மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 15 ஆக 2020

'ஜெ' மரண மர்மம் : பிரணாப்பிடம் பன்னீர் எம்.பி.,க்கள்!

'ஜெ' மரண மர்மம் : பிரணாப்பிடம்  பன்னீர் எம்.பி.,க்கள்!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.,க்கள் ஜனாதிபதியை நாளை சந்திக்கவுள்ளனர்.

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, கடந்த டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்த பிறகு முதலமைச்சராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம் திடீரென ராஜினாமா செய்தார். அதன்பின்னர் சசிகலா தரப்பினர் தன்னை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்ததாக புகார் கூறியதோடு ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும் இது தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்படும் என்று முதலமைச்சராக பதவியில் இருந்தபோதே ஓ.பி.எஸ். பிறப்பித்த உத்தரவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின்னர் ஓ.பன்னீர்செல்வத்தால் முதலமைச்சர் பதவியில் நீடிக்க முடியவில்லை. புதிய முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, ஜெயலலிதா மரணம் தொடர்பான சர்ச்சை முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் மரணத்தில் நீடிக்கும் மர்மத்தை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். எனவே, அதுபற்றி உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். கடந்த 24ஆம் தேதி ஜெயலலிதா பிறந்தநாள் அன்று தண்டையார்பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள அமைப்பை கொண்டு விசாரணை நடத்த வேண்டும். அப்போதுதான் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் விலகும் என்றும் அறிவுறுத்தினார். இந்நிலையில், ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக டெல்லி சென்று ஜனாதிபதியிடம் முறையிட முடிவு செய்துள்ளனர்.

அதையொட்டி, மைத்ரேயன் எம்.பி., இன்று காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். மீதமுள்ள ஓ.பி.எஸ். ஆதரவு எம்.பி.க்கள் 11 பேர் இன்று இரவு அல்லது நாளை காலை டெல்லி செல்கிறார்கள். அங்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து மனு கொடுக்கின்றனர். அப்போது ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்துகிறார்கள். அதையடுத்து, ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விவகாரம் மீண்டும் மறுஅவதாரம் எடுக்கும் எனத் தெரிகிறது.

திங்கள், 27 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon