மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 மா 2017

ஜெ மரண மர்மத்தை கண்டுபிடிக்க திரண்ட கூட்டம்!

ஜெ மரண மர்மத்தை கண்டுபிடிக்க திரண்ட கூட்டம்!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை கோரி, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடக்கும் உண்ணாவிரதத்தில், பன்னீர்செல்வம் பங்கேற்றுள்ளார். பொன்னையன், மதுசூதனன், பி.ஹெச்.பாண்டியன் போன்றோரும் எழும்பூரில் நடக்கும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர்.

போராட்டத்தில் முன்னாள் சபாநாயகர் பி.ஹச்.பாண்டியன் பேசுகையில், ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் சந்தேகம் தொடர்பாக போயஸ் கார்டன் வீட்டில் இருக்கு போன் டவரை பரிசோதித்தாலே ஜெயலலிதா கடைசியாக யார், யாரிடம் பேசியுள்ளார் என்றும் அவர்கள் வீட்டில் வேலை செய்த பணியாளர்களை விசாரித்தாலே குற்றவாளிகள் யார் என்று தெரிந்துவிடும். ஜெயலலிதாவின் மரணம் குறித்து ரிச்சர்ட் பீலே அறிக்கையிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கையிலும் நிறைய முரண்பாடுகள் உள்ளன. டெல்லிக்கு சென்று எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கையை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிடுகிறார். ராஜீவ் காந்தி கொலைக்கு விசாரணை நடத்த முன்று விசாரணை கமிஷன்கள் அமைத்தது போல் மத்திய அரசும், எடப்பாடி பழனிச்சாமி அரசும் ஜெயலலிதா மரணத்துக்கும் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும், இல்லையெனில் ஜெயலலிதாவின் ஆன்மா எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை கவிழ்த்துவிடும் என்றார்.

அடுத்ததாக பேசிய முன்னாள் அமைச்சர் சி. பொன்னையன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் அறிக்கை எதோ எதிர்கட்சிகளுக்கு பதில் அளிக்கும் அரசியல்வாதிகள் அறிக்கை போல் உள்ளது. மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பே நிரிழிவு நோய், மனஅழுத்தம் சிறுநீர் தொற்று உள்ளிட்டவை ஜெயலலிதாவுக்கு இருந்துள்ளது. சிறுநீர் தொற்றால் சீழ் பிடித்ததால்தான் ஜெயலலிதாவுக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளது.வசதி இருந்தும் சிகிச்சைக்காக ஏன் அவரை வெளிநாட்டுக்கு கொண்டு செல்லவில்லை?. தோல்நோய்க்காக அவருக்கு ஸ்டிராய்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது அதனால்தான் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே ஜெயலிதாவுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு சிகிச்சை கொடுத்த சிறப்பு மருத்துவர்கள் யார் என்று தெரிய வேண்டும் என்றார். இன்னும் சில முக்கிய காரணங்களை விரைவில் வெளியிட உள்ளேன்.

அடுத்ததாக பேசியஅவைத்தலைவர் மதுசூதனன், சசிகலாவால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் அதில் நானும் ஒருவன். சசிகலா எனக்கு வாரிய தலைவர் பதவி தருவதாக ஆசை காட்டினார். அவர்களின் சொத்து மதிப்பு தற்போது எவ்வளவு என்பதை ஆராய்ந்து அந்த சொத்துக்களை பறிமுதல் செய்து அவைகளை அதிமுகவில் சேர்க்கவேண்டும். சசிகலா ஒரு பூலான்தேவியாக செயல்படுகிறார் என்றார் காட்டமாக.

இறுதியாக உண்ணாவிரத முடிவில் பேசிய ஒ. பன்னிர்செல்வம், ஒரு குடும்பத்தின் கையில் ஆட்சி சென்றுவிடக்கூடாது என்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட அதிமுக இன்று ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கியுள்ளது, அந்த குடும்பம் அதிமுகவை கபளீகரம் செய்துவிட்டது. ஜெயலலிதாவின் மரணத்தில் ஏழரை கோடி தமிழர்களுக்கும் சந்தேகம் உள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட பிறகு இறக்கும் வரை, நான் உள்பட எவருமே அங்கு அனுமதிக்கபடவில்லை. நேற்று முன்தினம் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருக்கிறார் விசாரணை கமிஷன் அமைத்தால் முதலில் நான்தான் விசாரிக்கப்படுவேன் என்று. விசாரணை கமிஷன் அமைக்க சொல்வதே நான்தான் எனவே என்னையே முதலில் விசாரிக்கட்டும். முடிவில் முதல் குற்றவாளியாக விஜயபாஸ்கர் தான் இருப்பார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் அடையும் தருவாயில் இருப்பதாக என்னிடம் யாரும் கூறவில்லை. மரணம் அடைய வாய்ப்பு உள்ளதாக என்னிடம் தெரிவித்த என் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விடுத்த அறிக்கையை வாபஸ் பெறவேண்டும் இல்லையேல் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். கடந்த 2011 ஆம் ஆண்டு சசிகலா வெளியிட்ட மன்னிப்பு கடித்ததில் "அக்காவுக்கு எதிராக சிலர் சதிச் செயலில் ஈடுபடுகின்றனர் என்றும் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்த சதித்திட்டம் தீட்டினார்களே அது என்ன ? சதிச்செயல் செய்தவர்கள் யார்? என்று ஆய்வு செய்தால் தற்போது ஆட்சியை பிடித்துள்ளார்களே அதுதான் அந்த சதித்திட்டம். சசிகலாவிடம் நான் 2011 முதல் பேசியதே இல்லை அவரிடம் 122 பினாமி எம்.எல்.ஏ களின் ஆதரவு உள்ளது அதனால் பினாமி ஆட்சி நடைபெறுகிறது . ஆனால் எங்களுக்கோ ஒன்றரை கோடி தொண்டர்களின் ஆதரவு இருக்கிறது. ஜெயலலிதா மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை வெளிவரும் எனவே விசாரணை கமிஷன் அமைக்கும் வரை எங்களுடைய போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்றார்.

பன்னீர்செல்வம் அணியினரின் இந்த போராட்டத்துக்கு அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் மத்தியில் பலத்த ஆதரவு கிடைத்துள்ளது. ராஜரத்தினம் மைதானத்தில் தொண்டர்கள் கூட்டமும் பெண்கள் கூட்டமும் திரண்டு வந்ததை கண்டு ஓபிஎஸ் அணியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

சென்னை தவிர தமிழகம் முழுவதிலும் 36 இடங்களில் உண்ணாவிரதம் போராட்டத்தை நடத்தினார்கள்.

ஒரு சில மாவட்டங்களில் கிராம பஞ்சாயத்து கிளார்க்கள் மூலம் நூறு நாள் வேலைக்கு மக்களை கட்டாயம் அழைத்து செல்ல உத்தரவிட்டுள்ளனர்.

குறிப்பாக கடலூரில் அமைச்சர் எம்.சி.சம்பத் போட்டிக் கூட்டமாக பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தினார். கூட்டத்தை கூட்டிவரும் வார்டு செயலாளருக்கு ஐந்தாயிரமும், அதிமுக வார்டு கவுன்சிலருக்கு ஐந்தாயிரமும் கொடுத்து அழைத்து வரவும் ,பெண்களுக்கு ரூ:2500-ரும் ,சேலையும் வழங்கினார்கள். அமைச்சர் சம்பத்தும், அவரது மகனும், நேற்று இரவு முதல் இன்று காலை வரையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகளுக்கும், கட்சி பிரமுகர்களுக்கும் போன் போட்டு, உண்ணாவிரதம் போரட்டத்துக்கு போகாதீர்கள் உங்களுக்கு தேவையானதை நான் செய்துகொடுக்கிறேன் என்று உருகியிருக்கிறார்.

இப்போதான் உங்களுக்கு கட்சிகாரன் கண்ணுக்கு தெரிகிறானா ? அமைச்சரை மடக்கினார்கள்.

காஞ்சி மாவட்டம் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற போராட்டத்தில், மைத்ரேயன், மற்றும் முன்னாள் மாவட்ட செயலாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்டத்தில், திருப்பத்தூர், அரக்கோணம், வேலூர் மூன்று பகுதியில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது, வேலூர் தெற்கு காவல் நிலையம் எதிரில், கோட்டை அருகில், செங்குட்டுவன் தலைமையில் நடைபெற்றது.

திருவண்ணாமலையில் முன்னாள் அமைச்சர் இராமசந்திரன் மற்றும் எம்.பி வனரோஜா தலைமையில் நடந்த போராட்டத்தில் சுமார் 6 ஆயிரம் மக்கள் கலந்துக்கொண்டார்கள்.

உட்கார சேர்கள் இல்லாமல்,பலர் தரையில் உட்காந்தார்கள்.

திருச்சியில் முன்னால் அமைச்சர் பூனாட்சி தலைமையில் நடைபெற்றது.திமுககோட்டையான திருச்சியில் கூட்டம் சுமார்தான் !

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் அதிமுக மாவட்ட செயலாளரும் எம்.பி.யுமான லட்சுமணன், எம்.பி.ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் மோகன் போன்ற பல மாஜிகள் ஏற்பாட்டால் பழைய பேருந்து நிலையம் குவிந்தது. சசிகலா அணியினர் அமைச்சர் சி.வி.சண்முகம் ஏற்பாடு செய்த கூட்டத்தைவிட அதிகமாகவே காணபட்டது. ஷேர் ஆட்டோ, லாரி, டிராக்டர், போன்ற வாகனங்களில் வந்தார்கள்.

நாகை பஸ் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயபால் தலைமையில் சுமார் ஏழாயிரத்துக்கும் அதிகமாக கூடியிருந்தனர். வந்தவர்களுக்கு அனைத்துவிதமான சலுகைகளும் செய்துதரப்பட்டது. இந்த கூட்டம் உண்மையான அதிமுக என்று அடையாளம் காட்டும் அளவில் இருந்தது.

கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோயில் அண்ணா ஸ்டேடியத்தில் பலநூறு அதிமுகவின் சீனியர்கள் கூடியிருந்தார்கள், கூட்டத்துக்கு அசோகன் தலைமையேற்றார், சிறப்பு விருந்துனராக தூத்துக்குடி எம்.பி. தியாகராஜன் நட்ராஜ் ஆகியோர் கலந்துக்கொண்டார்.

தர்மபுரி மாவட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ, சிங்காரம் தலைமையில் சுமார் பத்தாயிரம் மக்களும் , கிருஷ்ணகிரியில், எம்.பி.அசோக்குமார் தலைமையில் கூட்டம் நடந்தது.

புதுச்சேரி பிரதேசத்தில் முன்னாள் எம்.எல்.ஏ, ஓம்சக்தி சேகர் தலைமையில் சாரத்தில் நடைபெற்ற உண்ணாவிரதம் போராட்டத்தில் ஐநூறுக்கும் குறைவாகவே கூடியிருந்தார்கள்.

தமிழகம் முழுவதும் கூடிய கூட்டத்தை வைத்து அடுத்த அரசியல் மூவ் களை கவனத்துடன் நகர்த்த பன்னீர் திட்டமிட்டுள்ளார்.அது என்ன என்பது மிக விரைவில் தெரிய வரும்.

- எம்.பி.காசி நாதன் ,த .எழிலரசன்

வியாழன், 9 மா 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon