மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 மா 2017

ஸ்மித் தவறு செய்தார் : முன்னணி வீரர்கள் கருத்து!

ஸ்மித் தவறு செய்தார் : முன்னணி வீரர்கள் கருத்து!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விதிகளை மீறி ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் செயல்பட்டார் என்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது ஸ்மித் ஆட்டமிழந்தார் என நடுவர் தீர்ப்பு வழங்கியபின்னர் DRS எனப்படும் ரிவ்யூ முறையைப் பயன்படுத்த பெவிலியன் பக்கம் மானிட்டர் செய்துகொண்டிருந்த வீரரிடம் அவர் செய்கையில் கேட்டார். அதைப் பார்த்த இந்திய அணி கேப்டன் கோலி மற்றும் ரஹானே அதற்கு கண்டனம் தெரிவித்து வாதிட்டு வந்தனர். அதனால் மைதானத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பல முன்னணி வீரர்களும் தங்கள் கருத்தை தெரிவித்தவண்ணம் இருக்கின்றனர்.

அதன்படி, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் நான் விளையாடிய காலத்தில் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் கிடையாது. ஆனால் சுமித்தின் செயல் விதிமுறைக்கு எதிரானதுதான் என்று சந்தேகிக்கிறேன். இது நல்ல விஷயமல்ல. அவர் நிச்சயம் எச்சரிக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறுகையில் கிரிக்கெட் விதிமுறைப்படி, ஸ்டீவன் சுமித் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தடை விதிக்கும் வாய்ப்பிருந்தால் அதைச் செய்ய வேண்டும். போட்டி நடுவரும் கள நடுவர்களும் எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் ஸ்டீவன் சுமித் என்னிடம் வந்து யோசனை கேட்டபோது நான்தான் வீரர்களின் அறையை நோக்கும்படி கூறினேன். இது முழுக்க முழுக்க என்னுடைய தவறே. இதுதொடர்பான விதிமுறையை நான் அறிந்திருக்கவில்லை என்று ஆஸ்திரேலிய வீரர் ஹேன்ட்ஸ்கோம்ப் கூறினார்.

அதுமட்டுமின்றி, ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் தனது கருத்துகளை தெரிவித்திருந்தார். அதில் இதுவொரு அற்புதமான டெஸ்ட்டாக அமைந்தது. ஆனால் குறிப்பிட்ட ஒரு சம்பவத்தின்மீது மட்டும் கவனம் செலுத்துவது வெட்கக்கேடானது. ஸ்டீவன் சுமித் தனது தவறை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். சம்பவத்தின்போது, நடுவர்கள் தலையிட்டு பிரச்னையை சரி செய்தனர். பெவிலியன் திரும்பியதும் சுமித் தர்மசங்கடத்துக்கு உள்ளாகியிருப்பார். இதிலிருந்து அவர் நிச்சயம் பாடம் கற்றுக் கொண்டிருப்பார் எனத் தெரிவித்தார்.

வியாழன், 9 மா 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon