மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 24 ஜன 2021

பறவைகளைக் காண்பதால்...

பறவைகளைக் காண்பதால்...வெற்றிநடை போடும் தமிழகம்

பறவைகளை தொடர்ந்து பார்த்துவந்தால் மன அழுத்தம் குறையும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

நமது இன்றைய உலகம் மிக இறுக்கமான சூழலில் சுழன்று கொண்டிருக்கிறது. உயரதிகாரிகளின் நெருக்கடி, நீண்டநேர பணிச் சுமை, குடும்பச் சூழ்நிலை, பள்ளிப் படிப்பு என அனைத்து நிலைகளிலும் மனிதர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. இதுதவிர, பணமும் இன்றைய ஆடம்பர வாழ்க்கைச் சூழலும்கூட மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால் சிலசமயம், என்ன செய்வதென்றே தெரியாமல் சிலர் தற்கொலைக்கு முயற்சி செய்கிறார்கள்.

இத்தகைய மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக ஒவ்வொருவரும் முயற்சி செய்கின்றனர். இதற்காக தியானம், யோகா போன்றவற்றில் மனதை ஈடுபடுத்துவது, ஆழமாக மூச்சை இழுத்துவிடும் மூச்சுப் பயிற்சியைச் செய்வது போன்ற மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிமுறைகளில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில், பறவைகளைக் காண்பதால் மன அழுத்தம் குறையும் என்று இங்கிலாந்தைச் சேர்ந்த எக்சிடர் பல்கலைக்கழகம், பிரிட்டிஷ் பறவைகள் அறக்கட்டளை மற்றும் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

பறவைகளைத் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு மன அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு ஆகியவை குறைவாக இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுதவிர, வசிக்கும் வீட்டைச் சுற்றி புதர்கள், மரங்கள் ஆகியவை இருப்பதும் மனிதர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் நகரங்களில் வாழும் மக்களைவிட இயற்கை வளங்களோடு இணைந்து வாழும் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்று, எக்சிடர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டேனியல் காக்ஸ் என்பவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதிகரித்துவரும் செல்போன் டவர்கள், காடுகளை அழித்தல், இறைச்சிக்காக பறவைகளை வேட்டையாடுதல் போன்ற காரணங்களால் பறவையினங்கள் அதிகளவில் அழிக்கப்பட்டு வருவது கவலையளிப்பதாகும்.

திங்கள், 27 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon