மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 18 ஏப் 2017

அதிமுக இனி என்னாகும்? மினி தொடர் -2

அதிமுக இனி என்னாகும்? மினி தொடர் -2

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் தன்னிடம் போட்டி போட்டுக் கொண்டு காட்டிய பவ்யத்தை பிரதமர் மோடி உணர்ந்தார். இந்த இருவர் பற்றியும் மத்திய உளவுத்துறையின் அறிக்கைகள் அவருக்கு முன்பே சென்று சேர்ந்திருந்தன.

ஜெயலலிதா மறைவின்போது அஞ்சலி செலுத்த சென்னை வந்த பிரதமர் மோடி… ராஜாஜி ஹாலில் ஜெயலலிதா உடல் அருகே நின்றிருந்த ஓ.பன்னீரை எப்படித் தேற்றினார் என்றும், அதற்கு ஓ.பன்னீர் என்ன மாதிரியான ரியாக்‌ஷன்கள் காட்டினார் என்றும் நாடறிய தொலைக்காட்சிகள் காட்டின. பிரதமர் காரில் ஏறியபின்னரும், ஏதோ அவரது பாதுகாவலர் போல, தமிழ்நாட்டின் முதல்வர் ஓடிவருவதும், பிரதமர் மீண்டும் தோளில் தட்டிவிட்டுச் செல்வதும் உருக்கமான நிகழ்வுகளைத் தாண்டிய உள்ளரசியலை உலகுக்கு எடுத்துக்காட்டின.

ஓ.பன்னீர் செல்வம் கடந்த சில ஆண்டுகளாகவே சசிகலா அணியால் பாதிக்கப்பட்டவர். பொதுப்பணித்துறை போன்ற முக்கிய துறைகளை கையாண்டு செழிப்படைந்தவர். நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியும் அ.தி.மு.க.வின் மிகப் பெரும் பொருளாதாரச் சுரங்கமாக இருப்பவர், தேர்தல் காலத்தில் எடப்பாடியின் வீடுதான் பெரும் பரிவர்த்தனை மையமாக செயல்பட்டது என்றெல்லாம் மத்திய உளவு நிறுவனங்களின் அறிக்கைகள் மூலம் டெல்லிக்கு தெளிவுபடுத்தப்பட்டன.

சசிகலா மீது ஏன் கோபம்?

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவும் குஜராத் முதல்வராக இருந்த மோடியும் நெருங்கிய நண்பர்கள். மோடி சென்னையில், ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டுக்கு வந்தபோது 18 வகை கூட்டுகளுடன் விருந்து பரிமாறப்பட்டது பற்றி ஆங்கில சேனல்களும் தமிழ் இதழ்களும் விரிவாக விவாதித்த காலம் உண்டு. ஜெயலலிதாவுக்கு இவ்வளவு நெருக்கமாக இருந்த மோடி… ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஏன் அ.தி.மு.க.வை குறிவைத்து குதறுகிறார்?

துக்ளக் ஆண்டு விழாவுக்கு சென்னை வந்த குஜராத் முதல்வர் மோடியிடம் பத்திரிகையாளர் சோ ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்குமான இடைவெளியில் நடக்கும் சில விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொண்டிருக்கிறார். அதன் பிறகு ஜெயலலிதாவே சில சந்தர்ப்பங்களில் சசிகலா பற்றிய தனது குமுறல்களை கொட்டியிருக்கிறார். அதையெல்லாம் இப்போது நினைவுபடுத்திதான் ஆக்‌ஷனில் இறங்கியிருக்கிறார் மோடி. சசிகலா அ.தி.மு.க.வின் தலைமையைக் கைப்பற்றத் துடித்தபோதும், தமிழகத்தின் ஆட்சியை கைப்பற்ற முயன்றபோதும் மத்திய அரசின் பல்வேறு துறைகள் சசிகலாவுக்கு செக் வைக்கும் வேலைகளில் தீவிரம் காட்டியதற்கு இதுவும் முக்கிய காரணம்.

டெல்லியை எரிச்சலாக்கிய தினகரன் என்ட்ரி!

இப்படி ஒரு பின்னணியில்தான் சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்ற நிலையில் உடனடியாக தினகரன் துணைப் பொதுச் செயலாளர் ஆக அறிவிக்கப்பட்டார். மேலும் முன்னதாக, தஞ்சை பொங்கல் விழாவில் எம்.நடராஜனும், திவாகரனும் பேசிய பேச்சு அச்சு பிசகாமல் டெல்லிக்கு அனுப்பப்பட்டது. அந்த விழாவில் மோடியை கடுமையாக எதிர்த்தார் நடராஜன். திவாகரனும் கடுமையான பாய்ச்சலை காட்டினார். ஆனால் மோடியின் மூவ்களை ஓரளவுக்கு புரிந்து வைத்திருந்த சசிகலாவுக்கு இதெல்லாம் அச்சத்தையே கொடுத்துக் கொண்டிருந்தன. இந்த நிலையில்தான்… தினகரனை மீண்டும் கொண்டுவருவதில் கொஞ்சம் கூட சசிகலாவுக்கு விருப்பம் இல்லை என்பதை ஏற்கனவே பார்த்தோம். ஆனால் தினகரனின் பிடிவாதத்தால் துணைப் பொதுச் செயலாளர் என்ற பதவியைக் கொடுத்துவிட்டு சிறைக்குப் புறப்பட்டார் சசிகலா. அதன் பின் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

‘’தினகரன் போட்டியிட வேண்டாம்!’’

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அ.தி.மு.க. சசிகலா அணியின் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்தது. பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா தன்னை சந்தித்த அ.தி.மு.க.வினரிடம், ‘தினகரன் இந்தத் தேர்தலில் போட்டியிடக் கூடாது. அவரை இங்க வரச் சொல்லுங்க’ என்று சொல்லி அனுப்பினார். இந்தத் தகவல் தினகரனிடம் தெரியப்படுத்தப்பட்டது. ஆனால் தினகரன் சசிகலாவை சந்திப்பதைத் தவிர்க்கவே செய்தார். எங்கே சிறைக்குச் சென்று சந்தித்தால், தான் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுத்துவிடுவாரோ சசிகலா என்று கருதிதான், சந்திப்பையே தவிர்த்தார் தினகரன்.

சசிகலாவின் எதிர்ப்பை மீறி ஆட்சி மன்றக் குழுக் கூட்டத்தில் தன்னையே ஆர்.கே. நகர் வேட்பாளராக அறிவிக்க வைத்தார். இதனால் கடுமையான நொந்துபோன சசிகலா, இளவரசியிடம், ‘ஏன் இவன் இப்படி பண்றான்? என்னை குறிவைச்சு அடிச்ச மாதிரி, அடுத்து இவனையும் அடிப்பாங்க’ என்று புலம்பியுள்ளார்.

எப்பேற்பட்ட இரும்புகளையும் இளக்கி விடும் இடம்தான் சிறைக்கூடம். அந்த சிறைக்கூடத்தில் தன் இறுக்கமெல்லாம் தளர்ந்து புலம்பிய சசிகலாவின் வார்த்தைகள் பலிக்க ஆரம்பித்தன.

-தொடரும்…

அதிமுக இனி என்னாகும்? - மினி தொடர் 1

செவ்வாய், 18 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon