மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஏப் 2017

அராத்து எழுதும் உயிர் மெய் - 2 (நாள் 41)

அராத்து எழுதும் உயிர் மெய் - 2 (நாள் 41)

சாந்தவியைப் பார்த்ததும் , ஹேய் சாந்தவி குட் மார்னிங்க் , எங்க இந்த நேரத்துல கிளம்பிட்ட என்றாள் ஷமித்ரா.

ஹாய் ஷமித்ரா , மார்னிங்க் என்று சொல்லி நிமிர்ந்து நின்று மூச்சி வாங்கினாள். அதற்குள் சாந்தவி பதிவு செய்திருந்த டாக்ஸி வந்து நின்றது.

ஷமி , நேத்து நைட்டு கொஞ்சம் பிரச்சனை ஆயிடிச்சி. ஆக்சுவலி தப்பு என்மேலதான். ரொம்ப சீக்கிரமா அவசரப்பட்டு இங்க வந்து தங்கிட்டேன். என் மரியாதையை நானே கெடுத்துகிட்டேன். அதான் கிளம்பிடலாம்னு முடிவு பண்ணி கிளம்பிட்டேன். தேங்க்ஸ் ஃபார் எவ்ரிதிங்க் ஷமி என்றாள்.

ஓஹ் , சாரி சாந்தவி . சின்ன பிரச்சனையா ? இல்லை எதாச்சும் பெருசா …..

இல்லடீ , சின்ன பிரச்சனைதான், பட் அவமானப் படுத்தும்படி இருந்திச்சி. அதுக்கு நான் தான் இடம் குடுத்து இருந்தேன்னு எனக்கு புரிஞ்சிது. நான் என் ஸ்டேண்ட்ல ஸ்ட்ராங்கா இருந்திருந்தா இப்படி நடந்திருக்காது. நான் கொஞ்சம் கம்ஃபர்டபிளா இருக்கணும்னு ஆசைப்பட்டுட்டேன் . அதான் பிரச்சனை. எதை வேணா பொறுத்துக்கலாம், அவமானத்தை பொறுத்துக்கக் கூடாது, தேவையும் இல்லை. அதான் ஷமி. மத்தபடி பெருசா ஒண்ணும் இல்லை , கூல் கூல் என்ற சாந்தவி கூலர்ஸை மாட்டிக்கொண்டு காரில் ஏறிக்கொண்டாள்.

லக்கேஜை வைக்க உதவிய ஷமித்ரா , கட்டிப்பிடித்து பை சொன்னாள்.

அடிக்கடி மீட் பண்ணுவோம் , பிங்க் மீ என்றபடி கிளம்பினாள் சாந்தவி.

என்னடா இது என்று குழம்பியபடியே , வீட்டுக்குள் வந்த ஷமித்ரா நன்றாக ஊறி குளித்தாள். சுடு தண்ணீரும் , பச்சைத் தண்ணீரும் மாறி மாறி குளித்தது மசாஜ் செய்தது போல இருந்தது. தன்னை நிலைக்கண்ணாடியில் பார்த்துக்கொண்டாள். உடல் லேசாக மெலிந்து இருந்தாலும் , வயிறு மட்டும் கொஞ்சமாக தொப்பை போட்டு இருந்ததாக பட்டது. மொத்தத்தில் ஸ்ட்ரக்ச்சர் அப்நார்மலாக இருப்பதாக பட்டது ஷமித்ராவுக்கு. வயிற்றை உள்ளே இழுத்துப் பார்த்தாள். நன்றாக உள்ளடங்கியது.

ஓக்கே , ஒரு வாரம் வொர்க் அவுட் செய்தால் சரி செய்து விடலாம் என்று தோன்றிய நேரத்தில் அவள் முகத்தில் ஒரு சிறு புன்னகை மலர்ந்தது.தன் மேனி முழுதும் பார்வை ஓட்டி பார்த்துக்கொண்டாள். எதையெல்லாம் நீக்க வேண்டும் , எதையெல்லாம் மெருகேற்ற வேண்டும் என்று மனதிற்குள் குறிப்பெடுத்துக்கொண்டாள். பாத் ரூமில் இரண்டு கண்ணாடிகள் இருந்ததால் , முன்னும் பின்னும் சிரமமில்லாமல் பார்க்க முடிந்தது.

ஃபெமினைன் ஹைஜீனை எடுத்து போட்டுக்கொண்டாள். வெளியூரில் இருந்ததால் வாங்க முடியவில்லை. மற்ற நேரமெடுக்கும் வேலைகளை நாளைக்கு சீக்கிரம் எழுந்து செய்து கொள்ளலாம் என்று குளிப்பதை நிறுத்தி விட்டு , துவட்டாமல் அறைக்குள் வந்தாள். ஏசி காற்று உடலில் பட்டு குளிரியது. இரண்டு பெரிய துண்டுகளை எடுத்து உடலில் சுற்றிக்கொண்டு சோஃபாவில் கால்களை தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்தாள். இன்னும் 20 நிமிடங்களுக்குள் கிளம்ப வேண்டும் என்று முடிவு செய்தவள் , அதே போல எழுந்து சுற்றி பறந்து கிளம்பி அலுவலகம் ஓடினாள்.

அலுவலகத்தில் சிலப்பல விசாரிப்புகள். சில சைட் அடிச்சான் கேஸ்கள். இவள் இருக்கும் நிலைமை தெரியாமல் இவளை இம்ப்ரெஸ் செய்ய முன்னும் பின்னும் நகரும் திரைச்சீலை ஆண்கள். தன்னுடைய பாஸை சென்று பார்த்து விட்டு விளக்கம் கூறி வெளியே வந்தவளால் அலுவலக வேலைகளை ஓரளவு ஈடுபாட்டுடன் பார்க்க முடிந்தது. சில வேலைகள் குவிந்து கிடந்தன. சில வேலைகள் மற்ற சிலரால் அரைகுறையாக முடிக்கப்பட்டு திருப்ப அனுப்பப்பட்டு இருந்தது. எல்லா வேலைகளையும் அசுர வேகத்தில் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தாள்.

லஞ்ச் பிரேக்கில் நிறுவனம் கைமாற போவதாக செய்திகள் கசிந்தன. வெளிநாட்டு நிறுவனம் வாங்கப்போவதாகவும் , புது மேனேஜ்மெண்ட் என்றும் , நிர்வாகம் கடுமையாக நடந்து கொள்ளும் என்றெல்லாம் கிசு கிசுக்கள். எந்த ஒரு புதிய மாற்றத்துக்கும் பயப்படும் மற்றும் இயற்கையாக எதிர்ப்பு தெரிவிக்கும் மனோநிலை இங்கும் எல்லோரிடமும் எதிரொலித்தது.

ஷமித்ராவுக்கு எந்த எதிர்ப்புணர்வும் வரவில்லை. நடப்பது நடக்கட்டும் , பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணமே மேலோங்கியது.

வேலை முடித்து விரைவாக வீட்டுக்குத் திரும்பினாள்.

மாலை பார்ட்டி நடப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அதையெல்லாம் கவனிக்காமல் உள்ளே சென்றாள். மீண்டும் ஒரு குளியல் போட்டு லைட்டான கலரில் கொஞ்சம் லூஸாக ஒரு உடையை தேர்வு செய்து கொண்டு , வெளியேறினாள். பார்ட்டிக்காக அடுப்பு செட் செய்து கொண்டிருந்தவனை கடந்த போது , டீ அல்லது காஃபி குடிக்கலாம் என்று தோன்றியது ஷமித்ராவுக்கு.

ஹலோ மாஸ்டர் , டீ இல்லன்னா காஃபி கிடைக்குமா என்று கேட்டாள்.

அதெல்லாம் இல்லீங்களே என்று விழித்த சமையல் ஆள் , ஒரு நிமிஷம் இருங்க என்று கூறி விட்டு தங்களுடைய வேனில் ஏறித் துழாவினான்.

ஹாய் ஷமித்ரா , ஹௌ ஆர் யூ ? என தோளைத் தட்டினான் விதேஷ். செம ஃப்ரஷாக இருந்தான். பகல் முழுக்க தூங்கி இருப்பான் போலிருக்கிறது. ஆர்டிஃபீஷியலாக நிறைய மேக் அப் மற்றும் பர்ஃப்யூம் வாசனை பிய்த்து எடுத்தது.

ஃபைன் அண்ணா என்ற ஷமித்ரா , என்ன செமையா ரெடி ஆயி நிக்கிற ? என்ன விசேஷம் என்றாள்.

இன்னிக்கி ஒரு பார்ட்டி. மத்தியானம் தான் முடிவு ஆச்சி. ரெண்டு மூணு பிஸினஸ் பிக் ஷாட்ஸ் வராங்க. நீயும் வந்துடு என்றான்.

அதற்குள் வேனுக்குள் புகுந்தவன் ஒரு டீ பேக் ஐ கண்டு பிடித்து , பிளாக் டீ போட்டு ஷமித்ராவிடம் கொடுத்தான்.

எனக்கும் ஒரு டீ என்றான் விதேஷ்.

ஒரு பாக்கெட்தாங்க இருந்திச்சி என்றான் சமையல் ஆள்.

டீ குடித்து முடித்த ஷமித்ரா , வெளியே கிளம்பினாள். பார்டிக்கு வந்துடுவியா என்றான்.

சீக்கிரம் வந்துடுவேன் , ஆனா பார்ட்டியில கலந்துக்க மாட்டேன் , ப்ளீஸ் அண்டர்ஸ்டேண்ட் என்றபடி தாத்தா வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

தாத்தா வீடு பெரிய காம்பவுண்ட்டுக்குள் இருந்தது. நிறைய கார்களும் பைக்குகளும் வெளியே பார்க் செய்யப்பட்டு இருந்தன.

நாள் 1|நாள் 2|நாள் 3|நாள் 4|நாள் 5|நாள் 6|நாள் 7|நாள் 8|நாள் 9|நாள் 10|நாள் 11|நாள் 12|நாள் 13|நாள் 14|நாள் 15|நாள் 16|நாள் 17|நாள் 18|நாள் 19|நாள் 20|நாள் 21|நாள் 22|நாள் 23|நாள் 24|நாள் 25|நாள் 26|நாள் 27|நாள் 28|நாள் 29||நாள் 30|நாள் 31|நாள் 32|நாள் 33|நாள் 34|நாள் 35|நாள் 36|நாள் 37|நாள்38

|நாள் 39நாள் 40|

திங்கள், 17 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon