தலைசிறந்த 250 சர்வதேச சில்லறை விற்பனையாளர் பட்டியலில் இந்தியா இந்த ஆண்டிலும் இடம்பெறவில்லை.
உணவு, மளிகைப் பொருட்கள், ஜவுளி, வீட்டு உபயோகப் பொருட்கள், காலணிகள் ஆகியவற்றை விற்பனை செய்யும் உலகின் மிகப்பெரிய சில்லறை வர்த்தக நிறுவனங்கள் பட்டியலை தயாரித்து டெலாய்ட் (Deloitte) நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. விற்பனை, லாபம் மற்றும் உலகளவில் அதன் கிளைகளின் விரிவாக்கம் ஆகிய சிறப்பம்சங்கள் அடிப்படையில் 250 சில்லறை விற்பனை நிறுவனங்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பட்டியலில், அமெரிக்காவைச் சேர்ந்த வால்மார்ட், காஸ்ட்கோ மற்றும் குரோஜர் உள்ளிட்ட நிறுவனங்கள் முன்னிலையில் உள்ளன. அதைத் தொடர்ந்து, ஜப்பான் மற்றும் ஜெர்மனி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த 2015ஆம் ஆண்டில், இந்த 250 நிறுவனங்கள் பெற்ற ஒட்டுமொத்த வருவாய் 4.3 லட்சம் கோடி டாலர்கள் என இந்த ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் சில்லறை விற்பனைச் சந்தை மதிப்பு 600 பில்லியன் டாலர்களாக உள்ளது. எனினும் சில்லறை விற்பனையில் செலவிடுதல் மிகக் குறைவாகவே இருக்கிறது. இதனால், சர்வதேச பட்டியலில் இந்திய நிறுவனங்களால் இடம்பெற முடியவில்லை. கடந்த 20 வருடங்களாகவே இந்திய நிறுவனங்கள் இப்பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கத்திய நாடுகளில் உள்ள சில்லறை விற்பனை நிறுவனங்கள் பழமை வாய்ந்தவை என்பதோடு, தற்போது அதீத வளர்ச்சியடைந்துள்ளன. ஆனால் இந்தியாவைப் பொருத்தவரை, 1990களுக்குப் பிறகே மிகப்பெரிய சில்லறை விற்பனை நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. இந்தியாவின் பிரபல சில்லறை வர்த்தக நிறுவனமான ஷாப்பர்ஸ் ஸ்டாப், 1991ஆம் ஆண்டிலும், பிக் பஜார் நிறுவனம் 2001ஆம் ஆண்டிலும்தான் தொடங்கப்பட்டன. ஆனால் அமெரிக்காவின் குரோகர் நிறுவனம் 1833ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதாகும். அதேபோல, வால்மார்ட் நிறுவனம் 1962இல் தொடங்கப்பட்டு, 1990களில் சர்வதேச நாடுகளில் தனது கிளைகளை விரிவுபடுத்தியது.