மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 10 ஏப் 2017

அராத்து எழுதும் உயிர் மெய் - 2 (நாள் 34)

அராத்து எழுதும் உயிர் மெய் - 2 (நாள் 34)

ஓவியம் : ரஞ்சித் பரஞ்சோதி

சந்தன் நிச்சயம் செத்துடுவான் என்று விதேஷ் சொன்னதும், ஷமித்ராவுக்கு கட்டுக்கடங்காத கோபம் வந்தது. அவன் இறந்துகூட போகட்டும். ஆனால், அதை ஏன் இவ்வளவு க்ரூயலாக இப்போது சொல்ல வேண்டும் என்று எரிச்சலடைந்தாள்.

ஜாலியாக இருக்கும் ஒரு கூட்டத்தில், சோகமாக ஒருவர் இருந்தால் மற்றவர்களுக்கு டிஸ்டர்ப் ஆகிறது. சோகமானவரின் சோகத்தை கேட்கவோ, பகிர்ந்து கொள்ளவோ யாருக்கும் மனமும் பொறுமையும் இருப்பதில்லை. உடனடியாக இன்ஸ்டண்ட் சொல்யூஷன் ஒன்றை கொடுத்து, சோகத்தை உடனடியாக முடித்துக்கொண்டு, எங்களுடன் ஜாலியாக வந்து கலந்து கொள் என்பதுதான் இதன் பின்னால் மறைந்திருக்கும் செய்தி அல்லது உளவியல். நவீன வாழ்க்கை உருவாக்கிய விதிகளில் இதுவும் ஒன்று. எப்போதும் ஜாலியாக இருக்க வேண்டும் அல்லது ஜாலியாக இருப்பது போல நடிக்கவாவது வேண்டும். அப்போதுதான் உங்கள் இடம் எந்த குழுவிலும் உறுதிப்படுத்தப்படும். இல்லையெனில், அவன் அறுப்பாண்டா என்று சொல்லி விலக்கி விடுவார்கள். ஜாலி, கொண்டாட்டம் அனைவரும் சேர்ந்து செய்வது. சோகம், வருத்தம் தனியே அனுபவித்துக்கொள்வது. ஒரு எழவுக்கு வந்தால்கூட ஒரு மணி நேரத்துக்கு மேல் இருக்காது இந்த கூட்டம். தண்ணி அடிக்க பறந்து விடும்.

அமைதியாக கேட்டுக்கொண்ட ஷமித்ரா எடுத்துக்கொண்ட கிளாஸை மட்டும் முடித்துவிட்டு, ‘குட் நைட்’ சொல்லி விட்டு மீண்டும் உள்ளே சென்று விட்டாள்.

ஷமித்ரா சென்றதும் கொஞ்ச நேரம் அமைதியாக கடந்தது.

“நீ அப்பிடி சொல்லிருக்கக் கூடாது விதேஷ்” என்றாள் சாந்தவி.

“என்ன சாந்தவி? அவன் அப்படியே ஒரு வருஷம் கிடக்கான்னு வச்சுக்கோ, ஒரு வருஷம் இவளும் மெண்டல் டிஸ்டர்பன்ஸோட மூஞ்சை சோகமா வச்சிகிட்டு சுத்திட்டு இருக்கணுமா? நான்சென்ஸ்”.

“அப்ப எனக்கு இப்பிடி ஆனாலும் ரெண்டு நாளில் தூக்கி கடாசிட்டு, நீ ஜலியா வாழ ஆரம்பிச்சுடுவியா விதேஷ்” என்றாள் சாந்தவி.

“அவ்ளோ ராவா இதை எடுத்துக்காதே” - விதேஷ்

“ராவாவே பேசுவோம், சொல்லு நீ என்ன பண்ணுவ?”

“பீ பிராக்டிக்கல். இப்ப சந்தனுக்கு ஆக்சிடெண்ட் ஆனதில் இருந்து, நான்தான் எல்லா வேலையும் பார்த்தேன். போலீஸ் கூட கோ ஆர்டினேட் பண்ணதில் இருந்து, டாக்டர் கூட இண்டராக்ட் பண்ணது, அவங்க பேரன்ட்ஸை வர வச்சது எல்லாம் நான்தான். டாக்டர் தெளிவா சொல்லிட்டாரு, அவன் பிழைக்க வாய்ப்பில்லைன்னு. அதுக்கு அப்புறம் அந்த உண்மையை ஏத்துகிட்டு, அடுத்த கட்டத்துக்கு நகர சொல்றேன். சும்மா மூஞ்சை தூக்கி வச்சுக்கிட்டு ஒக்காந்துட்டு இருப்பதால் என்ன நடக்கப்போகுது?”

“அது ஓகே விதேஷ்... ஆனா, சம்மந்தப்பட்டவங்களுக்கு வலி அதிகமா இருக்கும் இல்லையா? அவங்க கொஞ்சம் டைம் எடுத்துக்கட்டுமே. அவளை ஹர்ட் பண்ற மாதிரி ஏன் அப்படி சொல்லணும்?”

“எனக்கே இப்பிடி ஆனாலும், இப்படித்தான் சொல்லுவேன்” விதேஷ் தீர்க்கமாகச் சொன்னான்.

“வாழ்க்கையில எல்லாமே பிராக்டிக்கல் இல்லை விதேஷ். எமோஷனல், சென்டிமென்ட்டல் எல்லாம் இருக்கும். மொத்தமும் பிராக்டிக்கல்னா வாழ்க்கை நரகமாயிடும், மெஷின் போல மாறிடுவோம். இப்பிடி ஒக்காந்து பேசிட்டு குடிச்சிட்டு இருக்குறது கூட தேவையில்லை. இதுவே பிராக்டிக்கல் இல்லை, இல்லையா?”

“ஏன்? இது பிராக்டிக்கல்தான். இது எனக்குத் தேவையா இருக்கு. உன் கூட ஒக்காந்து பேசறது, தண்ணி அடிக்கிறது எல்லாம் மனசுக்கு இதமா இருக்கு. பிடிச்சி இருக்கு. சோ இது பிராக்டிக்கல்தான்”.

“சரி விதேஷ், கல்யாணம் எனக்கு பிடிக்கலை. உனக்கும் பிடிக்காதுன்னு தெரியும். லிவிங்க் டுகதர் எனக்கு ஓகே. ஆனா, அதுல ஒரு கமிட்மெண்ட் இருக்கணும், ஹானஸ்டி இருக்கணும், எதிக்ஸ் அண்ட் வேல்யூஸ் இருக்கணும்னு பார்ப்பேன் நான். நீ என்ன சொல்ற? உன் ஸ்டேண்ட் என்ன?”

“நீ சொல்ற கமிட்மெண்ட், எதிக்ஸ், ஹானஸ்ட், வேல்யூ எல்லாத்துக்கும் என்ன அர்த்தம் தெரியுமா? இத்தனை வார்த்தைகளை மாத்தி மாத்தி சொன்னாலும், இதுக்கெல்லாம் ஒரே அர்த்தம் என்ன தெரியுமா? நான் உன்னைத் தவிர வேற யார் கூடவும் செக்ஸ் வச்சுக்கக்கூடாது, அதானே” என்று கேட்டு இளக்காரமாகச் சிரித்தான் விதேஷ்.

நாள் 1|நாள் 2|நாள் 3|நாள் 4|நாள் 5|நாள் 6|நாள் 7|நாள் 8|நாள் 9|நாள் 10|நாள் 11|நாள் 12|நாள் 13|நாள் 14|நாள் 15|நாள் 16|நாள் 17|நாள் 18|நாள் 19|நாள் 20|நாள் 21|நாள் 22|நாள் 23|நாள் 24|நாள் 25|நாள் 26|நாள் 27|நாள் 28|நாள் 29||நாள் 30|நாள் 31|நாள் 32|நாள் 33

திங்கள், 10 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon