மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 18 ஏப் 2017

அராத்து எழுதும் உயிர் மெய் - 2 (நாள் 42)

அராத்து எழுதும் உயிர் மெய் - 2 (நாள் 42)

தாத்தாவின் வீட்டின் முன் இவ்வளவு கார்களையும் பைக்குகளையும் ஷமித்ரா எதிர்பார்க்கவில்லை. ஆர்வத்துடன் நுழைந்தாள். தாத்தாவின் வீடும் மிகப் பெரியதாக இருந்தது. காம்பவுண்டுக்குள் பெரிய காலி இடம் இருந்தது. காலி இடங்களில் நிறைய மரங்கள். ஒரு பூங்காவைப்போல காட்சியளித்தது. இந்த நகரத்தின் நெரிசலில் இப்படி ஒரு இடத்தை யாரும் நினைத்துப் பார்க்க முடியாது. வெளியேயிருந்து பார்த்தால், உள்ளே இவ்வளவு விசாலமான இடம் இருக்கும் என்பதே தெரியாது.

வீடும் அந்தக் கால பிரிட்டிஷ் வீடுபோல பெரிதாகவும் பிரம்மாண்டமாகவும் இருந்தது.

வீட்டுக்கு முன் இருந்த இடத்தில் நிறைய நாற்காலிகள் கிடந்தன.

சிறு சிறு குழுவாக சிலர் இயங்கிக்கொண்டு இருந்தனர். சில இடங்களில் இருவர் மட்டும் அமர்ந்து ஏதோ விவாதித்துக்கொண்டு இருந்தனர்.

தாத்தாவைத் தேடினாள் ஷமித்ரா. ஒருவன், தானாக ஷமித்ரா அருகே வந்து ‘மே ஐ ஹெல்ப் யூ’ என்றான்.

‘யா…இங்க தாத்தா எங்க இருக்காரு?’

‘தாத்தா?… உலகளந்தானை சொல்றீங்களா?’’

‘ம்ம்… ஆமாம்’

சிரித்துக்கொண்டே, வாங்க என்று அழைத்துச் சென்றான்.

வீட்டுக்குள் புகுந்து நீட்டமாக நடந்து, பல்கலைக்கழகத்தில் இருப்பது போன்ற மாடிப்படிகளில் ஏறிச் சென்றான். ஷமித்ரா பின் தொடர்ந்தாள். ஒரு அறைக்கு வெளியே சில்லென்று ஏ.சி. காற்று வீசியது. அது தாத்தாவின் இருப்பை அந்த அறையில் உறுதி செய்தது. கதவை மென்மையாகத் தட்டினான்.

‘கமின்’ என்று பதில் வந்ததும், நீங்க போங்க என்று ஷமித்ராவை அனுப்பிவிட்டு அகன்றான்.

ஷமித்ரா உள்ளே நுழைந்ததும், ஹாய் பேபி என்று அட்டகாசமாக வரவேற்றார் தாத்தா. மேக் புக்கில் ஏதோ வேலை செய்துகொண்டிருந்தார்.

‘காஃபி ஆர் டீ’ என தாத்தா கேட்டதற்கு, ‘இப்பதான் சாப்டுட்டு வர்றேன்’ என்று பதில் அளித்தாள் ஷமித்ரா. ஷமித்ரா பக்கம் திரும்பிய தாத்தா கடகடவென சொல்ல ஆரம்பித்தார்.

‘நான் ஒரு பிஸினஸ் மேன். பிஸினஸை இப்ப பசங்க கிட்டயும், என்கூட வேலை பாத்தவங்க கிட்டயும் குடுத்துட்டேன். பிஸினஸில் இருந்து ரிட்டையர் ஆயிட்டேன். பசங்க யாரும் என்கூட இல்ல. வெளிநாடு, வெளியூர்னு இருக்காங்க. இந்த வீட்டை உபயோகப் பயன்படுத்தலாம்னு முடிவு பண்ணேன்.

யார் வேணா இங்க வரலாம், என்ன வேணா சொல்லிக் குடுக்கலாம். என்ன வேணா கத்துக்கலாம். ஒரு வெப்சைட் வச்சிருக்கேன். ஃபேஸ்புக்ல குரூப் வச்சிருக்கேன். அதுல போய் ரெஜிஸ்டர் பண்ணிக்கலாம். என்ன கத்துக்க தேவைன்னு அதுல சொல்லிட்டா, அதை பாக்கறவங்க சொல்லித் தர முன்வருவாங்க. யாரும் முன்வரலைன்னா, நானே பணம் குடுத்து ஒரு ஆளைப்பிடிச்சி சொல்லித் தர ஏற்பாடு பண்ணுவேன். ஸ்கூல் பசங்க டியூஷன் மட்டும் இந்த ஏரியாவில் இருக்கும் பசங்களுக்கு மட்டும்தான்.

பசங்களுக்கான ஸ்கூல் டியூஷன், காலேஜ் பசங்களுக்கு புரியாத கஷ்டமான சப்ஜக்ட்ஸ், வேலை கிடைக்கத் தேவையான பயிற்சி, புது மொழி கத்துக்கிறது, இப்படி எல்லாத்துக்கும் ஒரு ப்ளாட்பார்ம் உண்டாக்கியிருக்கேன்.

ஸ்கூல், காலேஜ் டியூஷன் எல்லாம் குழு குழுவா நடக்கும். ஏதாச்சும் பெக்குலியர் சப்ஜக்ட்னா ஒருத்தருக்குக் கூட பாடம் நடக்கும்’ இதையெல்லாம் சொல்லிய தாத்தா, ‘நானும் அப்பப்ப கிளாஸ் எடுப்பேன்’ என்றார்.

‘இது இல்லாம ஒரு 60 பசங்க இங்கயே தங்கி இருக்காங்க’ என்றார்.

ஷமித்ராவுக்கு சுவாரசியமாக இருந்தது.

‘ஏன் அவங்க அநாதையா?’ என்றாள்.

‘சிலர்தான் அநாதை. பலபேர் வீட்ல கஷ்டம், வசதி இல்ல. படிக்கமுடியாத சூழல். அதனால அவங்க அப்பா, அம்மா இங்க விட்டுட்டு போயிட்டாங்க. அப்பப்ப வந்து பாப்பாங்க’

‘ஓ ….ஓக்கே ஓக்கே’ என்றாள் ஷமித்ரா.

‘நீ எதாச்சும் சொல்லித்தர முடியுமா ? உனக்கும் நாலேட்ஜ் இம்ப்ரூவ் ஆகும்’ என்றார்.

‘எனக்கு எது ஒழுங்கா தெரியும்னு எனக்கே தெரியலையே’ என்றாள்.

‘அப்ப முதல்ல உனக்கு டியூஷன் எடுக்கணும்’ என்று சொல்லி, கடகடவென சிரித்தார் தாத்தா.

ஷமித்ராவும் சிரித்தாள்.

‘ஒண்ணு பண்ணு, 7ஆம் வகுப்பு பசங்களுக்கு சொல்லித் தர ஆள் வேணும். 7ஆம் வகுப்பு புக்ஸ் குடுக்கறேன். எடுத்துட்டுப் போய் படி. அடுத்த வாரத்திலிருந்து கிளாஸ் ஆரம்பிக்கலாம். ஆனா அதுவரைக்கும் டெய்லி வந்துட்டு போய்ட்டு இரு. இந்த சிச்சிவேஷன் உனக்குப் புரியும்’ என்றார்.

எழுந்து வந்து ஓர் அறைக்குள் சென்று 7ஆம் வகுப்பு புத்தகங்களை எடுத்துக் கொடுத்தார். வாங்கிக் கொண்டாள் ஷமித்ரா.

‘வா, ஒரு கிளாஸை போய்ப் பாக்கலாம்’ என்றார். ஒரு வகுப்பறைக்குள் நுழைந்தனர்.

மல்லிகேஸ்வரன் 9ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு பாடம் எடுத்துக்கொண்டிருந்தான்.

‘எனக்கு சுத்தமா புரியல’ என்று சொன்னான் ஒரு சிறுவன்.

நாள் 1|நாள் 2|நாள் 3|நாள் 4|நாள் 5|நாள் 6|நாள் 7|நாள் 8|நாள் 9|நாள் 10|நாள் 11|நாள் 12|நாள் 13|நாள் 14|நாள் 15|நாள் 16|நாள் 17|நாள் 18|நாள் 19|நாள் 20|நாள் 21|நாள் 22|நாள் 23|நாள் 24|நாள் 25|நாள் 26|நாள் 27|நாள் 28|நாள் 29||நாள் 30|நாள் 31|நாள் 32|நாள் 33|நாள் 34|நாள் 35|நாள் 36|நாள் 37|{நாள்38]https://minnambalam.com/k/2017/04/14/1492108205)

|நாள் 39||நாள் 40|நாள் 41

செவ்வாய், 18 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon