மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 13 ஏப் 2017

அராத்து எழுதும் உயிர் மெய் - 2 (நாள் 37)

அராத்து எழுதும் உயிர் மெய் - 2 (நாள் 37)

விதேஷுக்கு சாப்பிட்டு முடித்ததும் ஆசுவாசம் வந்தது. இப்போது கண்மூடிப் பார்க்கையில் போதை போதும் என்று தெளிவாகத் தோன்றியது. வயிறு ரொம்பியதும் காமம் கிளர்ந்தது. தனியாக இருக்கையில், போதையில் சாப்பிட்டதும் தூங்கிவிடும் மனம், வீட்டில் ஒரு பெண் எங்கோ இருக்கிறாள் என்றதும் விழித்துக் கொள்கிறது.

கடும் போதையில் காமத்தில் இறங்கினால், உடல் முயற்சி செய்து பழக்க தோஷத்தில் விழித்துக்கொண்டாலும், மனம் மரத்துவிடும் என்பது விதேஷுக்குத் தெரியும். அந்த மரத்துப்போன மனம்தான் இப்போது செக்ஸுக்குத் தள்ளுகிறது என்பதுதான் விசித்திரம்.

கால்கள் பின்னப்பின்ன எழுந்துகொண்டான் விதேஷ்.

திடீரென்று தங்கை மீதும் பாசம் வந்தது. அவளும் சாப்பிடாமல் படுத்துக்கிடக்கிறாளே என்ற நினைவு பரிவுடன் வந்து முகத்தை நெகிழ்ச்சியாக வைத்துக்கொண்டான்.

ஒரு சாப்பாட்டுப் பார்சலை எடுத்துக்கொண்டு ஷமித்ரா அறைக்குச் சென்றான்.

ஷமித்ரா பெரிய போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு இருந்தாள். அவள் தலைமாட்டில் அமர்ந்துகொண்ட விதேஷ், தலையை மெதுவாக தட்டிக்கொடுக்க ஆரம்பித்தான். பக்கத்தில் இருந்த ஷமித்ரா மொபைலில் கடைசியாக வந்த மெசேஜ் நோட்டிஃபிகேஷனில் காட்டிக்கொண்டு இருந்தது.

‘வீ ஆல் மிஸ் யூ’ என்று கதிர் மெசேஜ் அனுப்பியிருந்தான். ஒரு காதல் மெசேஜை குடும்பத்தை துணைக்கு இழுத்துக்கொண்டு அனுப்பியிருந்தான்.

விதேஷின் தொடுதலில் சிணுங்கினாள் ஷமித்ரா.

‘சாப்ட்டு படு ஷமி, ப்ளீஸ்...’ என்று சொன்னான் விதேஷ்.

விதேஷுக்கும் ஷமித்ராவுக்கும் அன்பு, பாச நடவடிக்கைகள் நடந்து பல வருடங்கள் இருக்கும். சொந்த ஊரில் இருந்தபோது நடந்த சில பாச நடவடிக்கைகள் பாதரசம்போன கண்ணாடியில் பாசி பிடித்து பின், உடைந்து குப்பைத் தொட்டிக்குப் போன கதைதான்.

இப்போது, போதை பல வேலைகளைக் காட்டுகிறது. பழைய ஞாபக இடுக்குகளில் இருக்கும் அன்பு, பாசம், கோபம், குரோதம் எல்லாம் கிண்டிவிடப்படுகையில், அதற்கு ஏற்றார்போல ஆள் இருந்தாலோ, சிச்சுவேஷன் ஏற்பட்டாலோ, போதையின் கட்டுப்பாட்டில் இருக்கும் மனம் செயல்பாட்டை ஆரம்பிக்கிறது. விதேஷ் இப்போது நீண்ட நாளைக்குப் பிறகு சகோதரி பாசத்தை உணர்ந்து கொண்டிருக்கிறான். விட்டால் ஊட்டி விடுவான். இதைப்போன்ற நல்ல செய்கைகள் என சமுதாயத்தால் சொல்லப்படும் செய்கைகள் அல்லது உணர்வுகள் ஏற்படுகையில், ஒருவனுடைய கில்ட்டி ஃபீலிங் கொஞ்சம் குறைகிறது. நாம் நல்லவன்தான் என்ற எண்ணம் ஏற்படுகிறது. இன்னும் கொஞ்ச நாளைக்கு மீண்டும் கெட்ட செயல்களை தறிகெட்டுச் செய்ய எனர்ஜி கிடைக்கிறது.

ஷமித்ரா எழுந்தாள்.

சாப்பாட்டுடன் அமர்ந்திருக்கும் விதேஷைப் பார்த்தாள். அவளுக்கு நிஜமாகவே இதைப்போல ஒரு மொமண்ட் தேவைப்பட்டது. இன் செக்யூரிட்டி கொஞ்சம் குறைந்தது.

உணவை வாங்கி உண்ண ஆரம்பித்தாள்.

இந்த சீன் ரொம்ப நேரம் தாங்கவில்லை. தன் கடமை முடிந்ததாக விதேஷுக்குத் தோன்றியதும், ‘சாப்டுட்டு படுத்துக்கோ ஷமி’ என்றான். ஏதோ கொஞ்சம் கடமையில் குறைவதுபோல உணர்ந்த விதேஷ், ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்து படுக்கை தலைமாட்டில் வைத்தான். நிம்மதியாக உணர்ந்தான்.

‘டூ யூ ஹேவ் சிகரெட் ஷமி’ என்றான்.

‘சாரி அண்ணா, இல்லையே’ என்றாள்.

‘இட்ஸ் ஓகே’ என்ற விதேஷ், வெளியேறினான்.

எங்கே இருப்பாள் சாந்தவி? என்ற ஒற்றைக் கேள்வியில் மீண்டும் உடல் விழித்துக் கொண்டது. ஆடி ஆடி தேடியபடியே சென்றான்.

சாந்தவியும் அவள் அறைக் கதவை திறந்தே வைத்திருந்தாள்.

எவ்வளவு சண்டையாயினும், சமாதானப்படுத்த வருவார்களா? வருவதற்கு ஒரு வாய்ப்பை இருபாலருமே வைத்துவிட்டுத்தான் உறங்குவார்கள்.

எவ்வளவு குழந்தைத்தனமான எதிர்பார்ப்பு? இந்த குழந்தைத்தனமான எதிர்பார்ப்பு இருக்கும்வரையில் எந்தவிதமான ரிலேஷன்ஷிப்பாக இருந்தாலும் காதல் உயிர்ப்பித்து இருக்கும்.

யார் யாரைத் தேடி வருவார்கள்? யார் யாருக்கு விட்டுக்கொடுப்பார்கள்? யார் முதலில் மன்னிப்புக் கேட்பார்கள்? யார், இதில் ஈகோவை விட்டுவிட்டு தோற்கிறார்களோ, அவரே வெற்றிபெற்றவர் ஆகிறார்.

சாந்தவியின் அறையில் நுழைந்த விதேஷ், போர்வையுடன் சாந்தவியை அணைத்து படுத்துக் கொண்டான்.

சாந்தவி முழுவதுமாகத் தூங்கவில்லை. விதேஷ் வந்தது சிறு தெம்பைத் தந்தது. மன நிறைவும் ஏற்பட்டது. சமாதானம் செய்தாலும் முரண்டுபிடிக்கும் மூடுக்கு அரைத் தூக்கத்திலும் தயாரானாள்.

‘சாப்படறியா?’

‘சாப்படறியா?’

‘சாப்படறீஈஈஈ...’

‘சாப்படறி’

‘சாப்ட’

‘சாப்’

மட்டையாகிவிட்டான் விதேஷ்.

நாள் 1|நாள் 2|நாள் 3|நாள் 4|நாள் 5|நாள் 6|நாள் 7|நாள் 8|நாள் 9|நாள் 10|நாள் 11|நாள் 12|நாள் 13|நாள் 14|நாள் 15|நாள் 16|நாள் 17|நாள் 18|நாள் 19|நாள் 20|நாள் 21|நாள் 22|நாள் 23|நாள் 24|நாள் 25|நாள் 26|நாள் 27|நாள் 28|நாள் 29||நாள் 30|நாள் 31|நாள் 32|நாள் 33|நாள் 34|நாள் 35|நாள் 36

வியாழன், 13 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon