மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 24 ஜன 2021

டிஜிட்டல் திண்ணை: அவரு முதல்வர் மாதிரி நடந்துக்குறாரு! - வெளிப்படையாக வெடித்த மோதல்!

டிஜிட்டல் திண்ணை: அவரு முதல்வர் மாதிரி நடந்துக்குறாரு! - வெளிப்படையாக வெடித்த மோதல்!வெற்றிநடை போடும் தமிழகம்

மொபைல் டேட்டா ஆன் செய்தோம். வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.

‘‘டி.டி.வி.தினகரனுக்கும், சசிகலாவின் கணவர் நடராஜனுக்கும் இடையே நடக்கும் அதிகாரப் போர் பற்றி ஏற்கனவே டிஜிட்டல் திண்ணையில் எழுதியிருக்கிறோம். அந்த முட்டல், மோதல் ஒருபக்கம் இருக்க, இப்போது தினகரனுக்கும் சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கும் இடையே மோதல் வெடித்திருக்கிறது. பன்னீர் அணியின் பக்கம் இனி எம்.எல்.ஏ.,க்கள் யாரும் தாவ மாட்டார்கள் என்பது தினகரனின் திடமான எண்ணம். ‘இனி, எம்.எல்.ஏ.,க்கள் விசயத்துல கவனம் செலுத்துறதை விட்டுடலாம். நமக்கு நிர்வாகிகள் எல்லோரும் முக்கியம். கிளைச் செயலாளர், வார்டு செயலாளருக்கு முதல்ல 5 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறதுக்கு ஏற்பாடு செய்யணும். ஒன்றியச் செயலாளர்களுக்கும், நகரச் செயலாளர்களுக்கும் காண்ட்ராக்ட் கொடுத்துடலாம். இவங்க எல்லோரையும் இனி நம்ம கட்டுப்பாட்டுல வெச்சுக்கணும். அவங்க யாரும் இனி எங்கேயும் போயிடக்கூடாது. பன்னீரும், தீபாவும் கட்சி நடத்துறது ஏதோ சாதாரண வேலைன்னு நினைச்சுட்டு இருக்காங்க. கட்சி நடத்த மாசம் ரூ.20 கோடி செலவு ஆகும். பன்னீர்கிட்ட பணம் இருக்கு. ஆனா ஒரு பைசா எடுக்கமாட்டாரு’ என்றெல்லாம் தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லியிருக்கிறார் தினகரன். இதெல்லாம் சசிகலாவின் சகோதரர் திவாகரன் காதுக்கும் போயிருக்கிறது. ‘இவர்தான் கட்சியில எல்லாம் என்கிற மாதிரி நடந்துக்குறாரு. யாரையும் எதுவும் கேட்க மாட்டேங்குறாரு. இவருக்கு யாரு இந்த அதிகாரத்தை எல்லாம் கொடுத்தது?’ என்று திவாகரன் வருத்தப்பட்டுப் பேசியிருக்கிறார். திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த், சில தினங்களுக்குமுன்பு பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சென்று சசிகலாவை சந்தித்திருக்கிறார். ‘தினகரன் செய்யுறது எதுவும் சரியா இல்ல அத்தை. அப்பா ரொம்பவும் வருத்தத்துல இருக்காரு. யாரையும் எதையும் கேட்கிறது இல்ல. ஏதோ, அவர்தான் முதல்வர் மாதிரி நடந்துக்குறாரு... எடப்பாடி டெல்லி போன நேரத்துல இவருக்கு எதுக்கு மாவட்டச் செயலாளர் கூட்டம் நடத்தணும். எடப்பாடியும் இருக்கும்போது நடத்தவேண்டியதுதானே...நீங்க அவருகிட்ட சொல்லுங்க. இப்படியே போனால் அது யாருக்கும் நல்லது இல்ல’ என்று சொல்லியிருக்கிறார். அதன்பிறகு இளவரசி மகன் விவேக் மூலமாக சசிகலா சில தகவல்களை தினகரனுக்குச் சொல்லி அனுப்பியிருக்கிறார். ‘இதை நான் எப்படி அவருகிட்ட சொல்றது?’ என்று விவேக் முதலில் தயங்கியிருக்கிறார். ‘இதை நீ சொல்லல. நான் சொன்னதா தினகரன்கிட்ட சொல்லு!’ என்று சொன்னாராம் சசிகலா. விவேக்கும் அந்த தகவல்களை அப்படியே தினகரனிடம் சொல்லியிருக்கிறார். ஆனாலும் சசிகலா சொன்னதை தினகரன் கேட்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!” என்று முடிந்தது அந்த மெசேஜ்.

அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்த ஃபேஸ்புக், ‘அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்ததா?’ என்ற கேள்வியைக் கேட்டது. பதிலை அடுத்த மெசேஜில் அனுப்பியது வாட்ஸ் அப். “ம்ம்ம்...’ கூட்டத்துக்கு தினகரன் அழைப்பு விடுத்திருந்தாரு. மாவட்டச் செயலாளர்களும் கிளம்பி வந்துட்டாங்க. இந்த சூழ்நிலையில்தான் சசிகலா சொன்ன தகவலை விவேக் நேற்று இரவு தினகரனிடம் சொல்லியிருக்கிறார். அதைக் கேட்டதும் படு அப்செட் ஆகிவிட்டாராம் தினகரன். ‘நான் என்ன, என்னோட நல்லதுக்காகவா கூட்டம் நடத்துறேன். கட்சி நல்லதுக்காகத்தான் இவ்வளவும் பண்றேன். ஓ.பி.எஸ். பத்தி எனக்கு நல்லாத் தெரியும். கட்சியில் இருக்கும் நிர்வாகிகளை குறிவைத்துதான் அவர் மாவட்டம்தோறும் ஆலோசனைக் கூட்டம் நடத்த பிளான் பண்றாரு. அவருக்கு முன்பு நாம களத்துல இறங்கணும். அதுக்காகத்தான் மாவட்டச் செயலாளர்களை கூப்பிட்டு பேச நினைச்சேன். இதுக்கு முதல்வர் இருக்கவேண்டிய அவசியம் இல்லையே... கட்சியை எந்தப் பிரச்னையும் இல்லாம பார்த்துக்கோன்னு சின்னம்மா என்கிட்ட சொல்லிட்டுப் போனாங்க. அதைத்தான் நான் செஞ்சுட்டிருக்கேன்’ என்று விவேக்கிடம் புலம்பினாராம் தினகரன். அத்துடன், ‘நான் சின்னம்மாவை பார்க்க வர்றேன்!’ என்று சொல்லியிருக்கிறார் தினகரன். இதெல்லாம் செய்தது திவாகரன்தான் என்பது தினகரனுக்கும் தெரியுமாம். திவாகரன் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறாராம் தினகரன்!” என்ற அந்த பதில் மெசேஜுக்கு செண்ட் கொடுத்தது வாட்ஸ் அப்.

அதையும் காப்பி செய்து ஷேர் செய்துவிட்டு, சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்.

திங்கள், 27 பிப் 2017

அடுத்ததுchevronRight icon