மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 19 செப் 2020

வர்தா புயலால் பயனடைந்த பி.எஸ்.என்.எல்.!

வர்தா புயலால் பயனடைந்த பி.எஸ்.என்.எல்.!

பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் இணைவு அல்லது பி.எஸ்.என்.எல். நெட்வொர்க்குக்கு மாறும் வாடிக்கையாளர் விகிதம் அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதத் தொடக்கத்தில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் வர்தா புயலின் தாக்கத்தால் பெரும் சேதமடைந்தன. மின்சாரம் மற்றும் தொலைதொடர்பு இணைப்புகளும் பாதிப்படைந்தன. இதனால் பெரும்பாலான நெட்வொர்க் சேவைகள் செயல்படவில்லை. எனினும் பி.எஸ்.என்.எல். நெட்வொர்க் சேவை ஓரளவுக்கு கிடைக்கப்பெற்றது. இதனால் பி.எஸ்.என்.எல். நெட்வொர்க்கை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதோடு, பிற நெட்வொர்க்கிலிருந்தும் பலர் பி.எஸ்.என்.எல்-க்கு மாறத் தொடங்கினர்.

இதுகுறித்து பி.எஸ்.என்.எல். நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் அறிக்கையில், ‘சில வருடங்களுக்கு முன்னர், பி.எஸ்.என்.எல் நெட்வொர்க்கில் இணைந்தவர்கள் மற்றும் பி.எஸ்.என்.எல். நெட்வொர்க்கிலிருந்து விலகியவர்கள் ஆகியவற்றுக்கான விகிதாச்சாரம் 1 : 3 என்றளவில் இருந்தது. ஆனால் தற்போது அந்த விகிதம் 1 : 0.77 என்று மாறியுள்ளது. அதாவது, பி.எஸ்.என்.எல். நெட்வொர்க்கில் இணைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வர்தா புயலைத் தொடர்ந்து ஒரு மாதத்தில் இந்த விகிதமானது அதிகபட்சமாக 1 : 0.63 ஆக இருந்தது.

எண்ணிக்கை அடிப்படையில், கடந்த இரண்டு மாதங்களில், முறையே 1596 மற்றும் 1843 பேர் பி.எஸ்.என்.எல். நெட்வொர்க்கில் இணைந்துள்ளனர். அதேபோல், 1232 மற்றும் 1169 பேர் பி.எஸ்.என்.எல். நெட்வொர்க்கிலிருந்து விலகியுள்ளனர். இதுகுறித்து தொலைதொடர்புத் துறை வல்லுநர்கள் சிலர் கூறுகையில், பி.எஸ்.என்.எல். நெட்வொர்க் அரசின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படுவதால், ஏதேனும் புகார்கள் ஏற்படின் அதற்கு எளிதில் தீர்வுகாண இயலும். ஆனால் தனியார் நெட்வொர்க் நிறுவனங்களில் இதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன என்று தெரிவித்துள்ளனர். மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிவித்த ரூ.339 திட்டமும் வாடிக்கையாளர்களை அதிகமாக ஈர்த்துள்ளது.

திங்கள், 27 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon