மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 6 ஏப் 2017

அராத்து எழுதும் உயிர் மெய் - 2 (நாள் 30)

அராத்து எழுதும் உயிர் மெய் - 2 (நாள் 30)

ஓவியம் : ரஞ்சித் பரஞ்ஜோதி

‘உன்னைப்போன்ற பெண்தான் வேண்டும்’ என்று கதிர் கேட்டதும், ‘இதெல்லாம் ரொம்ப பழைய ஸ்டைல் டயலாக் கதிர்’ என்று சொல்லிச் சிரித்தாள் ஷமித்ரா. ‘இப்படித்தான் உன் கேர்ள் ஃபிரண்டு கிட்டவும் பேசுவியா?’ என்று மீண்டும் சிரித்தாள்.

கதிருக்கு உடனடியாக ஏதும் சொல்லமுடியவில்லை. கேனத்தனமாக சிரித்தபடி சற்றுநேரம் அமர்ந்திருந்தான்.

‘என்னை மாதிரி ஒரு பொண்ணுன்னு சொன்னியே, ஒவ்வொரு பொண்ணும் ஒவ்வொரு மாதிரின்னு சொல்லுவாங்க கதிர். இந்த ஒவ்வொரு பொண்ணும் ஒவ்வொரு மாதிரி, ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு மாதிரின்னு சொல்றதெல்லாம் ரொம்ப போர் அடிக்கிது. சின்னச்சின்ன தனித்தன்மைகள், திறமைகள் இருக்கலாம் ஒவ்வொருத்தருக்கு உள்ளயும். அவங்க பழகின இடம், ஃபிரண்ட்ஸ், ரிலேஷன்ஸ், டீச்சர்ஸ் இவங்க எல்லாம் சேந்துதான் ஒருத்தரோட கேரக்டரை டிசைன் பண்றாங்க. அந்த ஒருத்தரும் டிசைன் பண்றவங்களோட கேரக்டரை டிசைன் பண்றார். இது அப்படியே இன்ஃப்ளூயன்ஸ் ஆயி செயின் ரியாக்‌ஷனா போயிக்கிட்டு இருக்கு. இது இல்லாம சினிமா, சோஷியல் மீடியா எல்லாம் ஒவ்வொருத்தரோட கேரக்டரையும் இன்ஃப்ளூயன்ஸ் பண்ணுது. நல்லவன் கெட்டவன்னு எவனும் கிடையாது. இப்ப இருக்கும் ஒவ்வொருத்தரும் ஒரு கூட்டத்தின் ஒரு துளிதான்.

லவ்வுன்னு வந்தா, கஷ்டப்பட்டு ரெண்டு வருஷம் தாக்குப்பிடிக்க முடியுமான்னு பாக்கணும். அந்த ரெண்டு வருஷத்துல ஒருத்தரோட கேரக்டர் இன்னொருத்தர் கேரக்டரை பாதிச்சி பாதிச்சி, ரெண்டு பேரும் தொடர்ச்சியான நெகோஷியேஷன் மூலமா ஒரு கம்ஃபர்டான ஜோனை அடைய முடியும். அதுவரை தாக்குப்பிடிக்க முடியலைன்னா புட்டுக்க வேண்டியதுதான்’ இதைச் சொல்லிவிட்டு கிளாஸை எடுத்து கொஞ்சம் தண்ணீர் குடித்தாள்.

‘என்ன ஷமித்ரா, ஒரு உதாரணத்துக்கு ஒண்ணு சொன்னா இவ்ளோ பெரிய லெக்சர்? எப்ப தத்துவ ஞானி ஆனீங்க?’ என்று நக்கலாகக் கேட்ட கதிர், கொஞ்சம் நேரம் கழித்து ‘ஸாரி, கடந்த ஒரு வார தொடர் அலைச்சல் உங்களை இப்படில்லாம் யோசிக்க வச்சிருக்கும்’ என்றான்.

‘சரி, போகலாம்’ என்று ஷமித்ரா எழுந்துகொண்டாள்.

இரவு நெடுநேரம் உறக்கம் வராமல் தவித்த ஷமித்ரா, அதிகாலையிலேயே எழுந்து கிளம்பிவிட்டாள். கதிர் பஸ் ஏற்றிவிட்டான். ‘அப்டேட் பண்ணிட்டே இரு கதிர்’ என்றாள்.

‘நிச்சயமா ஷமித்ரா’ என்றான்.

இரவு உறக்கம் இல்லாததால் பேருந்தில் தூங்கிவிட்டாள். உளுந்தூர்பேட்டை தாண்டியதும் வெயில் எழுப்பிவிட்டது. வெளியே பார்க்கத் தொடங்கினாள். மீண்டும் பெரும் சோகம் வந்து அப்புவதுபோலத் தோன்றவே, கண்களை மூடிக்கொண்டு பற்பல கற்பனை உலகத்தை ஓடவிட்டுப் பார்த்தாள். தான் பைத்தியம் ஆகிவிடுவோமோ என்ற பயம் வந்தது. பைத்தியம் என்பது ஒரு விடுதலைதானே? மரணத்தைவிட சுவாரசியமான விடுதலை. தான் என்ன ஆவோம், எப்படி இருப்போம் என்று தெரிந்த விடுதலை. மரணத்துக்குப் பின் என்ன ஆவோம் என்று தெரியாததால்தான், மரணத்தைக் கண்டு பயம் என்கிறார்கள். பைத்தியமானால் என்ன ஆவோம் என்று தெரிந்தும் பயமாகத்தானே இருக்கிறது? மரணம், பைத்திய நிலை, இரண்டிலுமே பயம் கிடையாது. ஆனால் அந்த நிலையை நினைத்து பயம். இப்படி, தாறுமாறாக சிந்தனை தறி கெட்டு ஓடியது. எல்லாம் அரைகுறை படிப்பால் வந்த வினை என நினைத்துக் கொண்டாள். பேருந்து வறட்டு உணவை உண்ண நின்றது. வருவதுபோல இருந்த சிறுநீரையும் கட்டுப்படுத்திக்கொண்டு கண்மூடி அமர்ந்திருந்தாள். சிறுநீரை கட்டுப்படுத்துவதிலாவது மனம் ஒருமுகப்படட்டும் என்ற எண்ணம் காரணமாக இருக்கலாம்.

சென்னை வந்து சேர்ந்ததும் கால் டாக்ஸி புக் செய்து வீடு வந்து சேர்ந்தாள். வீட்டில் யாரும் இல்லை. வீட்டினுள் நுழைந்ததும் சாந்தவி வீடெங்கிலும் நீக்கமற நிறைந்திருப்பதை கண்டுகொள்ள முடிந்தது.

தன் படுக்கையில் கவிழ்ந்து கொண்டாள். மனம் தறிகெட்டு பறந்து கொண்டிருந்தது. அந்த நிலையில் நீண்டநேரம் நீடிக்க முடியாது என்று தெரிந்தது. எழுந்து சென்று விதேஷ் அறையில் பார்த்தாள். சந்தன் பரிசளித்த கோனியாக் இருந்தது. ஃப்ரிட்ஜை திறந்து ஐஸ் எடுத்து அரை கிளாஸ் கோனியாக் நிரம்பியிருந்த கிளாஸில் போட்டு மடக்.. மடக்..கென எதிர்த்துக்கொண்டு வர வர குடித்தாள். கண்மூடி அமர்ந்தாள். மீண்டும் இன்னொரு கிளாஸ். கொஞ்சம் சம நிலைக்கு வந்ததுபோல இருந்தது. சமநிலை போதவில்லை, உடனடியாக தூங்க போதை தேவை. இன்னொரு கிளாஸ். போதை ஏறியது. தூங்க இது பத்தாது. இன்னொரு கிளாஸ். கண் செருகியது. இன்னொரு கிளாஸ் கலந்து எடுத்துக்கொண்டு படுக்கைக்குச் சென்றாள். தூக்கம் கலைந்துவிட்டால்? படுத்தவுடன் தூக்கம் கவ்விக்கொண்டது. கீழே இழுத்துக்கொண்டு போனது. ஆனாலும் நினைவு தப்ப மறுத்தது. எப்படியோ சடக்கென்று அறுந்து தூங்கிவிட்டாள்.

மறுநாள் சீக்கிரம் எழுந்து அலுவலகம் சென்று, தன் மேஜையில் அமர்ந்து விட்டுப்போன அலுவல்களை கவனிக்கத் தொடங்கினாள். வேலையில் மனம் பதியவேயில்லை. தப்புத்தப்பாக மெயில் அனுப்பினாள். அஃபிஷியல் மெயிலில் ஸ்மைலியாக போட்டுத் தாக்கினாள். வேண்டாம் வேண்டாம் என நினைத்துக்கொண்டே முக்கியமான டாக்குமெண்ட்டுகளை பர்மனண்டாக டிலீட் செய்தாள். அய்யோ! என சலித்துக்கொண்டே, முன்னிருக்கும் கீ போர்டில் தலையை சாய்த்துக்கொண்டு படுத்துக்கொண்டாள். கீ போர்ட் கீக்கள் குத்தியது - அக்குபங்ச்சர் மசாஜ்போல. இதமாக இருந்தது.

யாரோ தலையைத் தடவினார்கள். எழுந்து பார்த்தால் மாமல்லபுரம் பார்ட்டியில் ஆடும்போது கட்டிப்பிடித்து முத்தமிட்டவன். ஷாக் ஆகி எழுந்தேவிட்டாள். முதுகை தடவிக் கொடுத்தான் ஒருவன். யாரென்று திரும்பிப் பார்த்தால், கிளப்பில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அறைக்கு தூக்கிச் சென்றவன். இருவரையும் அடிக்க வேண்டும் என்று பெருமுயற்சி செய்தாள்.

எழுந்து விட்டாள். கனவு.

‘என்ன ஷமித்ரா ஆச்சு? எப்ப வந்த...’ என்று விதேஷ் கேட்டுக்கொண்டிருந்தான். நள்ளிரவா? விடிகாலையா ஒன்றும் தெரியவில்லை. உயிரோடுதான் இருக்கிறோம் என்று மட்டும் சுரணை வந்தது. அழலாம்போல இருந்தது. அண்ணன்மேல் சாய்ந்துகொண்டாள்.

நாள் 1|நாள் 2|நாள் 3|நாள் 4|நாள் 5|நாள் 6|நாள் 7|நாள் 8|நாள் 9|நாள் 10|நாள் 11|நாள் 12|நாள் 13|நாள் 14|நாள் 15|நாள் 16|நாள் 17|நாள் 18|நாள் 19|நாள் 20|நாள் 21|நாள் 22|நாள் 23|நாள் 24|நாள் 25|நாள் 26|நாள் 27|நாள் 28|நாள் 29|

வியாழன், 6 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon