மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 மா 2017

பஞ்சபூதத்திலும் திமுக ஊழல் : டிடிவி தினகரன்

பஞ்சபூதத்திலும் திமுக ஊழல் : டிடிவி தினகரன்

ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்றபிறகு அவரது செயல்பாடுகளை திமுக வெகுவாகப் பாராட்டி வந்தது. இந்நிலையில் ஆட்சிமாற்றம் நடந்தது. சசிகலா சிறைக்குச் சென்றார். இதன்பிறகு திமுக தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது. உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டு தண்டனை பெற்றவரின் இயக்கத்தில் செயல்படுகிறது தமிழக அரசு என்ற விமர்சனத்தை முன்வைத்து வருகிறது. இந்நிலையில், இதற்கு அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் எதிர்வினையாற்றியிருக்கிறார். இதுகுறித்து, டிடிவி தினகரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக அரசை குற்றவாளிகளால் நடத்தப்படும் அரசு என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். விஞ்ஞானரீதியாக ஊழல் செய்தவர்கள் என நீதிபதி சர்க்காரியாவால் விமர்சிக்கப்பட்டவர்கள் யார், சர்க்காரியா கமிஷன் அறிக்கை வழக்காக மாறிவிடுமோ என அஞ்சி காவிரி, முல்லை பெரியாறு உரிமைகளைக் காவு கொடுத்தவர்கள் யார் என்பதை தமிழக மக்கள் அறிவார்கள்.

பழைய வீராணம் ஊழல் (நீர்), நிலக்கரி இறக்குமதி ஊழல் (நெருப்பு), பூச்சிமருந்து தெளிப்பில் ஊழல் (காற்று), மஸ்டர் ரோல் ஊழல் (நிலம்), அலைக்கற்றை ஊழல் (ஆகாயம்) என பஞ்சபூதங்களிலும் ஊழல் செய்த குடும்பம் யார் என்பதையும் தமிழக மக்கள் நன்கறிவார்கள். அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் உதயகுமார், முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன், அண்ணா நகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் என உயிரிழப்புகளுக்கு காரணமானவர்கள் யார் என்பதையும் மக்கள் அறிவார்கள்.

தண்டனை பெற்றவர்கள் அனைவரும் குற்றவாளிகள் அல்ல. தப்பித்துக் கொண்டவர்கள் அனைவரும் நிரபராதிகளும் அல்ல என்பதை உலகம் அறியும். ஒரு துரோகியோடு இணைந்து அதிமுக அரசை கவிழ்த்துவிடலாம் என செயல் தலைவர் தீட்டிய திட்டம் கைகூடவில்லை. ஓ.பி.எஸ்.ஸை தூக்கி எறிந்துவிட்டு, ஒரு இ.பி.எஸ்.ஸை கொண்டுவந்து அரசியல் மாற்றம், அமைதிப் புரட்சி அதிமுக-வில் நிகழ்ந்துள்ளது. வன்மம் நிறைந்த வார்த்தைகளால் ஸ்டாலின் வசைபாடி வருகிறார். இனியாவது அவர் உண்மையை உணர்ந்து பேசுவதே நல்லது என்றார்.

வியாழன், 9 மா 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon