மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 12 ஏப் 2017

வல்லமை தாராயோ - 05 - தமயந்தி

வல்லமை தாராயோ - 05 - தமயந்தி

கடந்த வாரம், சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ பரவலாக வலம் வந்தது. சாலையில் நிற்கும் பெண்ணிடம், காவல் என்று எழுதப்பட்டிருக்கும் இருசக்கர வாகனத்தில் உள்ளவர் ‘ரேட் என்ன?’ என்று கேட்ட அந்தக் கேள்விக்காக, அந்தப் பெண்ணின் சார்பில் ஒரு இளைஞர் கேள்விகேட்ட நபரை அடிக்கும் வீடியோதான் அது.

இருசக்கர வாகனத்தை விட்டு இறங்கி அடிக்கிறார்கள். ‘பொட்ட’, ‘தேவடியா பய’ என்று, நரம்பு தெறிக்கப் பேசி அடிக்கிறார். ‘அதிகமாகப் பகிருங்கள்’ என்று சொல்லப்பட்ட அந்த வீடியோவை, சில பெண்கள் மட்டும் மொழி அரசியலின் உட்கூறுகளைப் புரிந்து நிராகரிக்கச் சொன்னார்கள்.

நம் சமூகம் இப்படித்தான் இயங்குகிறது. ஒரு தவறுக்கு பிரதிபலனாக இன்னொரு தவறு நிகழ்கிறது. அது சரி, தவறு என்றால் என்ன? ஒரு ஆண், ஒரு பெண்ணை படுக்கைக்கு அழைத்தால் தவறா? உடலிச்சையின் மிக முக்கியமான தடையே நம் கலாச்சார விதிகளின்படி அவற்றை வெளிப்படுத்த இயலாததன்மைதான். காமம் இங்கு ஒரு commodity தான். அதனால் பெண்ணும் commodity ஆகத்தான் மாறுகிறாள். அதனால், அதை வெளிப்படுத்தும்போது வேறென்ன கேட்பார்கள்? ரேட் என்ன என்பதைத் தவிர?

ஒருமுறை, ஜாஃபர்கான்பேட்டையின் தெருவழியே நான் நடந்து வரும்போது இருசக்கர வாகனத்தில் தொடர்ந்து வந்த ஒரு மத்தியதர, நடுத்தர வயது ஆண் என்னை முதன்முதலாக அந்தக் கேள்வியைக் கேட்டபோது நடுக்கமும் திடுக்கிடலும் ஒருசேர நிகழ்ந்தன. ஒரு நடுத்தர வயதுப் பெண்ணைப் பார்த்து எப்படி இப்படிப் பேச முடிகிறது என்று தோன்றிற்று. நான் பதில் சொல்லாமல் முன்னே நடக்க, என்முன் வாகனத்தை செலுத்தியபடியே பல தெருக்கள் தாண்டி வந்தார். கடந்த தெருக்களில் ஆள் நடமாட்டமில்லை. அடுத்த தெருவில் ஆட்கள் இருந்தார்கள். அப்போது மீண்டும் வாகனத்தை என்னருகில் உரசும்படி நகர்த்தி ‘எவ்ளோன்னு சொல்லு’ என்றார்.

நான் பயங்கரமாக கத்தினேன். அவரிடம் பதட்டமில்லை. வாகனத்தை மட்டும் நகர்த்தி கிளம்பிவிட்டார். இந்த துணிச்சல் எங்கிருந்து வருகிறது? அதிகாரத்தின் வழிதான் வருகிறது. அந்த அதிகாரத்தை யார் இவர்களுக்கு அளித்தது? உடற்பசியை இப்படி கூவிக்கூவி மலினப்படுத்த இவர்கள் எங்கே கற்றுக் கொண்டார்கள்?

பாலியல் இச்சைகளை தங்கள் துணையோடு எத்தனை பெண்கள் பகிர்ந்துகொள்ளும் வெளி கிடைக்கிறதென நான் அறியேன். திரைப்படங்களில் முத்தம் கேட்கும் பெண்கள்கூட மாயை உலகின் பிரதிநிதிகளாகத்தான் கருதப்படுகிறார்கள்.

ஒரு சிறு குறும்படம் பார்த்தேன். அலுவலகத்தில் ஒரு பெண்ணையே அடிக்கடி கூப்பிட்டு அவள் உடலை பார்வையால் மேயும் ஒரு மேலதிகாரி. எரிச்சலடைந்த அவள், நடு அலுவலகத்தில் தனது மேலாடையை கழற்றுகிறார். மேலதிகாரி இப்போது பதறுகிறார். ரேட் என்ன என்பது நேரிடையான ஒரு கேள்வி. ஆனால் கேட்காமலேயே பார்வைகளாலும் செய்கைகளாலும் சிலர் காமத்தை வெளிப்படுத்தும்விதம் மிகக் கேவலமானது.

சமீபத்தில் திரைத்துறையைச் சேர்ந்த சில நடிகைகள், தாங்கள் வாய்ப்புக்காக எப்படி பாலியல் வற்புறுத்தல்களுக்கு ஆளானோம் என்பதைச் சொல்லியிருந்தார்கள். இவை மிக முக்கியமானவை என்பதென் தீர்மானம். அவற்றைச் சொல்வதன்மூலம் இரண்டுவிதமான பிரச்னைகளை அவர்கள் எதிர்கொண்டிருக்கக்கூடும். ஒன்று, சம்பந்தப்பட்டவர்கள் பலரோடு பேசி அவரது தொழில் வாய்ப்புகளை பாதிக்கச் செய்யும் வாய்ப்புகள் இருக்கக்கூடும். இரண்டாவது, சொன்னவரின் காதல் வாழ்வை கொச்சைப்படுத்தி ஊடகங்கள் பேசியிருக்கக்கூடும்.

மானுட விழுமியங்கள் பேசும் ஒரு தமிழ் இயக்குநர், என் தோழி ஒருவரிடம் எப்படி உம்மாக்கள் கேட்டார் என்பது, கேட்ட நொடி மிக அதிர்ச்சிகரமானதாக இருந்தது. ஆனால் சமூகம் இப்படித்தான் இயங்குகிறது. இதை வெளியே சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் தவிக்கும் பெண்களின் நிலையை சமூகம் யோசிக்கவோ, அவர்களை யாரும் சரி செய்யவோ முயல்வதில்லை. இது நடிகைகள் மட்டும் சம்பந்தப்பட்டதில்லை. எல்லாப் பெண்களுக்கும் பொதுவானது.

எனக்கு நெருக்கமான ஒரு பெண், திருமணத்துக்குப் பிறகு மிகுந்த வலியை சுமந்து மவுனமானாள். அவளிடம் ஒருமுறை மெல்லப் பேசி, என்ன பிரச்னை என்று அறிய விரும்பினேன். ஏனெனில், அவள் அத்தனை மகிழ்ச்சியான பெண். நீண்ட தயக்கத்துக்குப் பிறகு சொன்னாள்:

‘க்கா.... சொல்ல முடில... எல்லாமே... அதாச்சும்... அதாவது... அவங்களுக்கு ஆம்பளங்கதான் புடிக்குமாம்... அவங்க அம்மா, அப்பா கட்டாயத்துலதான் என்ன... என்ன...’

‘அம்மா அப்பாட்ட சொல்ல வேண்டிதுதான...’

‘ஆயிரம் கடன் வாங்கி கல்யாணம் செஞ்சி வச்சாங்க...’

மூன்று வருடங்களில் குழந்தை இல்லை என்று இவளை வீட்டுக்கு அனுப்பிவைத்தார்கள். யாரும் அந்த மாப்பிள்ளையைப் பற்றி பேசவுமில்லை.

அப்படித்தான் தன் நிலைமையும் உள்ளதென ஒரு ஆண் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

அன்புள்ள தோழி,

பகிர்ந்துகொள்ளத் தயங்கிய ஒருவனின் குரல் இது. நான் கொஞ்சம் கவிதை எழுதுபவன். மூன்று பெண்களுடன் பிறந்த தலைமகன். மூத்த பையனுக்கான சகல கடமைகளையும் முடித்து நான் திருமணம் செய்துகொண்டபோது முன்னந்தலையில் வழுக்கை. அவளுக்கு என் புறத்தோற்றம் பிடிக்கவில்லை. ஆனால் வேறு வழியுமில்லை. பிடிக்காத ஒருத்தியோடு வாழ்வதன் சகல அவமானங்களையும் பெற்றுவிட்டேன்.

என்னை, எனக்காக என் முன்னந்தலை முடியற்றதன்மையோடு நேசிக்கும் ஒரு பெண் வேண்டும். ஆனால் அது நிகழாததால் மனதில் ஏற்படும் இறுக்கம் தாங்க இயலவில்லை. ஒரு வெற்று வாழ்வை நான் மட்டுமல்ல; என் மனைவியும் வாழ்கிறார்.

என்ன செய்ய என்று உங்களைக் கேட்கவில்லை. தயவுசெய்து பிரிந்துவிடுங்கள் என்றோ, வேறு வழியில்லை என்றோ, சமன்படுத்தும் மனதால் வாழுங்கள் என்றோ சொல்லிவிடாதீர்கள் தோழி.

நல்லது. பகிர்தல் பாரம் குறைக்கிறது. இதை நீங்கள் பிரசுரிக்கலாம். என்போல் இன்னும் பலர் இருப்பார்களென நம்புகிறேன்.

என் முகத்தை கண்ணாடியில் பார்க்கத் தோன்றுகிறது. வேறென்ன சொல்ல?

-----------

உங்களுக்குப் பகிர இயலாத, தயக்கம் நிறைந்த பிரச்னைகள் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் என்னிடம் பகிரலாம் நீங்கள் மின்னஞ்சலில்.

[email protected]

உரையாடுவோம்...

கரையேறுவோம்...

---------

கட்டுரையாளர் குறிப்பு : எழுத்தாளர் தமயந்தி

ஒடுக்கப்பட்ட பெண்களின் சார்பில் தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர். இவரது 'அக்கக்கா குருவிகள்', 'சாம்பல் கிண்ணம்' சிறுகதைத் தொகுப்புகள் வாசகர்களிடையே பரவலான கவனத்தைப் பெற்றவை. இவரது முக்கிய கட்டுரைத் தொகுப்பு 'இந்த நதி நனைவதற்கல்ல'. திரைப்படத்துறையில் பணியாற்றி வருகிறார். இயக்குநர் மீரா கதிரவனின் 'விழித்திரு' திரைப்படத்தில் வசனமும், பாடலும் எழுதியுள்ளார்.

வல்லமை தாராயோ - 1 - தமயந்தி

வல்லமை தாராயோ - 2 - தமயந்தி

வல்லமை தாராயோ - 3 - தமயந்தி

வல்லமை தாராயோ - 4 - தமயந்தி

புதன், 12 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon