மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 16 ஜன 2021

அரசு அலுவலகங்களில் 'ஜெ' படம் :கோர்ட் நோட்டீஸ்!

அரசு அலுவலகங்களில் 'ஜெ' படம் :கோர்ட் நோட்டீஸ்!

அரசு நலத் திட்டங்கள், அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படம் வைப்பதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில் தெரிவிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்டத் தலைவர் சி.குமரன் மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவகத்தை அரசு செலவில் கட்டக்கூடாது என்றும் அரசு அலுவலகங்கள், அரசுத் திட்டங்கள் ஆகியவற்றில் உள்ள ஜெயலலிதாவின் புகைப்படத்தை அகற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஹூலுவாடி ரமேஷ், நீதிபதி மகாதேவன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் கூறினார்கள். அப்போது மூத்த வக்கீல் வில்சன் எழுந்து, ‘சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை அரசு அலுவலகங்களில், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பள்ளிக்கூட பைகளில், இலவச லேப்டாப்புகளில் மற்றும் அரசு நலத் திட்டங்களில் இடம்பெறக்கூடாது என்று சேப்பாக்கம் தி.மு.க. எம்.எல்.ஏ., அன்பழகன் வழக்கு தொடரவுள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்று கூறினார்.

பாமக-வைச் சேர்ந்த வக்கீல் கே.பாலுவும் ஆஜராகி, ஜெயலலிதாவின் புகைப்படம் அரசுத் திட்டங்களில் இடம்பெறக்கூடாது என்று வழக்கு தொடரவுள்ளதாகக் கூறினார். இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை பிற்பகலில் விசாரிப்பதாகக் கூறினார்கள்.

இதையடுத்து, இன்று பிற்பகல் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, மாநில அரசு இதுகுறித்து மார்ச் 20ஆம் தேதி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி, நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் வருகிற மார்ச் 20ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது.

திங்கள், 27 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon