மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 மா 2017

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: களத்தில் அரசியல் கட்சிகள்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: களத்தில் அரசியல் கட்சிகள்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதும் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. யாருக்கு இந்த இடைத்தேர்தல் முக்கியமோ இல்லையோ, ஆளும் அதிமுக-வுக்கு முக்கியமானது. காரணம் ‘அதிமுக ஆட்சியை தமிழக மக்கள் விரும்பவில்லை. சசிகலா தலைமையில் இந்த அரசு இயங்குவதை தமிழக மக்கள் ஏற்கவில்லை’ என்ற கருத்து பொதுவாக நிலவி வருகிறது. எனவே, அந்தக் கருத்தை ஆளும் அதிமுக உடைக்க வேண்டிய அவசியமாகிறது.

தினகரன்

இந்நிலையில், அதிமுக ஆட்சிமன்றக் குழுவை மாற்றியமைத்து டி.டி.வி.தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஆட்சிமன்றக் குழுவின் தலைவராக சசிகலா செயல்படுவார். உறுப்பினர்களாக செங்கோட்டையன், டிடிவி தினகரன், பா.வளர்மதி, தமிழ்மகன் உசேன், வேணுகோபால், ஜஸ்டின் செல்வராஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து ஆட்சிமன்றக் குழு முடிவுசெய்யும் என்று தினகரன் கூறியுள்ளார். மேலும் இடைத்தேர்தல் குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், ஜெயலலிதா இருந்தபோது எப்படி ஒற்றுமையாகச் செயல்பட்டு தேர்தல் பணியாற்றினோமோ அப்படியே இப்போதும் ஒற்றுமையாகச் செயல்பட்டு தேர்தல் பணியை மேற்கொள்வோம். பன்னீர்செல்வம் குறித்து மீடியாக்கள்தான் அதிகம் பேசினாலும் தங்களைப் பொருத்தவரை ஓ.பி.எஸ். என்பவர் ஜீரோ பி.எஸ்.தான். இடைத்தேர்தலில் திமுக-தான் தங்கள் எதிரி என்றும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றிபெறும் எனவும் தெரிவித்தார். ஆர்.கே.நகர் தொகுதி அதிமுக வேட்பாளர் யார் என்பது பற்றி ஆட்சிமன்றக் குழு முடிவுசெய்யும் எனவும் தெரிவித்தார்.

வைகைச்செல்வன்

இதுதொடர்பாக அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் பேசும்போது, இடைத்தேர்தலை அதிமுக உரிய முறையில் சந்திக்கும். அதிமுக பொதுச்செயலாளராக உள்ள சசிகலாவின் ஆலோசனையைப் பெற்று களப்பணி தொடங்கும். இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக-வை எதிர்த்து போட்டியிடுபவர்களை டெபாசிட் இழக்கச் செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார்

திருநாவுக்கரசர்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கூறும் போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முக்கியமான காலகட்டத்தில் நடக்கவுள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கூட்டணிக் கட்சிகளிடம் கலந்து பேசியபிறகு முடிவு எடுக்கப்படும். கூட்டணிக் கட்சியான திமுக ஏற்கனவே ஆர்.கே.நகரில் போட்டியிட்டது. எனவே, அதுகுறித்தும் ஆலோசிக்க வேண்டியுள்ளது என்று கூறியிருக்கிறார்.

திமுக

அதிமுக-வுக்கு எப்படி இந்த இடைத்தேர்தல் முக்கியமோ அதேபோல் திமுக-வுக்கும் முக்கியமே. மக்கள் ஆளும் கட்சியின் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள், குற்றவாளியான சசிகலா ஆட்சியை இயக்குவதை மக்கள் ஏற்கவில்லை என்று திமுக-வினர் கூறுவது உண்மைமென்றால், அதிக வாக்குகளில் இந்த இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற்று நிரூபிக்க வேண்டும். இல்லையெல் திமுக முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் பொருளற்றதாகப் போய்விடும்.

தீபா

அரசியலில் புதிதாக காலடி எடுத்துவைத்திருக்கும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தனக்கு மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ளதாக தீவிரமாக நம்பிக்கொண்டிருக்கிறார். அதனால்தான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெல்வேன் என்று தொடர்ந்து கூறிவருகிறார் தீபா. எனவே, தீபாவுக்கும் இந்தத் தேர்தல் மிக முக்கியமானதுதான். ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுதான் தீபாவின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

வியாழன், 9 மா 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon