மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 24 செப் 2020

ஸ்டாலின் வழக்கு : முதலமைச்சருக்கு நோட்டீஸ்!

ஸ்டாலின் வழக்கு : முதலமைச்சருக்கு நோட்டீஸ்!

நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்கக் கோரி ஸ்டாலின் தொடுத்த வழக்கில், முதலமைச்சர் பழனிச்சாமிக்கு நோட்டீஸ் அனுப்பி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டபேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்கக்கோரியும் ஆளுநரின் செயலர், தலைமைச் செயலர், தேர்தல் ஆணைய அதிகாரியின் மேற்பார்வையில், ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று, கடந்த 20ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மனு தாக்கல் செய்தார்.

இதைத் தொடர்ந்து, கடந்த 22ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இதை விசாரித்த தற்காலிக தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷ், நீதிபதி மகாதேவன், திமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களிடம் , "சட்டசபையில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக தங்களிடம் இருக்கும் வீடியோ பதிவை முதலில் தாக்கல் செய்யுங்கள். அதன்பின்னர் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும்’’ என்று தெரிவித்து இந்த வழக்கை 27ஆம் தேதி ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று 3.3௦ மணிக்கு விசாரணைக்கு வந்தபோது, திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம் மற்றும் என்.ஆர்.இளங்கோ ஆகியோரிடம் நீதிபதிகள் வழக்குத் தொடர்பான வீடியோ ஆதாரங்கள் குறித்து கேள்வி கேட்கையில் திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் நீதிபதிகளிடம் பதில் தெரிவித்தனர்.

அதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரத்தில் ஆளுநர் சட்டத்திற்கு உட்பட்டு சரியான நடவடிக்கையே எடுத்துள்ளார் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக விளக்கமளிக்க சட்டப்பேரவைச் செயலாளர், முதல்வர், தலைமைச் செயலாளர், மத்திய உள்துறைச் செயலாளர், ஆளுநரின் செயலாளர் உள்ளிட்ட 7 பேருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. மேலும் அவர்கள் இரண்டு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டதோடு, இந்த வழக்கை வரும் மார்ச் 1௦ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

திங்கள், 27 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon