மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 24 ஜன 2021

ஆஸ்கர் விருதுப் பட்டியல்!

ஆஸ்கர் விருதுப் பட்டியல்!வெற்றிநடை போடும் தமிழகம்

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா பிரம்மாண்டமாய் நடைபெற்றது. லா லா லேண்ட், லயன், மான்செஸ்டர் பை தி சீ, மூன்லைட், அரெய்வல், ஃபென்சஸ், ஹாக்சா ரிட்ஜ் படங்கள் மீது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

ஆஸ்கர் விருது வென்ற படங்களின் பட்டியலை பார்த்து உங்களது கணிப்பு சரியாக இருக்கிறதா என்பதை பாருங்கள்.

சிறந்த படம்:

சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதினை மூன்லைட் திரைப்படம் வென்றுள்ளது. பேரி ஜென்கிங்ஸ் இயக்கியுள்ள இந்த படம் ‘இன் மூன் லைட் பிளேக் பாய்ஸ் லுக் ப்ளூ’ என்ற நாடகத்தை தழுவி எடுக்கப்பட்டது.

சிறந்த இயக்குநர்:

லா லா லேண்ட் படத்தை இயக்கிய டேமியன் சாஜெல்லே வென்றுள்ளார். லா லா லேண்ட்’ என்பது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தை அமெரிக்கர்கள் செல்லமாக அழைக்கும் பெயர். ரயன் கோஸ்லிங், எம்மா ஸ்டோன் நடிப்பில் வெளியான லா லா லேண்ட் கோல்டன் குளோப் விருது விழாவில் 7 விருதுகளை பெற்று புதிய சாதனை படைத்த படம். காதலை இசையால் உணர்த்தும் விதமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

சிறந்த நடிகர்:

மான்செஸ்டர் பை தி சீ படத்தில் நடித்த கேஸி அஃப்லெக் வென்றுள்ளார். 1988ம் ஆண்டிலிருந்து நடித்து வரும் இவர் ஏற்கனவே குளோடன் குளோப் உட்பட ஏராளமான விருதுகளை வென்றுள்ளார்.

சிறந்த நடிகை:

லா லா லேண்ட் படத்தில் நடித்த எம்மா ஸ்டோன் இந்த விருதை வென்றுள்ளார். 2015ம் ஆண்டு உலகின் அதிகமாக சம்பளம் வாங்க்லும் நடிகையாக வலம் வந்த இவர் 2014ம் ஆண்டில் Birdman படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டார். அப்போது தவறிய ஆஸ்கர் விருது லா லா லேண்ட் படத்துக்காக சிறந்த நடிகை பிரிவில் இப்போது கிடைத்துள்ளது.

சிறந்த திரைக்கதை:

மான்செஸ்டர் பை தி சீ படத்துக்காக கென்னெத் லோனர்கன் வென்றார். அமெரிக்க நாடக ஆசிரியரும் திரைக்கதை ஆசிரியருமான கென்னத் லோனர்கன் இந்த படத்தை திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார்.

சிறந்த தழுவல் திரைக்கதை:

மூன்லைட் படத்துக்காக பேரி ஜென்னிங்ஸ் இந்த விருதை வென்றுள்ளார். மெடிசின் ஃபார் மெலன்கலி மற்றும் மூன் லைட் ஆகிய இரு படங்களை மட்டுமே இயக்கியுள்ளார். மூன்லைட் படம் இந்த ஆஸ்கர் விழாவில் 8 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டது.

சிறந்த ஒளிப்பதிவாளர்

லா லா லேண்ட் படத்துக்காக இந்த விருதை வென்றுள்ள லினஸ் ஸாண்ட்ரென் 2000 வது ஆண்டிலிருந்து தொடர்ந்து ஒளிப்பதிவு செய்து பல விருதுகளை வென்றிருந்தாலும் ஆஸ்கர் விருது வெல்வது இதுவே முதல் முறை.

சிறந்த பின்னனி இசை

இந்த விருதை ரொமேண்டிக் மியூசிக்கல் வகையைச் சேர்ந்த லா லா லேண்ட் படத்திற்கு இசையமைத்த ஜஸ்டின் ஹர்விட்ஸ் வென்றுள்ளார். இந்த படம் இவருக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்றுத்தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பு வடிவமைப்பு

பல்வேறு எதிர்பார்ப்புகளை கிளப்பிய லா லா லேண்ட் படமே தயாரிப்பு வடிவமைப்புக்கான விருதையும் வென்றது. இந்த விருதை டேவிட் வாஸ்கோ மற்றும் சாண்டி ரெனால்ட்ஸ் வென்றனர்.

சிறந்த பாடல்

லா லா லேண்ட் படத்தில் இடம்பெற்ற ‘சிட்டி ஆஃப் ஸ்டார்ஸ்’ பாடலுக்காக ஜஸ்டின் ஹர்விட்ஸ் இந்த விருதை பெற்றுள்ளார்.

சிறந்த எடிட்டிங்:

சிறந்த எடிட்டிங்கிற்கான ஆஸ்கர் விருது வரலாற்று போர்த் திரைப்படமான ‘Hacksaw Ridge’ படத்திற்கு கிடைத்துள்ளது. இந்த படத்தின் படத்தொகுப்பாளர் ஜான் கில்பர்ட் இந்த விருதை பெற்றார்.

சிறந்த சவுண்ட் மிக்ஸிங்:

சிறந்த சவுண்ட் மிக்ஸிங்கிற்கான ஆஸ்கர் விருதையும் ஹாக்ஸா ரிட்ஜ் (Hacksaw Ridge) படமே வென்றுள்ளது. கெவின் ஓ கானெல், ஆண்டி ரைட் ஆகியோர் இந்த விருதை பெற்றுக் கொண்டனர்.

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்:

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸுக்கான ஆஸ்கர் விருதை ‘The Jungle Book’ படம் வென்றுள்ளது. பேண்டஸி திரைப்படமான இதை ஜான் ஃபேரூ இயக்கியுள்ளார். ராபர்ட் லெகட்டோ இந்த விருதை பெற்றார்.

சிறந்த அனிமேஷன் படம்:

சிறந்த அனிமேஷன் படத்துக்கான விருதை Zootopia வென்றுள்ளது. இந்த விருதை பைரன் ஹோவார்ட், ரிச் மூரே மற்றும் க்ளார்க் ஸ்பென்சர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இந்தத் திரைப்படத்தில், விலங்குகளின் மாநகரமான Zootopia-வில் நடக்கும் சேட்டைகள் படம் முழுக்க ரசிக்கவைக்கும் விதத்தில் அமைந்துள்ளன.

சிறந்த அனிமேஷன் குறும்படம்:

சிறந்த அனிமேஷன் குறும்படத்துக்கான ஆஸ்கர் விருதை ’Piper’ படம் வென்றது. இந்த படத்தை பற்றி நமது மின்னம்பலம் இணையதளத்தில் குறும்படம் பகுதியில் உயிர் வாழ்வதற்கு துணிவு தேவை – பைபர்! என்று நவம்பர் மாதம் பதிவிட்டிருந்தோம்.

சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம்:

சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது, ஈரானின் ‘The Salesman’ படத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரான் நாட்டவருக்குத் தடை விதித்துள்ளதால், ‘தி சேல்ஸ்மேன், பட இயக்குநரான அஸ்கார் ஃபர்காதி, விருதைப் பெறவில்லை.

சிறந்த துணை நடிகை:

சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை,' ஃபென்செஸ்' (Fences) படத்தில் நடித்த வயோலா டேவிஸ் வென்றுள்ளார்.

சிறந்த ஆடை வடிவமைப்பாளர் விருது:

சிறந்த ஆடை வடிவமைப்பாளர் விருதை, 'Fantastic Beasts and Where to Find Them' படத்துக்காக கொலின் அட்வுட் பெற்றுக்கொண்டார்.

சிறந்த ஒப்பனைக் கலைஞர்:

சிறந்த ஒப்பனைக் கலைஞருக்கான விருது, ‘Suicide Squad’ படத்துக்காக கேட் மெக்கென்னன் மற்றும் ஜேசன் பேட்மேன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த துணை நடிகர்:

சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது, 'மூன்லைட்' படத்தில் நடித்த மஹேர்ஷலா அலி-க்கு (Mahershala Ali) வழங்கப்பட்டது. 'மூன்லைட்' திரைப்படத்தில் சிறந்த தந்தையாக மஹேர் நடித்துள்ளார். மேலும், ஆஸ்கர் விருது பெறும் முதல் இஸ்லாமிய நடிகர், மஹேர்ஷலா என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சிறந்த முழுநீள ஆவணப்படம்:

ஓ.ஜே.மேட் இன் அமெரிக்கா படத்துக்காக எஸ்ரா எடில்மேன், கரோலின் வாட்டர்லோ ஆகியோர் வென்றுள்ளனர். அமெரிக்க கால்பந்து என்றழைக்கப்படும் ரக்பி (rugby) விளையாட்டின் சிறந்த வீரர் ஓ.ஜே.சிம்ஸனின் வாழ்க்கை நிகழ்வுகளை ஆவணப்படுத்தியிருக்கும் இந்த படத்தை பற்றி கடந்த மாதம் நமது மின்னம்பலம் இணையதளத்தில் ஆஸ்கர் ஆவணப்படம்: திசைமாறும் மனித வாழ்க்கை! என்ற தலைப்பில் பதிவிட்டிருந்தோம்.

சிறந்த ஆவணக் குறும்படம்:

இந்த விருது ஒயிட் ஹெல்மெட்ஸ் படத்துக்காக ஒர்லாண்டோ என்சிடீல் மற்றும் ஜோயன்னா நடாசீகராவுக்கு வழங்கப்பட்டது. பிரிட்டிஷ் படமான இது சிரியப் போரின் மீட்புக் குழுவில் ஈடுபடும் தன்னார்வலர்களைப் பற்றியது.

சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படம்:

இந்த விருது சிங் குறும்படம் வென்றுள்ளது. Kristóf Deák இந்த விருதை பெற்றுக்கொண்டார்.

கௌரவ ஆஸ்கர் விருது:

1960ம் ஆண்டிலிருந்து திரையுலகில் வலம் வரும் ஜாக்கிசானுக்கு கௌரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. சுமார் 200 படங்களுக்கு மேல் பணிபுரிந்துள்ள ஜாக்கிசான் பெரும் முதல் ஆஸ்கர் விருது இதுவாகும்.

திங்கள், 27 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon