மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 15 ஏப் 2017

அராத்து எழுதும் உயிர் மெய் - 2 (நாள் 39)

அராத்து எழுதும் உயிர் மெய் - 2 (நாள் 39)

மன்னிப்புக் கேட்ட விதேஷை, அடிவயிற்றில் குத்தியதுபோல சொல்லால் அடித்த சாந்தவி மீண்டும் இழுத்து போர்த்திக்கொண்டாள். அடி வாங்கிய விதேஷ் படுக்கையில் இருந்து எழுந்து பக்கத்தில் இருந்த சோஃபாவில் படுத்து கண்ணை மூடிக்கொண்டான்.

*

ஷமித்ரா காலையில் எழுந்ததும் தலையை உலுக்கிக்கொண்டாள். ஜன்னலைத் திறந்து சூரியனைப் பார்த்தாள். சூரியனின் கதிர்கள் உடலுக்குத் தேவைப்பட்டன. பல் துலக்காமல், வாயைக் கொப்பளித்து துப்பிவிட்டு, ஒரு ஜக் தண்ணீரை குடித்துவிட்டு, வெளியே வந்து சூரியனுக்குக் கீழே சூரியனை பார்த்தபடி நிற்க ஆரம்பித்தாள்.

எது நடந்தாலும் தன்னால் தடுக்க இயலாதது என்றால், தான் செய்ய ஒன்றுமில்லை. மனதைப் போட்டு இப்படி குழப்பிக்கொண்டு, உடலையும் இப்படி வருத்திக்கொள்வதால் ஒரு பயனும் இல்லை. இந்த சுயசோகமே ஒரு போதைபோல பழகிவிடும். இயல்பாய் இரு, வருவதை எதிர்கொள், உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டாம். ஆனால் உணர்ச்சிகளுக்குள் அமிழ்ந்துபோய் தொலைந்து போகக்கூடாது என்று, என்னென்னவோ கலவையான எண்ணங்கள் அவளுக்குள் ஓடுவதாக சூரியனுக்குப் பட்டது.

சூரியன் வெளிச்சத்தை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தினான். அந்த வெளிச்சம் இந்தக் கதை முடிந்தபின்பு தமிழ்நாட்டை கொளுத்தியெடுக்கும் என்று வையுங்கள்.

வேண்டுமென்றே தெளிவாக சிரித்த ஷமித்ராவுக்கு யாருக்காவது குட் மார்னிங் சொல்ல வேண்டும்போல இருந்தது. உள்ளே போய் மொபைலை எடுக்கலாம் என்று எத்தனித்த ஷமித்ரா, அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டு, கேட்டை நோக்கி நடந்தாள். ரிமோட்டை அமுக்கிவிட்டு ஒரு செகண்ட் காத்திருந்த ஷமித்ரா, செருப்பு போடாததை நினைப்பதற்குள் கேட் திறந்தது. செருப்பை நிராகரித்துவிட்டு வெறுங்காலோடு தெருவில் இறங்கினாள்.

நீண்ட நாளைக்குப்பிறகு செருப்பு போடாமல் நடப்பது சிரமமாகவும் வலியாகவும் இருந்தாலும் இதமாகவும் இருந்தது. இந்த டீட்டெயிலெல்லாம் கதைக்குத் தேவையா என கதை படிப்பவர்களும், இந்த வரியை மட்டும் படிப்பவர்களும் நினைக்கலாம். கதையில் இதைப்போன்ற நுட்பமான தகவல்கள் இடம்பெறுவது கதையின் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் என்று இப்போதெல்லாம் கதைமாந்தர்களே நினைத்துக் கொள்கிறார்கள். அதனால் இப்படியெல்லாம் ஃபீல் செய்கிறார்கள் அல்லது நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் இவையெல்லாம் கதை ஜெட் வேகத்தில் பறப்பதற்கு இடையூறுதான். என்னதான் ஜெட் வேகம் என்றாலும், ஜெட் கதையில் பறந்தால், கதையின் வேகத்தில்தான் ஜெட்டே பறக்கும் என்று அறியாதவர்களா வாசகர்கள்? எதற்கு இந்த விளக்கம்? சரி சரி அறுவை?

வேறு என்ன கதை தடுமாறுகிறது.

ஏன் தடுமாறுகிறது?

சந்தன் இழுத்துக்கொண்டு கிடக்கையில், கதையை சரசரவென முன்னகர்த்தி இரண்டே அத்தியாயங்களில் ஷமித்ராவை இன்னொருவனுடன் சேர்த்து, குடித்து கும்மாளம் அடிப்பதுபோல காட்டினால் ஒத்துக்கொள்வீர்களா? அதையே இழுத்து இழுத்து ஷமித்ரா அழுது புரண்டு, மனக்கிலேசம் அடைந்து, பைத்திய நிலைக்குச் சென்று, பசியால் வாடி, தூக்கமின்றி தவித்து பின் கொஞ்சநாள் கழித்து இன்னொருவனுடன் பதமாக பழக ஆரம்பித்தால் ஏற்றுக்கொள்வீர்கள். அதற்குத்தான் கதை இழு இழு என்று இழுக்கிறது. தயங்கித் தயங்கி நிற்கிறது.

கதையும் இழுக்க வேண்டும், அந்த இழுவையும் சுவாரசியமாக ஜெட் வேகத்தில் போக வேண்டும் என்றால் எப்படி? அதற்குத்தான் பலிகடா விதேஷ் - சாந்தவி.

மேலே சொன்னதையெல்லாம் அப்பாவி மாதிரி நம்பிவிடும் ஆட்களா நீங்கள்? எது சொன்னாலும் நம்பமாட்டீர்கள் என்ற தைரியத்தில்தான் அராத்து போன்ற எழுத்தாளர்களால் எல்லாம் எதை வேண்டுமானாலும் எழுத முடிகிறது.

செருப்பு போடாமல் நடப்பது மனதுக்கும் இதமாக இருந்தது ஷமித்ராவுக்கு.

ஒரு ஒல்லியான தாத்தா க்ளீன் ஷேவுடன், ஷார்ட்ஸ் போட்டு ஜாக்கிங் போய்க்கொண்டு இருந்தார். பளீரென நல்ல பாலீஷான கருப்பில் இருந்தது அவர் தேகம். மீசை வெள்ளை வெளேர் என வீட்டுக்கு விழல் அடித்து நறுக்கிவிட்டதுபோல இருந்தது. தலைமுடி மட்டும் உற்சாகம் குறைந்து, பழமுதிர்ச்சோலையில் ஏ.சி.யில் வதங்கி நொய்ந்து போய்க்கிடக்கும் புதினா கட்டுபோல இருந்தது. ஒரு நாய், மன்னிக்கவும் கதைக்கு நாயின் பெயர் தெரியாது, அவரின் பின்னால் ஓடி வருவதும், பின் வேறு திசையில் ஓடி, தாத்தாவை காணோமே என மிரண்டு, அசுர வேகத்தில் தாத்தாவின் அருகில் ஓடி வருவதுமாகவும் இருந்தது.

இதைப் பார்த்த ஷமித்ராவுக்கு, தானும் இப்படி சுதந்திரமாக எங்கெங்கோ ஓடி, பயந்து, மீண்டும் இப்போதிருக்கும் உலக வாழ்வின் ஒத்திசைவுக்கு ஓடி வந்து விடுகிறோமோ என்று தோன்றியது.

அந்த தாத்தாவைப் பார்த்ததும் ஷமித்ராவுக்குப் பிடித்தது.

‘குட் மார்னிங் தாத்தா’ என்றாள்.

ஒரு செகண்ட் நின்ற தாத்தா, ‘குட் மார்னிங் பேபி! எங்க நடந்து போற’ என்றார்.

‘ஜஸ்ட் வாக்கிங் தாத்தா’ என்றாள் ஷமித்ரா.

‘ஓ ..நோ… ஜஸ்ட் ஃபாலோ மீ. நோ வாக்கிங், ஜாக்கிங்’ என்று கூறிவிட்டு, மெல்ல வேகத்தை அதிகரித்தார்.

ஷமித்ரா அவரைப் பின்தொடர்ந்து ஓட ஆரம்பித்தாள், வெறுங்காலுடன்!

*

நாள் 1|நாள் 2|நாள் 3|நாள் 4|நாள் 5|நாள் 6|நாள் 7|நாள் 8|நாள் 9|நாள் 10|நாள் 11|நாள் 12|நாள் 13|நாள் 14|நாள் 15|நாள் 16|நாள் 17|நாள் 18|நாள் 19|நாள் 20|நாள் 21|நாள் 22|நாள் 23|நாள் 24|நாள் 25|நாள் 26|நாள் 27|நாள் 28|நாள் 29||நாள் 30|நாள் 31|நாள் 32|நாள் 33|நாள் 34|நாள் 35|நாள் 36|நாள் 37|நாள் 38

சனி, 15 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon