மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 28 ஜன 2021

பிரதமரிடம் முதல்வர் வைத்த கோரிக்கை!

பிரதமரிடம்  முதல்வர் வைத்த கோரிக்கை!வெற்றிநடை போடும் தமிழகம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 5.40 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வறட்சி நிவாரணம் மற்றும் வர்தா புயல் நிவாரண உதவியை விரைந்து வழங்க வேண்டி கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசுவதற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று இரவு விமானம்மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். முதலமைச்சருடன் அரசு செயலாளர்கள் சிவ்தாஸ் மீனா, விஜயகுமார், கூடுதல் செயலாளர்கள் ஜெயஸ்ரீ முரளிதரன் ஆகியோரும் சென்றனர். எம்.பி.,க்கள் கே.மரகதம், பி.குமார், அருண்மொழித்தேவன், ஜி.அரி, எம்.சந்திரகாசி, பி.நாகராஜன், கே.பரசுராமன், ஆர்.கே.பாரதி மோகன், செல்வகுமார் சின்னய்யன், அன்வர்ராஜா, கே.கோபால் ஆகியோரும் சென்றனர்.

தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இன்று காலை விமானம் மூலம் டெல்லி சென்றார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், அவருடன் சென்றுள்ள அதிகாரிகளும் இன்று மாலை 5.4௦ மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்கள். அப்போது மருத்துவக் கல்விக்கான தேசிய நுழைவுத்தேர்வான ‘நீட்’ தேர்வு எழுதுவதிலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கவும், வறட்சி நிவாரணம் மற்றும் வர்தா புயல் பாதிப்புக்கு உடனடியாக ரூ. 27௦௦௦ கோடி நிவாரண உதவியை விரைந்து வழங்க வேண்டியும் கோரிக்கைவிடுத்துள்ளார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த உதவியதுக்கு நன்றி தெரிவித்தும், இலங்கைச் சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்திடவும், பறிமுதல் செய்யப்பட்ட மீனவர்களின் படகுகள் மற்றும் அவர்களது உடமைகளையும் திருப்பி வழங்கிட மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும்,புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் நடத்தும் போராட்டம் ஆகியவை குறித்து பிரதமருடன் முதல்வர் பேசினார் . பிரதமருடனான முதல்வர் சந்திப்பில் தலைமைச் செயலாளர், நிதித்துறைச் செயலாளர் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய மந்திரிகள் நிதின் கட்காரி, வெங்கய்யா நாயுடு, ரவிசங்கர் பிரசாத், பியூஸ் கோயல் ஆகியோரை நாளை சந்தித்துப் பேசுவதற்கு திட்டமிட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

திங்கள், 27 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon