மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 15 ஆக 2020

வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது!

வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது!

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஆண்டுதோறும் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி சத்தியமங்கலம் வனப்பகுதிக்குட்பட்ட ஆசனூர், தாளவாடி, சத்தியமங்கலம், பவானிசாகர், கேர்மாளம், தலமலை, டி.என்.பாளையம் ஆகிய 7 வனச்சரகத்தில் இன்று காலை தொடங்கியது.

அதற்காக, கணக்கெடுக்கும் குழுவினருக்கு நேற்று சத்தியமங்கலம் வனச்சரக அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. ஒவ்வொரு பகுதிக்கும் தலா 5 பேர் கொண்ட குழுவினர் காட்டுக்குள் இன்று காலை 6 மணிக்கு சென்றுள்ளனர். மொத்தம் 250 பேர் வனப் பகுதிக்குள் சென்று கணக்கெடுப்பு பணியைத் தொடங்கியுள்ளனர்.

இவர்கள் நீர்நிலைகளில் உள்ள விலங்குகளின் கால் தடங்கள், மரக்கீறல்கள், எச்சங்கள் ஆகியவற்றை வைத்து கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சத்தியமங்கலம் வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, மான், செந்நாய், கரடி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

சத்தியமங்கலம் வனக்கோட்டம், கடந்த 2008ஆம் ஆண்டு வன உயிரின சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர், ஆண்டுதோறும் நடைபெறும் வனவிலங்குகள் கணக்கெடுப்பில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. அதைத் தொடர்ந்து, தமிழக அரசின் பரிந்துரையால் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் சத்தியமங்கலம் வனஉயிரின சரணாலயத்தை புலிகள் காப்பகமாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது.

திங்கள், 27 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon