மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 18 ஏப் 2017

விமர்சனம்: Fate of the Furious - பாதி இருக்கு! பாதி இல்லை?

விமர்சனம்: Fate of the Furious - பாதி இருக்கு! பாதி இல்லை?

Fate of the Furious என எதற்காக டைட்டில் வைத்தார்கள் என்றெல்லாம் யோசிக்கவிடாமல், வின் டீசலின் கோபம் அவரது விதியை எந்தளவுக்கு கொண்டுவந்து நிறுத்திவிடுகிறது என்பதை படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே சொல்லிவிட்டு முழுக்க முழுக்க ஆக்‌ஷனில் கொண்டுசென்றிருக்கின்றனர்.

கடந்த 7 படங்களாக விளையாட்டு, சுதந்திரம், குடும்பம் என மற்றவர்களுக்காகப் போராடிய டாம் முதல் முறையாக தனது மகனுக்காக போராடும் கதை தான் Fate of the Furious. தன் மகனுக்காக டாம் தனது குடும்பத்தையே தியாகம் செய்வது படத்தின் ஹைலைட். ஆனால், கடந்த 7 திரைப்படங்களுக்காக ரசித்துவந்த காமெடி டிராக்குகளையும் ரேஸ்களையும் தவிர்த்துவிட்டதை எப்படிப் பொறுத்துக்கொள்ளமுடியும்?

பிரம்மாண்ட அளவுகளில் சில ரேஸ்களை படத்தில் வைத்திருப்பதால், Fast & the Furious-இன் உயிர் போன்ற ஸ்ட்ரீட் ரேஸ்களை தவிர்த்தது மிகப்பெரிய ஏமாற்றம். ஆனால், கிளைமேக்ஸ் காட்சியில் வரும் நீர்மூழ்கிக் கப்பலின் பிரம்மாண்ட ரேஸினால் ரசிகர்கள் ஸ்ட்ரீட் ரேஸ்கள் இல்லாததை மறந்துவிடுகிறார்கள். நியூ யார்க் நகரத்தை தங்களது 8வது பாகத்துக்கு தேர்ந்தெடுத்தது தான் ஸ்ட்ரீட் ரேஸ்கள் இல்லாமல் போனதற்கு காரணம். கார் மழை பொழியும் சில காட்சிகளை நியூ யார்க்கின் பிசியான மன்ஹாட்டன் நகர வீதிகளில் படமாக்குவது என்றால் அது சாத்தியமல்ல. சூப்பர் ஹீரோ படங்களைப்போல கிராஃபிக்ஸ் காட்சிகளென்றால் சுலபமாக செய்திருப்பார்கள். ஆனால், இது முழுக்க முழுக்க லைவ் ஆக்‌ஷனில் உருவாக்கப்பட்ட படம் என்பதால் பலதரப்பட்ட முயற்சிகளுக்குப்பின் நியூ யார்க் நகரில் படமெடுக்க சிறிய காலமே கிடைத்திருக்கிறது. அந்த குறைந்த கால அவகாசத்தை பெரிய அளவில் பயன்படுத்தவேண்டும் என்பதற்காகத் தான் 100க்கும் மேற்பட்ட கார்களை, Zombie படங்களில் வரும் பேய்களைப் போல ஓடவிட்டிருக்கிறார்கள். டிரெய்லரில் பார்த்திருப்பீர்களே. தியேட்டரில் பாருங்கள் மிரட்டுகிறது. இப்படியாக குறிப்பிட்ட சில காட்சிகளைப் பற்றியே பேசிக்கொண்டிருக்க வைப்பதற்காக அனைத்தும் பிரம்மாண்ட காட்சிகளாக்கப்பட்டு Fast & the Furiousலிருந்து நம்மை விலக்கிக் கொண்டுபோகிறது.

முக்கியமான ஏமாற்றம் காமெடி டிராக். டைரீஸ் கிப்சன் லூட்ரிகாஸ் ஆகியோருக்கு இடையே ராம்சேவை கரெக்ட் செய்ய நடைபெறும் போட்டி ரசிக்கவைக்கும் அதேசமயம், ராக்குக்கும், ஜோனதன் ஸ்டேதமுக்கும் இடையே உருவாக்கப்பட்ட சீரியஸ் காமெடி டிராக்குகள் பால் வாக்கர் இல்லாத வெறுமையை உருவாக்குகிறது. இதில் மட்டுமல்ல, Fate of the Furiousஇன் ஒவ்வொரு காட்சியிலும் எங்காவது ஓரிடத்தில் பால் வாக்கரின் நினைவு வருவதை தவிர்க்கமுடியவில்லை. ஒரு காட்சியில் பால் வாக்கரின் உதவியைக் கேட்கலாமா? என்று கேட்கும்போது அவன் மியாவுடன் சந்தோஷமா இருக்கான். டிஸ்டர்ப் பண்ணா வேண்டாம் எனச் சொல்லி நம்மை ஆசுவாசப்படுத்துகிறார்கள். லூட்ரிக்காஸுடன் டைரீஸ் கிப்சன் என்ன பேசினாலும், கடைசியில் பால் வாக்கர் சொல்லும் கமெண்ட் தான் நெத்தியடியாக இருக்கும். ஆனால் அங்கு பால் வாக்கர் இல்லை.

நீர்மூழ்கிக் கப்பல் வெடிக்கும் காட்சியில் வின் டீசலைக் காப்பாற்ற எல்லா கார்களையும் கொண்டுவந்து அவரைச்சுற்றி நிறுத்துவார்கள். அந்தக்காட்சியிலும், தனது மகனுக்கு கானர் ஓ பிரையன் என பால் வாக்கரின் பெயரை வைப்பதும் குடும்பம் என்ற ஒன்றை இந்த ரேஸிங் படத்தின் மூலமாக மனதுக்குள் பதியவைத்துக்கொண்டு எமோஷனலாக அதனுடன் இணைந்துவிட்டதை த் தெரிவிக்கின்றன.

Fate of the Furiousஇன் மிக முக்கிய பிளஸ் பாய்ண்ட் சார்லீஸ் தியரோன். தனி வில்லியாக நியூ யார்க் நகரின் அனைத்துக் கார்களையும் இயக்குகிறார். டிரைவர் இல்லாதவை மட்டுமல்ல. டிரைவர் இருக்கும் கார்களையும் தான். வின் டீசலை குடும்பத்திலிருந்து பிரித்தது நல்ல மூவ் என்றால், வின் டீசலையே அந்த குடும்பத்துடன் மோதவிட்டது மிகத் தவறான மூவ். ஜுராசிக் வோர்ல்டு திரைப்படத்தில் டைனோசரை வேட்டையான டைனோசர்களையே கொண்டுசெல்லும்போது அவை தனது இனத்துடன் சேர்ந்துகொண்டு மனிதர்களை வேட்டையாடும் காட்சியைப் பார்த்திருப்போம். அதை சார்லீஸ் தியரோனும் பார்த்திருந்தால் அதை செய்திருக்கமாட்டார்.

ரிலீஸான முதல் வீக்-எண்ட் ரிசல்ட் Fate of the Furious திரைப்படம் தொடர்ந்து சாதனை படைக்கப்போவதை நிரூபித்துவிட்டது. ஈஸ்டர் விடுமுறை தினம் முடிந்த நிலையில் Fate of the Furious வசூல் உலக அளவில் 532 மில்லியன் டாலர்கள். இதற்கு முன்பு Star Wars: The Force Awakensஇன் 529 மில்லியன் டாலர் தான் அதிகபட்சமாக இருந்தது. இதே நிலை தொடர்ந்தால் Fast & the Furiousஇன் 8ஆம் பாகம் உடைக்கமுடியாத பல சாதனைகளைப் படைக்கும். ஆனால், அடுத்த பாகத்திலும் ஸ்ட்ரீட் ரேஸிங்கை தவிர்த்தால் சோகமாகிவிடும்.

-சிவா

செவ்வாய், 18 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon