மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 28 மே 2020

சிறப்புப் பேட்டி: டெல்லியில் விவசாயிகளுக்கு அன்னமிட்ட தமிழ் கைகள்..!

 சிறப்புப் பேட்டி:  டெல்லியில் விவசாயிகளுக்கு அன்னமிட்ட தமிழ் கைகள்..!

உலகிற்கே சோறுபோடுபவர்கள் விவசாயிகள். அத்தகைய விவசாயிகளின் நெற்றி வியர்வை நிலத்தில் வழிய செய்யும் ஒவ்வொரு வேலைக்குப்பின்னும் எக்கச்சக்கமான உடல் உழைப்பு, விதைநெல் முதல் அறுவடை செய்யும் வரை வாங்கிய கடன்கள், பல குடும்பங்களின் தூக்கம் தொலைத்த இரவுகள் என முடிவிலாத தியாகங்கள் அடங்கியுள்ளன.

அத்தககைய தியாகங்கள் செய்த விவசாயிகள், இந்தியாவின் தலைமையிடமான டெல்லியில் வறட்சி நிவாரணம், காவிரி மேலாண்மை வாரியம், தேசிய வங்கிகளில் கடன் தள்ளுபடி போன்ற பல்வேறு நடவடிக்கைகளை வலியுறுத்தி, டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் 8வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். நேற்று போராட்டம் வாபஸ் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று 64 விவசாயிகள் தொடர்ந்து அமைதியானமுறையில் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர். இப்போராட்டத்தை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தலைவர் திரு.அய்யாக்கண்ணு ஒருங்கிணைத்துவருகிறார்.

அவர்களுக்கு மூன்று வேளையும் உண்ண உணவு மற்றும் இரவில் தூங்க பெட்- ஷீட் மற்றும் மருந்து மாத்திரைகள் என அனைத்து செலவுகளையும், கடந்த சில நாட்களாக தொடர்ந்து செய்து வருகின்றன, டெல்லி வாழ்தமிழ் மக்கள்.

இப்போது அச்சேவையில் ஈடுபட்டுள்ள, டெல்லியில் பணிநிமித்தமாக வாழும் கோவில்பட்டியைச் சேர்ந்த இளம்பெண் சுசித்ராவிடம், பேசினோம்.

இச்சேவை செய்வதற்கான விதை விழுந்த இடத்தை நினைவுகூறமுடியுமா?

' எனக்கு சொந்தஊர் கோவில்பட்டி. எங்கப்பா ஒரு விவசாயி. என் அப்பாவுக்கு 66 வயசாகிடுச்சு. எங்கப்பகுதி முழுக்க மழையை நம்பி விவசாயம் செய்ற மானாவாரி விவசாயம் தான். போனதடவை கூட 4 லட்சம் கடன் வாங்கி, எங்க காட்டில விதைச்சப்போ...கடைசியாக 50,000 ரூபா தான் திரும்ப கிடைச்சது. அந்தளவுக்கு எங்கப்பாவோட வலி எனக்குத் தெரியும்.

அதனால் தான் டெல்லியில் விவசாயிகள் போராடும்போது, நானும் அவங்களுக்கு ஏதாவது செய்யணும்னு களத்தில் இறங்கினேன். என் நண்பர்கள் எல்லோர்கிட்டேயும் விவசாயிகளுக்கு உதவுங்கனு கேட்டேன். அப்படிதான் நாங்க எல்லோரும் ஒண்ணு சேர்ந்தோம்.

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு எப்ப இருந்து உதவ ஆரம்பிச்சீங்க?

முதல் நாள், டெல்லியில் விவசாயிகள் பிரதமர் வீட்டை முற்றுகையிட்டு போராடுனா செய்தியை, டெல்லி தமிழ் ஊடகங்கள் போட ஆரம்பிச்சவுடன்...அவங்களுக்கு உதவணும்னு முடிவுபண்ணிட்டோம். அதுக்கப்புறம் போலீஸார்,

இவங்கள 'ஜந்தர் மந்தர்' எனும் பகுதியில் போராட அனுமதிச்சாங்க. அங்கு விவசாயிகள் பசிக்காக, அருகில் இருக்கும் 'குருத்வார்' எனும் சீக்கியர்களின் கோயில்களில் கையேந்துறது எங்களுக்கு தெரியவந்துச்சு. உடனடியாக எங்க நண்பர்கள் எல்லோர்கிட்டேயும் பேசினோம்.

சரியாக சொன்னா, அவர்களுடைய போராட்டத்தின் மூன்றாவதுநாள் இரவு முதல் உணவு, தொடர்ந்து மூன்றுவேளை கொடுக்க ஆரம்பிச்சிட்டோம். சில அடிப்படை மருத்துவத் தேவைகளையும் பூர்த்தி பண்ணுனோம்.

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு யாரெல்லாம் உதவுனாங்க?

டெல்லியில் கல்லூரியில் படிக்கிற அனைத்து தமிழ் மாணவர்களும் உதவுனாங்க. இங்கு இருக்கிற தமிழ்குடும்பங்கள் உணவு சமைச்சுட்டு வந்து, அப்பப்போ கொடுத்தாங்க. இங்கு குளிர் அதிகமாக இருந்ததால, இங்கு பணிசெய்யும் வழக்கறிஞர்கள், உடனடியாக பெட்- ஷீட் வாங்கி கொடுத்தார்கள். சில வட இந்தியர்கள் கூட வந்து போராட்டக் களத்தில் கலந்துக்கிட்டு போராடிட்டு, ஏதாவது வாங்கிக்கொடுப்பாங்க. இதில் எல்லோருடைய பங்கும் கலந்து இருக்கு.

ஆனால், சென்னை மீம்ஸ் மட்டும் தான், அதில் உணவளித்து உதவின மாதிரி, தங்களைத் தானே புரோமோட் பண்ணிக்கிறாங்க. அது வருத்தம் அளிக்குது. அதுமட்டுமில்ல, முதல் நாளே..இந்தப்பிரச்னையினை அனைத்து டெல்லி தமிழ் ஊடகங்களும் கவர் செய்ய ஆரம்பிச்சிருச்சு. ஆனால், யாரும் விவசாயிகளைக் கவர் செய்யலைன்னு, தவறாக புரோமோட் பண்றாங்க. இதெல்லாம் உண்மையில்லை.

உங்களோட சேர்ந்து தினமும் யார் யார் போராட்டக்களத்துக்கு வருவாங்க?

நிறைய இளைஞர்கள் வந்துபோராடிட்டு, உதவிட்டு போறாங்க. நான் முழுக்க, முழுக்க விவசாயிகள் கூட இருக்க முடியறது இல்லை. காலையில் சீக்கிரமாக வந்து பார்த்து, ஏதாவது உதவி வேணுமானு கேட்டு, அதைச் செய்ய ஏற்பாடு பண்ணிட்டு வேலைக்கு போயிடுவேன். அதுமாதிரி, வேலையை முடிச்சிட்டு இரவு 11.30 மணிவரை, இவுங்க கூட தான் இருப்பேன். என்னோட தொடர்ந்து மல்லிகா - சதீஷ் தம்பதியினர் வந்து உணவு கொடுத்திட்டு இருக்காங்க. தவிர, ராஜ்குமார், சஃபி, மனோஜ், சத்யா, ஜி.எஸ்.மணி, சுவேத், குணசேகர் ஆகியோரும் தொடர்ந்து வந்து உதவுறாங்க.' என்றார்.

நாமும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து, விடைபெற்றோம்.

- ம.மாரிமுத்து

செவ்வாய், 21 மா 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon