மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 மா 2017

ஓ.பி.எஸ்.க்கும் - இ.பி.எஸ்.க்கும் ரகசிய உறவா? கொந்தளிக்கும் அமைச்சர்!

ஓ.பி.எஸ்.க்கும் - இ.பி.எஸ்.க்கும் ரகசிய உறவா? கொந்தளிக்கும் அமைச்சர்!

சசிகலாவின் கட்டுப்பாட்டில் இயங்கும் அதிமுகவையும் ஆட்சியையும் கைப்பற்ற பன்னீர் செல்வம் தினசரி ஒரு யுக்தி என அக்னிப்பிரவேசம் செய்து வருகிறார்.

ஆனால் அதிமுக நிர்வாகிகளோ பன்னீர் செல்வத்தினுடன் சென்றால் பலன் கிடைக்குமா ? சசிகலாவுடன் இருந்து சம்பாரித்து விட்டு ,அரசியலுக்கே முழுக்குப் போட்டு விட்டு போகலாமா? என்று குழம்பி போய் நாடி ஜோதிடம் பார்த்து வருவது இன்றைய அதிமுக கரை வேட்டிகளின் மனநிலையாக இருக்கிறது. காலையில் டீக்கடையில் ஆரம்பிக்கும் இந்த மனநிலை இரவு டாஸ்மாக் பாருக்கு சென்றும் ஒரு முடிவுக்கு வரவில்லை. . இதுதான் இன்றைய அதிமுகவினரின் தலைக்கு மேல் இருக்கும் பிரச்னை, பஞ்சாயத்து ,குழப்பம் என அவரவர் மன நிலையை பொருத்தது.

நேற்று வரை ரத்தத்தின் ரத்தங்களாக இருந்தவர்கள் இன்று இரு அணிகளாக பிரிந்து நிற்கிறார்கள். தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை ஒரே நேரத்தில் இந்த குழப்பம் நீடித்து இருக்க இந்தப்பக்கம் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வமும், அந்தப்பக்கம் தற்போது முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இரகசிய உறவு என்று செய்திகள் அடிபட்டால் எப்படி இருக்கும் இரு பக்கத்தில் இருக்கும் இரத்தத்தின் இரத்தங்களுக்கு ?

ஆம் அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது நெல்லை மாவட்டத்தில்!.

(ஆர்.எஸ் முருகன் )

நெல்லையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் நேற்று 80 கோடி ரூபாய்களுக்கான டெண்டர் நடந்திருக்கிறது.ஜெ பேரவை செயலாளாரும், பன்னீர் செல்வத்தின் தீவிர விசுவாசியுமான ஆர்.எஸ் முருகன் என்பவர் இந்த டெண்டரில் 80 சதவிகித வேலைகளை எடுத்திருக்கிறார்.இவர் எடுத்துள்ள டெண்டர்கள் அனைத்தும் இவரது மனைவி, தம்பி என இவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் தான் எடுத்து வந்திருக்கிறார்.இதற்கு முன்பும் இப்போதும்.

பன்னீர் செல்வம்-சசிகலா என இரு அணிகள் பிரிந்து நின்ற போது பன்னீர் செல்வத்திற்கு முதல் ஆதரவு என்று சோழவந்தான் எம்.எல்.ஏ மாணிக்கத்தை இவரது காரில் அழைத்து வந்து பன்னீர் செல்வத்திடம் சேர்த்தவர். சசிகலாவின் கூட்டத்தில் இருந்து முதல் விக்கெட்டை வீழ்த்தியவர் முருகன்தான் என்கிறார்கள்.

அதோடு இல்லாமல் நேற்று பன்னீர் செல்வம் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக நெல்லையில் இருந்து அதிக ஆட்களை அனுப்பியதும் இவர்தானாம்.

டி.டி.வி தினகரனுக்கு எதிராக கருப்பசாமி பாண்டியனை பேசச்சொல்லியதும் இவர்தானாம்.

இப்படி முழுக்க முழுக்க பன்னீரின் ஆளாய் இருக்கும் ஒருவருக்கு எடப்பாடி பழனிச்சாமி பரிந்துரை செய்து ஒப்பந்தப் பணிகளை ஒதுக்கியிருக்கிறார் என்பதுதான் தென் மாவட்டத்தில் இருக்கும் அதிமுகவினரின் பகீர் குற்றச்சாட்டு.

கூவத்தூரில் அடைக்கப்பட்ட அமைச்சர்கள் ,எம்.எல்.ஏ களுக்கு சசிகலா தரப்பில் இருந்து ஒரு இரகசிய உடன்படிக்கை செய்து கொடுத்திருக்கிறார்கள்.

அதாவது அதிமுக தொகுதி எம்.எல்.ஏ களாக இருப்பவர்கள் அவர்களது தொகுதியில் நடக்கும் வேலைகளை அவர்களே செய்து கொள்ளலாம்.

திமுக எல்.எல்.ஏ கள் இருக்கும் தொகுதிகளில் அந்த அந்த மாவட்ட அமைச்சர் வேலைகளை பிரித்து எடுத்துக் கொள்ளாலாம் என்று எழுதப்படாத உடன்படிக்கை போட்டு அமைச்சர்கள்,எம்.எல்.ஏ களை கூவத்தூரில் தக்க வைத்தார் சசிகலா.

செய்து கொண்ட உடன்படிக்கையின் படி நெல்லையை சேர்ந்த பெண் அமைச்சர் ராஜலட்சுமி ஒரு சிலருக்கு வேலைகளை பிரித்து கொடுக்கச்சொல்லி முதன்மைப் பொறியாளருக்கு கடிதம் கொடுத்து அனுப்பி இருக்கிறார். அமைச்சர் அனுப்பிய ஆட்களுக்கும் டெண்டர் ஒதுக்கவில்லை.அதிமுகவின் விசுவாசிகளுக்கும் டெண்டர் ஒதுக்கவில்லை.

இதனால் கடுப்பான சசிகலா அதிமுகவினர், முதன்மைப் பொறியாளரிடம் சென்று சத்தம் போட்டுயிருக்கிறார்கள். அதற்கு பதிலளித்த முதன்மைப் பொறியாளர் “ நான் வெறும் கூத்தாடிதான்;கடவுள் ஆர்.எஸ் முருகன்தான் அவரைப்போய் பாருங்கள்” என்று சொல்லி நழுவியிருக்கிறார்.

இதனால் பதறிய ஒப்பந்தக்காரர்கள் அமைச்சர் ராஜலட்சுமியிடம் விரைந்து வந்து நடந்ததை சொல்லி கதறியிருக்கிறார்கள்.

இந்தக் காட்சிகளை எல்லாம் அருகில் இருந்து கவனித்து வந்த சசிகலா தரப்பு அதிமுகவினர் , எடப்பாடி பழனிச்சாமிக்கும் –பன்னீர் செல்வத்திற்கும் இரகசிய உறவா ? கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவருக்கு ,அதுவும் தென் மாவட்டத்தில் பன்னீரின் நிழலாக உலா வரும் ஆர்.எஸ் முருகனுக்கு எப்படி ஒப்பந்தப் பணிகளை ஒதுக்கலாம் என்று பயங்கர டென்ஷனாகி நெல்லையில் இருந்து சென்னைக்கு கிளம்பி வந்து கொண்டியிருக்கிறார்கள்.கூடவே அமைச்சரையும் கையோடு அழைத்துக் கொண்டு அதிமுக தலைமையிடம் முறையிடப் போகிறார்கள்.

பன்னீர் செல்வம் பொதுப்பணித்துறை அமைச்சர்,முதல்வர் என உச்சத்தில் இருந்த கடந்த கால அதிமுக ஆட்சியில் ராமநாதபுரம், நெல்லை ,நாகர்கோயில் ,தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களிலும் நெடுஞ்சாலைத்துறை ,பொதுப்பணித்துறை என்று பெரும்பாலான ஒப்பந்தப் பணிகள் முருகனுக்குத்தான் ஒதுக்கியிருக்கிறார்கள். இதனால் முருகனை தென் மாவட்டத்தில் பன்னீரின் பினாமி என்றும் சொல்வதுண்டாம். இப்படிப்பட்ட முருகனுக்கு எப்படி 80 கோடி ரூபாய் டெண்டர்களை ஒதுக்கலாம் என்று கேள்வி எழும்பியுள்ளது.தவிர எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் மணியும் முருகனும் அடிக்கடி வெளியில் சந்தித்துக் கொள்வதும் எதற்காக என்று அதிமுக வட்டாரத்தில் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.இன்று இதற்கு விடை தெரிந்து விடும் !

வியாழன், 9 மா 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon