப்பாக, காதலில் காத்திருப்பதில் நாம் தயாராயில்லை. நம் சமூகம் அதை பெரும்பாலும் அனுமதிப்பதில்லை. கெளரவக் கொலை செய்யப்பட்ட சங்கரின் கெளசி, இளவரசின் திவ்யாவை சந்தித்து எழுதியது எத்தனை வலி நிறைந்தது. என்னைப் பொறுத்தளவில் திவ்யா மனதளவில் மரணித்தே உயிருடன் வாழ்கிறார். இதற்கு நீங்களும் நானுமாகிய சமூகம் முக்கிய பொறுப்பு வகிக்கிறோம். ஒவ்வொரு நிமிடமும் ரசித்து காதலித்தவனை எப்படி மறக்க இயலும் எனும் திவ்யாவின் வார்த்தைகள் நம் பல பெண்களின் மனதில் உறைந்திருக்கும் வார்த்தைகள்.

சமூகச் சூழலால் பல பெண்கள் அவர்கள் நேசித்த ஆண்களை திருமணம் செய்துகொள்ள இயலவில்லை. வேறு யாருக்கோ வாழ்க்கைப்பட்டு மனதளவில் நொந்து கல்யாணம் செய்தவனோடு படுக்கையைப் பகிர்ந்து பின், காதலித்தவனை எங்கேயாவது கடந்து ரகசிய வலி நிறைந்த புன்னகையோடு வாழும் வாழ்க்கையின் துயரத்தை மரணம் வரை அவர்களே அறிந்திருக்க மாட்டார்கள். இந்த சமூக கட்டுமானம் அதை ஏற்க வைக்கிறது.

இங்கு காதல் கெட்டவார்த்தை. ஆனால் முகம் தெரியாத ஒருவனை ஜாதகம் என்னும் மாயரூபம் ஒத்துப்போவதால் ஒரே நாளில் "பெரியோர்களால்" நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்து வைக்கப்பட்டு அன்று இரவே முகம் தெரியாத ஒருவனோடு படுக்கையைப் பகிர்வது எப்படி ஏற்புடையதாகிறது? அங்கீகரிக்கப்பட்ட பாலியல் தொழிலாக நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் அதனாலேயே அடையாளப்படுத்தப்பட வேண்டியிருக்கிறது.

சமீபத்தில், நான் ஒரு கல்லூரி பேராசிரியரை சந்தித்தேன். அவர் ஏற்கனவே வேறொருவரைக் காதலித்தது எனக்குத் தெரியும்.

"என்ன வாழ்க்கை... மனசுல ஒருத்தன்... இன்னொருத்தனோட வாழ்க்க... வாழ்க்கையே தட்டாமால ஆடுது... வாழப் பிடிக்கல... டிப்ரஷன் மாத்திரைல வாழ்க்கை ஓடுது..."

அவரின் வேதனையை அவரால் பகிரங்கமாகச் சொல்ல இயலாது. சில பெண்கள், டெலூஷன் எனும் மனபிரமை நோயால் பாதிக்கப்பட்டு தான் காதலித்து, அது கைகூடாமல் போன ஆண்களின் வீட்டு வாசலுக்கே சென்று, அந்நபரே தன் கணவர் என உரிமை கொண்டாடிய சம்பவங்களையும் கேள்விப்பட்டிருக்கிறேன். பெண்களின் அகவுலகம் சார்ந்த நோய்கள் சமூகத்தில் பேசப்படாமலே உள்ளன. பேசப்படும்போது திருமணம் அவர்கள் உடல் மற்றும் மனதில் ஏற்படுத்தும் வலியை அவர்கள் உச்சரிக்க வேண்டியிருக்கும். அந்தக் குரல்கள் கலக்கும் காற்றையே இந்தச் சமூகம் சுவாசிக்க வேண்டியிருக்கும். அதன் விளைவு என்னவாக இருக்கும்? இருக்கக்கூடும்?

அந்தப் பேராசிரியர் என்னைப் பார்த்துக் கேட்டார், உனக்கும் லவ் பெயிலியர்தானே...

இல்லை என்றேன்

ஹேய்... கதைக்காத.... நீ விரும்பிய பையனை திருமணம் செய்யவில்லைதானே

ஆமா...இல்ல...

என்ன சொல்ற

காதல் தோத்துப் போகலயே...அவனும் என்ன மறக்கல... நானும்... பின்ன எப்படி

கல்யாணம் பண்ணிக்கலயே

பண்ணி ஒரே வீட்டுல சாம்பார் புளிக்குழம்பு வச்சு சாப்டல...அதான...

அவர் சிரித்தார்

அதுக்கில்ல

நானும் டிப்ரஷன் மாத்திரதான் சாப்டுறேன்... ஆனா ... வேறொரு உலகத்துல வாழுறேன்... அந்த உலகத்துல உங்க சட்டம்லாம் இல்ல

அவர் மகிழ்ச்சியோடு என் கைகளைப் பற்றிக் கொண்டார்.

எனக்கு போன வாரம் வந்த மூன்று மின்னஞ்சல்கள் நினைவுக்கு வந்தன. ஒன்றும் மற்றொன்றும் வேறு வேறாக எனக்குத் தெரியவில்லை. அன்புள்ள அக்கா என்று ஆரம்பிக்கும் மின்னஞ்சல்கள் அவை. ஒட்டுமொத்தமாக தாங்கள் விரும்பியவொரு வாழ்வை வாழமுடியாத வலியைச் சொல்கின்றன.

"எனக்கு ஜீன்ஸ் போட மிகவும் பிடிக்கும். நான் பிறந்தது ஒரு கிராமம். சின்ன வயதில் நதியா போடும் உடைமேல் ரொம்ப ஆசை உண்டு. அதெல்லாம் சினிமாக்காரிக போடுறது என்று அம்மா சொல்லி விடுவாள். அப்பா வாயில்லா பூச்சி. என்னுடன் படித்த ஒரு பையனை காதலித்தேன். வேறு சாதி, வர்க்கம் என்று அம்மா நிராகரித்துவிட்டாள். இன்று எல்லாமே நிராசையாகப் போய்விட்டது.

இப்போது எனக்கு பெரிய ஆசைகளில்லை. என்னவனுடன் ஒரு நாள் வாழ்ந்துவிட வேண்டும் என்று அவனைத் தேடிப்போய் நின்றேன். அவன் அதிர்ந்துவிட்டான். எனக்கு என்ன வேண்டும் என்று கேட்டான். அவன் கண்களில், குரலில் அத்தனை ஆசை இருந்தது. ஜீன்ஸ் என்றேன். அவன் எனக்கு வாங்கிக் கொடுத்தான்.

என் வீட்டு அலமாரியில் அதை வைத்திருக்கிறேன். ரகசியமாக தொட்டு, யாருமில்லாதபோது அணிந்து பார்த்து, நான் ஆசைப்பட்டது அவனா, ஜீன்ஸா, என்று என்னை நானே கேள்விப்பட்டு.

இந்தத் தோழியின் மின்னஞ்சல் நான் மேற்சொன்ன விவாதத்தை ஏற்படுத்த வேண்டும்.

கட்டுரையாளர் குறிப்பு : எழுத்தாளர் தமயந்தி

ஒடுக்கப்பட்ட பெண்களின் சார்பில் தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர். இவரது 'அக்கக்கா குருவிகள்', ' சாம்பல் கிண்ணம்' சிறுகதைத் தொகுப்புகள் வாசகர்களிடையே பரவலான கவனத்தைப் பெற்றவை. இவரது முக்கிய கட்டுரைத் தொகுப்பு 'இந்த நதி நனைவதற்கல்ல'. திரைப்படத்துறையில் பணியாற்றி வருகிறார். இயக்குநர் மீரா கதிரவனின் 'விழித்திரு' திரைப்படத்தில் வசனமும், பாடலும் எழுதியுள்ளார்.

வல்லமை தாராயோ - 1 - தமயந்தி

வல்லமை தாராயோ - 2 - தமயந்தி

வல்லமை தாராயோ - 3 - தமயந்தி

வல்லமை தாராயோ - 4 - தமயந்தி

வல்லமை தாராயோ - 5 - தமயந்தி

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon