இந்தியாவில் கோடீஸ்வரர்கள் அதிகம் வாழும் நகரங்களை பட்டியலிடும் ஆய்வு ஒன்று சமீபத்தில் நடைபெற்றது. சுமார் 6.60 கோடி அல்லது அதற்கு அதிகமான சொத்து மதிப்பு கொண்ட பணக்காரர்களின் எண்ணிக்கை அடிப்படையில் இந்த நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
இப்பட்டியலில் இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பை முதலிடத்தில் உள்ளது. இங்கு சுமார் 28 மெகா கோடீஸ்வரர்களும், 46,000 பெரும் பணக்காரர்களும் உள்ளனர். இவர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு (82,000 கோடி டாலர்) சுமார் ரூ.54 லட்சம் கோடி. 18 மெகா கோடீஸ்வரர்கள் மற்றும் 23,000 பெரும் பணக்காரர்களுடன் மொத்த சொத்து மதிப்பு 45,000 கோடி டாலருடன் டெல்லி இரண்டாம் இடத்தில் உள்ளது.
அதற்கு அடுத்தபடியாக பெங்களூரு மூன்றாமிடத்திலும், ஹைதராபாத் நான்காம் இடத்திலும், கொல்கத்தா ஐந்தாம் இடத்திலும் உள்ளன. சென்னை நகரம் 6,600 பெரும் பணக்காரர்கள் மற்றும் 4 மெகா கோடீஸ்வரர்களுடன், ஒட்டுமொத்த சொத்து மதிப்பாக 15,000 கோடி டாலரை கொண்டு, ஏழாவது இடத்தில் உள்ளது. சென்னையில் போயஸ் கார்டன், போட் கிளப் ரோடு ஆகிய பகுதிகளில் மெகா கோடீஸ்வரர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்று ஆய்வு கூறுகிறது.
இந்தியாவில் தற்போது மொத்தம் 2.64 லட்சம் பெரும் பணக்காரர்களும், 95 மெகா கோடீஸ்வரர்களும் உள்ளனர். 2016 டிசம்பர் நிலவரப்படி, ஒட்டுமொத்த அளவில் இவர்களுடைய சொத்துமதிப்பு 6.2 லட்சம் கோடி டாலராக உள்ளது.