மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 9 மா 2017

பெங்களூருக்கு பதிலாக புதிய நகரம்!

பெங்களூருக்கு பதிலாக புதிய நகரம்!

பொதுவாக ஒரு மாநிலத்தில் மக்கள் தொகை அதிகரிக்கும்போது, அவர்களுக்கான தேவையும் அதிகரிக்கும். வீடு, உணவு, நீர் ஆகியவற்றின் தேவை மக்கள் பெருக்கத்திற்கு ஏற்ப அதிகரிக்கின்றன.

இந்நிலையில் பெங்களூருவில் மக்கள் தொகை அதிகரித்து வருவதால் கர்நாடக அரசு புதிதாக தொழில் நகரம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

பெங்களூருவுக்கு பதிலாக கோலார் கோல்ட் பீல்ட்ஸ் (கேஜிஎப்) என்ற நகரத்தை 11,000 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கவுள்ளது. இதையடுத்து பெங்களூருவில் வசிக்கும் 20 லட்சம் பேரை இந்த புதிய நகரத்திற்கு மாற்றவும் கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இந்த புதிய நகரின் குடிநீர் தேவைக்காக, மங்களூருவில் கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை நிறுவி, அதிலிருந்து குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படவுள்ளது.

இந்த நகரம் உலகதரம் வாய்ந்த நிபுணர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டு வருகிறது. புதிய நகருக்கான மாதிரி வடிவம் தயாரிக்கப்பட்ட பின் இதற்கான செலவு குறித்து முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது. இதற்காக பாரத் கோல்ட் மைன்ஸ் லிமிடெட்டின் நிலத்தை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக கர்நாடக நகர வளர்ச்சி துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் இந்த புதிய நகரம் மற்றும் கர்நாடகாவின் முக்கிய நகரங்களின் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ரூ.3500 கோடி செலவில் 4 கடல்நீர் சுத்திகரிப்பு ஆலையை அமைக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

இந்த இரண்டு திட்டங்களுக்கும் கர்நாடக அமைச்சரவை விரைவில் ஒப்புதல் வழங்கவுள்ளது. மேலும், இத்திட்டத்திற்காக ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இருந்து ரூ.400 கோடி கடன் வாங்குவதற்கான நடவடிக்கையையும் கர்நாடக அரசு விரைவில் தொடங்கவுள்ளது.

வியாழன், 9 மா 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon