மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 28 மே 2020

பணக்காரர் பட்டியல்: பில் கேட்ஸ் - அம்பானி ஆதிக்கம்!

பணக்காரர் பட்டியல்: பில் கேட்ஸ் - அம்பானி ஆதிக்கம்!

உலகின் முன்னணி பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை ஒவ்வொரு வருடமும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள 2017ஆம் ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். 86 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்ட பில் கேட்ஸ் இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அடுத்ததாக, இரண்டாம் இடத்தில் வாரன் பஃப்பெட் (75.6 பில்லியன் டாலர்), மூன்றாவது இடத்தில் அமேசான் நிறுவனத் தலைவர் ஜெஃப் பிசோஸ் (72.8 பில்லியன் டாலர்) ஆகியோர் உள்ளனர்.

சென்ற ஆண்டு இந்தப் பட்டியலில் 324ஆவது இடத்தில் இருந்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இந்த ஆண்டு 220 இடங்கள் பின்தங்கி பட்டியலில் 544ஆவது இடத்தில் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு 3.5 பில்லியன் டாலர் ஆகும்.

சென்ற ஆண்டு இந்த பட்டியலில் 36ஆவது இடத்தில் இருந்த இந்தியாவின் முகேஷ் அம்பானி மூன்று இடங்கள் முன்னேறி 33ஆவது இடத்தில் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு 23.2 பில்லியன் டாலராகும். இவரைதொடர்ந்து, இந்தியாவைச் சேர்ந்த லக்ஷ்மி மிட்டல் (16.4 பில்லியன் டாலர்) 56ஆவது இடத்திலும், அசிம் பிரேம்ஜி (14.9 பில்லியன் டாலர்) 72ஆவது இடத்திலும், ஷிவ் நாடார் (12.3 பில்லியன் டாலர்) 102ஆவது இடத்திலும் உள்ளனர்.

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டைவிட 13 சதவிகிதம் அதிகரித்து 2,043 ஆக உள்ளது. இது கடந்த 31 வருடங்களில் அதிகப்படியான வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 21 மா 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon