மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 12 ஏப் 2017

அராத்து எழுதும் உயிர் மெய் - 2 (நாள் 36)

அராத்து எழுதும் உயிர் மெய் - 2 (நாள் 36)

விதேஷ்:

தனது அறைக்கு வந்த விதேஷுக்கு டென்ஷன் இன்னும் மிச்சமிருந்தது. ஆனாலும் தான் ஏன் இப்படி தன்னிலை இழந்தோம் என யோசித்தான். நிலைக்கண்ணாடி முன் நின்றுகொண்டு,

“ஐ ஆம் நாட் எமோஷனல் , ஐயம் ஸ்மார்ட் , ஐயம் ப்ராக்டிக்கல்

ஐ ஆம் நாட் எமோஷனல் , ஐயம் ஸ்மார்ட் , ஐயம் ப்ராக்டிக்கல்

ஐ ஆம் நாட் எமோஷனல் , ஐயம் ஸ்மார்ட் , ஐயம் ப்ராக்டிக்கல்

ஐ ஆம் ஸ்மார்ட்

ஐ ஆம் ஸ்மார்ட்

ஐ ஆம் பிராக்டிக்கல்

ஐ ஆஆஆஆம் ப்ராக்ட்டிக்க்க்க்கல்” என்று கத்தினான்.

ரெஸ்ட் ரூம் சென்று, வாஷ் பேசினில் முகம் கழுவினான்.

இன்னொரு ரவுண்ட் குடிக்கலாமா என்று கண்ணை மூடிப்பார்த்து தன் போதையை சோதித்துப் பார்த்துக்கொண்டான். முடிவெடுக்க முடியவில்லை. சிகரெட் குடிக்கலாமா என்று கண்ணை மூடி யோசித்தான். நிக்கோடின் தேவைப்படவில்லை. என்னவோ தேவையாயிருந்தது. என்னவென்று கண்டுபிடிக்க முடியவில்லை. செக்ஸா என்று கண்ணை மூடித் தியானித்துப்பார்த்தான். தேவைப்படுவது போலத் தோன்றினாலும் , இடுப்பு வளாகத்தில் சோர்வாக உணர்ந்தான்.

ச்சை என்று சோஃபாவில் அமிழ்ந்தான்.

எதையும் யோசிக்காமல் கொஞ்ச நேரம் கிடந்தபோது, சிம்பிளாக வயிறு பசி என்று உணர்த்தியது. பசி என்பதை உணர்ந்ததும், பசி வேட்கையை அதிகரித்தது. அப்போதுதான் வயிற்றில் அமிலம் குழைந்து கொண்டு இருந்தது தெரிந்தது. பேச்சு சுவாரஸ்யத்திலும், கோபத்திலும் குடிக்கும்போது எந்தப் பழங்களும், எந்த சாலடும் எடுத்துக்கொள்ளாதது நினைவுக்கு வந்தது. அமிலம் வயிற்றை அரித்துக்கொண்டு இருப்பதாகப்பட்டது.

சரேலென்று எழுந்த விதேஷ், தலையைச் சிலுப்பிக்கொண்டான்.

ஹோம் டெலிவரி செய்யப்பட்டு இருந்த பார்சலை பாய்ந்து எடுத்துப் பிரித்து, ஸ்டார்ட்டர், மெயின் கோர்ஸ், கிரேவி எனக் கலந்து கட்டி வெறி கொண்டவன் போல சாப்பிட ஆரம்பித்தான்.

சாந்தவி:

மிகவும் அவமானமாக உணர்ந்தாள் சாந்தவி. எல்லா ஆம்பளைங்களும் சைக்கோ என்று மனதில் வெறி தோன்றியது. சிறிது நேரம் புல்வெளியிலேயே அமர்ந்து இருந்தாள். இப்போதே வெளியேறி விட வேண்டும் என்று யோசித்தபடி அமர்ந்து இருந்தாள்.

மெதுவாக எழுந்து யோசித்தபடியே வீட்டுக்குள் நுழைந்தாள். ஹாலில் இருக்கும் ஃப்ரிட்ஜைத் திறந்து, சில்லென்று தண்ணீர் குடித்தாள். ஷமித்ரா அறைக்குச் செல்லலாமா? எங்கே செல்லலாம்? என்று யோசித்தபடியே மாடிப்படி ஏறினாள். மாடியில் இருக்கும் ஒரு அறைக்கதவைத் தள்ளினாள். திறந்து கொண்டது. உள்ளே சென்று வெளிச்சத்தைப் பாய்ச்சினாள். ஏசி வேலை செய்தது. கெஸ்ட் ரூம் போல. தொப்பென்று படுக்கையில் விழுந்தாள். சாந்தவிக்கும் வயிறு பசியை வெளிப்படுத்தியது.

தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? ஏன் விதேஷை தேர்ந்தெடுத்தோம்? பணக்காரன் என்பதாலா? ஜாலியானவன் என்பதாலா ? நமக்கு என்னதான் வேண்டும்? காலைச் சுற்றி வரும் காவியக் காதலனா? வீட்டுத்தேவைகளைக் கவனித்துக்கொள்ளும் மிடில் க்ளாஸ் தொம்மையா? அனைத்திலும் அசத்தும் ஆற்றல் மிக்கவனா? லைஃப் ஸைடைலுக்கு பணம் சப்ளை செய்யும் இளிச்சவாய பணக்காரனா? தடவி விட்டு தூங்கி விடும் ஸ்வீட் அங்கிளா? என்ன தான் எனது தேவை என சாந்தவிக்கு மண்டைக் குழம்பியது.

எதற்கு இந்த அவமானம்?

மேலே சொன்ன ஒரு சில வகையான காதலர்களை சாந்தவி தன் வாழ்வில் பார்த்து விட்டாள். பழகியும் வாழ்ந்தும் பார்த்து விட்டாள். இன்னும் எதைத்தான் நான் தேடிக்கொண்டு இருக்கிறேன்.

சுதந்திரம், தனித்தன்மை வேண்டும் என்று நினைத்தால், இவனிடம் வந்தாலும் முதலில் அடிவாங்குவது இதுதான். சுதந்திரம் தனித்தன்மை தாண்டி, மரியாதையே பறி போகிறது. பெரிய அட்வான்ஸ் லைஃப் ஸ்டைல், மாற்று வாழ்க்கை முறை என்று நினைத்துக்கொண்டால், இங்கேயும் ஒரு வித்தியாசமும் இல்லை. ஊர் நாட்டான் எப்படி தன் மனைவியை அசிங்கப்படுத்தி அவமானப் படுத்துவானோ அதேதான் இங்கேயும் நடக்கிறது. என்ன... ஊர்க்காரி, தண்ணி அடிக்க முடியாது. அவன் மட்டும் குடித்துவிட்டு வந்து உதைப்பான். இங்கே உடனமர்ந்து குடிக்க முடிகிறது. குடிக்க வைத்து அவமானப்படுத்துகிறான். ஊர் நாட்டான் செய்வதை விட மேலாக!

என்ன செய்யலாம்?

சாந்தவி, நீ புத்திசாலி. உணர்ச்சிவசப்பட்டு முடிவு எடுப்பவள் அல்ல. இப்போது எந்த முடிவும் எடுக்காதே. தூங்கு, தூங்கு… தூங்கு... தூங்கு... தூங்கு... தூங்கு... தூங்கு... தூங்கு... தூங்கு... எனச் சொல்லிக்கொண்டு கண்களை மூடிக்கொண்டாள்.

தூக்கம் வருவேனா என்றது.

பணம்... யெஸ், பணம் தான் முக்கியம். பணம் தான் அதிகாரம் . பணம் தான் பவர் . பணம் , பணம் என மனனம் செய்து கொள்ள ஆரம்பித்தாள்.

அது எப்படித் தனித்து இருக்கும் ஆணிடம் பணம் சேர்கிறது. ஆண் சுயம்புவாக பிஸினஸ் மேன் ஆகிறான். ஏன் பெண்கள் ஆகக்கூடாது? நான் ஏன் கோடீஸ்வரி ஆகி , இதைப்போல என்னுடன் இருக்கும் ஒருவனைச் செருப்பால் அடித்து அவமானப்படுத்தக்கூடாது? வெளியே போடா நாயே எனக் கத்தக்கூடாது?

ஆசை வலுத்தது. ஆவேன் என்று கருவிக்கொண்டே தூக்கத்தினுள் பாதி விழுந்தாள்.

நாள் 1|நாள் 2|நாள் 3|நாள் 4|நாள் 5|நாள் 6|நாள் 7|நாள் 8|நாள் 9|நாள் 10|நாள் 11|நாள் 12|நாள் 13|நாள் 14|நாள் 15|நாள் 16|நாள் 17|நாள் 18|நாள் 19|நாள் 20|நாள் 21|நாள் 22|நாள் 23|நாள் 24|நாள் 25|நாள் 26|நாள் 27|நாள் 28|நாள் 29||நாள் 30|நாள் 31|நாள் 32|நாள் 33|நாள் 34|நாள் 35

புதன், 12 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon