மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 மா 2017

காதலர்கள் தாக்குதல் : களத்தில் இறங்கும் கிஸ் ஆஃப் லவ்!

காதலர்கள் தாக்குதல் : களத்தில் இறங்கும் கிஸ் ஆஃப் லவ்!

கொச்சியில் பேசிக்கொண்டிருந்த காதலர்களை சிவசேனா தொண்டர்கள் அடித்து விரட்டியதைக் கண்டித்து, இன்று மாலை முத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம், கொச்சியில் உள்ள மரைன்டிரைவ் பகுதி சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வந்துசெல்லும் இடம். இங்கு தினமும் ஏராளமான காதலர்கள் வருவதுண்டு. இவர்களின் சில்மிஷங்களால் அங்கு வருபவர்கள் முகம் சுழித்தபடி செல்கின்றனர். இந்த நிலையில், நேற்று கொச்சி மரைன் டிரைவ் பகுதிக்கு சிவசேனா தலைவர் தேவன் உள்பட 10க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கையில் பிரம்புடன் வந்தனர். அதைத் தொடர்ந்து, கோஷமிட்டபடியே அங்கிருந்த காதலர்களை விரட்டி அடித்தனர். இதையடுத்து, காதலர்கள் அங்கிருந்து அலறியடித்தபடி ஓடினர். இந்தச் சம்பவம் நடந்தபோது எர்ணாகுளம் மத்திய போலீசாரும் அங்கு இருந்தனர். ஆனால் அவர்கள் சிவசேனா தொண்டர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதைத் தொடர்ந்து, பொதுமக்கள் போலீசாருக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுதொடர்பாக விசாரிக்க கேரள டிஜிபி லோக்நாத் பெஹ்ரா உத்தரவிட்டார். தொடர்ந்து பணியிலிருந்த எர்ணாகுளம் மத்திய சப்-இன்ஸ்பெக்டர் விஜயசங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் 8 போலீசார் எர்ணாகுளம் ஆயுதப் படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதற்கிடையே சிவசேனா நடவடிக்கையைக் கண்டித்து, இன்று மாலை கொச்சியில் முத்தப் போராட்டம் நடத்தப்போவதாக கிஸ் ஆஃப் லவ் அமைப்பினர் அறிவித்துள்ளனர். ஏற்கனவே, கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கொச்சியில் இந்த அமைப்பினர் பொது இடங்களில் முத்தப் போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினர். அந்தப் போராட்டத்தில் மோதல் ஏற்பட்டு போலீசார் தடியடி நடத்தி விரட்டியது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு, கடந்த 2 வருடங்களாக முத்தப் போராட்டம் கேரளாவில் நடைபெறவில்லை. இந்நிலையில், கிஸ் ஆஃப் லவ் அமைப்பினர் மீண்டும் முத்தப் போராட்டத்துக்கு அழைப்புவிடுத்திருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வியாழன், 9 மா 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon