மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 9 ஆக 2020

மாவட்ட செயலாளர்களுடன் தினகரன்!

மாவட்ட செயலாளர்களுடன் தினகரன்!

அதிமுக மாவட்டச் செயலாளர்களுக்கு திடீர் அழைப்புவிடுத்துள்ளார் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன். அதிமுக-வின் துணை பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரன் பொறுப்பேற்ற பிறகு கட்சிக்குள் கூடுதல் சலசலப்பு எழுந்துள்ளதாகத் தெரிகிறது என்று கூறப்படுகிறது. இந்நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கும் தன் பங்கிற்கு தினகரனை விமர்சனம் செய்துள்ளார். “தினகரன் தலைமையை ஏற்க முடியாது. அவர் தலைமையை அதிமுக-வினர் ஏற்க மாட்டார்கள். ஜெயலலிதா அவர்களால் முதல்வராக அடையாளம் காட்டப்பட்ட ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் கட்சிக்குத் திரும்ப வேண்டும். தலைமை ஏற்க வேண்டும்” என்று வெளிப்படையாகக் கூறியிருக்கிறார். இதனால் ஓ.பன்னீர்செல்வத்திற்கு வலுச்சேர்த்துவிடுமோ என்ற அச்சம் சசிகலா தரப்பிற்கு எழுந்துள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில்தான், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் இன்று சென்னைக்கு வரவேண்டும் என்று திடீரென அழைக்கப்பட்டுள்ளனர். கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் முக்கிய ஆலோசனை நடைபெறும் என்று தெரிகிறது. அதிமுக-வின் சட்டவிதிகளின்படி, தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று சொல்லி தேர்தல் ஆணையத்திடம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு மீது உரிய பதிலை பிப். 28ஆம் தேதிக்குள் (செவ்வாய்க்கிழமை) அளிக்க சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் கடந்த 17ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது. தேர்தல் ஆணையத்திற்கு பதில் அளிப்பதற்கான வேலையில் தற்போது டி.டி.வி.தினகரன் ஈடுபட்டுள்ளார். சட்ட வல்லுநர்களுடனும் ஆலோசனை நடத்தி வருகிறார். எனவே, இன்றைக்குள் தேர்தல் ஆணையத்திற்கு அளிக்க வேண்டிய பதிலை தயார் செய்து, அதில் சசிகலாவின் கையெழுத்தை பெறுவதற்காக இன்று மாலை டி.டி.வி.தினகரன் பெங்களூரு செல்வார் என்று கூறப்படுகிறது.

இதற்கான வேலை ஒருபுறம் நடந்தாலும், மற்றொருபுறம் அதிமுக-வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு நிர்வாகிகள் செல்வதை தடுக்கும் முயற்சியும் நடந்து வருகிறது. இதற்கிடையே, நேற்று முதல் அதிமுக நிர்வாகிகளை மாவட்டவாரியாக ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து வருகிறார். இந்நிலையில், அதிமுக மாவட்டச் செயலாளர்களை இன்று சென்னைக்கு வருமாறு திடீரென அழைக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலானவர்கள் இன்று சென்னை வருவார்கள் என்று தெரிகிறது. திடீர் அழைப்புக்கான காரணம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை என தகவல் தெரிவிக்கின்றன. மாவட்டச் செயலாளர்கள் சந்திப்பு போயஸ் கார்டன் இல்லத்திலேயே டி.டி.வி.தினகரன் தலைமையில் நடக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

திங்கள், 27 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon